ஊழல், வாரிசு அரசியலை ஒழித்து கட்டிய பிரதமர் மோடி: அமித்ஷா பேச்சு
18 மாசி 2024 ஞாயிறு 14:03 | பார்வைகள் : 1736
ஊழல், வாரிசு அரசியலை ஒழித்து நாட்டை வளர்ச்சிப்பாதைக்கு பிரதமர் மோடி கொண்டு சென்றுள்ளார் என பா.ஜ., தேசியக்குழு கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பேசுகையில் குறிப்பிட்டார்.
10 ஆண்டு கால வளர்ச்சி
டில்லியில் நடந்த கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது:
மோடியை மீண்டும் பிரதமர் ஆக்க மக்கள் முடிவு செய்துவிட்டனர். அதில், எந்தவித சந்தேகமும் இல்லை. நாடு சுதந்திரம் அடைந்த 75 ஆண்டுகளில், 17 லோக்சபா தேர்தல்கள், 22 மத்திய அரசுகள், 15 பிரதமர்களை பார்த்து உள்ளோம். ஒவ்வொரு அரசும், தங்களது காலத்தில் வளர்ச்சியை கொண்டு வர முயற்சி செய்தன.
ஆனால், பிரதமர் மோடியின் 10 ஆண்டு கால ஆட்சியில் தான் ஒட்டு மொத்த வளர்ச்சி, ஒவ்வொரு துறையின் வளர்ச்சி, தனி நபர் மேம்பாடு ஆகியவை நடந்தன என எந்தவித குழப்பமும் இல்லாமல் சொல்ல முடியும்.
மோடியின் 3வது ஆட்சியில், பயங்கரவாதம், பிரிவினைவாதம், நக்சலைட் ஆகிய பிரச்னைகளில் இருந்து நாடு விடுதலை பெற்று, அமைதியான மற்றும் வளர்ச்சியடைந்த இந்தியா என்பதை நோக்கி நகரும்.
மகாபாரத யுத்தம்
லோக்சபா தேர்தல் மகாபாரத யுத்தம் போன்றது. பிரதமர் மோடி தலைமையில் ஒரு அணி உள்ளது. ஊழல் மற்றும் சமரச அரசியலுக்கு பெயர் போன குடும்பத்தினர் நடத்தும் கட்சிகளை காங்கிரஸ் வழிநடத்துகிறது.
ஆனால், சமரச அரசியல், ஊழல், ஜாதி மற்றும் வாரிசு அரசியல் ஆகியவற்றை ஒழித்து நாட்டை வளர்ச்சி பாதைக்கு மோடி மாற்றினார். இனிமேல், வாரிசு மற்றும் சமரச அரசியலுக்கு இடமில்லை.
சமரச அரசியல்
காங்கிரஸ் மற்றும் ‛ இண்டியா ' கூட்டணி கட்சிகள், நாட்டின் ஜனநாயகத்தின் ஆன்மாவை அழித்து வருகின்றன. அவர்கள், நாட்டின் ஜனநாயகத்தை ஊழல், வாரிசு அரசியல், சமரச அரசியல், ஜாதி என்ற வர்ணத்தை தீட்டினர்.
காங்கிரஸ் சமரச அரசியலில் ஈடுபட்டது. இதனால் தான் கடவுள் ராமரையும் ஏற்காத அந்தக்கட்சி கும்பாபிஷேகத்திலும் கலந்து கொள்ளவில்லை. ராமர் கோயில், நீதிமன்ற உத்தரவுப்படி சட்டப்பூர்வமாக கட்டப்பட்டது.
டீ விற்பவரின் மகன் நாட்டின் பிரதமர்
7 தலைமுறையை சேர்ந்த குடும்ப கட்சிகளின் கூட்டணியே ‛ இண்டியா ' கூட்டணி. அரசியலில் அவர்களின் நோக்கம் என்ன? நாட்டை சுயசார்பு நாடாக மாற்றுவதே பிரதமரின் குறிக்கோள்.
ஏழைகள், நாட்டின் வளர்ச்சி பற்றி மோடி சிந்திக்கிறார். ஆனால், ராகுலை பிரதமர் ஆக்குவதே சோனியாவின் குறிக்கோள். பவார் தனது மகளையும், மம்தா தனது உறவினரையும், ஸ்டாலின் மற்றும் உத்தவ் தாக்கரே தங்களது மகன்களையும் முதல்வர் பதவியில் அமர்த்துவதை லட்சியமாக கொண்டுள்ளனர்.
முலாயம் தனது மகனை முதல்வர் பதவியில் அமர வைத்துவிட்டார்.
குடும்பத்திற்காக அதிகாரத்தை பெற விரும்புபவர்கள், ஏழைகளின் நலனை பற்றி சிந்திப்பார்களா? சொந்த கட்சியில் ஜனநாயகத்தை பாதுகாக்காதவர்கள நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்க முடியாது.
லாலு முதல் சோரன் வரை, 'இண்டியா' கூட்டணி தலைவர்கள் ஊழலில் திளைத்தனர். பாஜ.,வில் குடும்ப அரசியல் இருந்திருந்தால், டீ விற்பவரின் மகன் நாட்டின் பிரதமர் பதவியில் அமர்ந்திருக்க முடியாது. இவ்வாறு அமித்ஷா பேசினார்.