முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு அழைப்பு விடுத்த உக்ரைன்
18 மாசி 2024 ஞாயிறு 08:36 | பார்வைகள் : 2134
கிழக்கு உக்ரைனில் அமைந்துள்ள Avdiivka பகுதியில் இருந்து வெளியேறுவதாக உக்ரைன் ராணுவம் அறிவித்துள்ளது.
குறித்த தகவலை சனிக்கிழமை ராணூவத் தளபதி தெரிவித்துள்ளார்.
முற்றுகையிடப்பட்ட இந்த நகரமானது பல மாதங்களாக ரஷ்யாவின் தாக்குதல் முயற்சிகளின் மையப் புள்ளியாக இருந்து வருகிறது.
தற்போது போரின் இரண்டாவது ஆண்டு வெற்றிவிழாவினைக் கொண்டாடவிருக்கும் ரஷ்யாவுக்கு இது ஊக்கமாக அமையும் என்றே கூறப்படுகிறது.
Avdiivka பகுதியில் இருந்து வெளியேறுவது தங்கள் ராணுவ வீரர்களின் நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு என உக்ரைன் தளபதி அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், எங்கள் வீரர்கள் தங்கள் இராணுவக் கடமையை கண்ணியத்துடன் நிறைவேற்றினர் என்றும், சிறந்த ரஷ்ய இராணுவப் பிரிவுகளை அழிக்க முடிந்த அனைத்தையும் செய்தனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, உரிய ஆயுதங்கள் இன்றி ரஷ்ய ராணுவத்தை எதிர்கொள்வது கடினம் என்று உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி மேற்கத்திய நாடுகளை எச்சரித்துள்ளார்.
மேலும், போர்க்களத்தில் நேரிடையாக முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியை அழைத்துச் செல்ல ஆசைப்படுவதாகவும் ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைனுக்கு நிதி அளிப்பது தொடர்பில் டொனால்டு ட்ரம்ப் தமது எதிர்ப்பை தொடர்ந்து முன்வைத்து வருகிறார்.
இந்நிலையிலேயே உண்மையான போர் என்பது எப்படி இருக்கும் என்பதை டொனால்டு ட்ரம்ப் நேரிடையாக பார்க்க வேண்டும் என்று ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.