உக்ரைன் ஜனாதிபதிக்கு நம்பிக்கை அளிக்கும் - அமெரிக்கா
18 மாசி 2024 ஞாயிறு 15:07 | பார்வைகள் : 2967
2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம், ரஷ்யா "சிறப்பு ராணுவ நடவடிக்கை" எனும் பெயரில், தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்கிரமித்தது.
இதனை எதிர்த்து, அமெரிக்கா மற்றும் பல மேற்கத்திய நாடுகளின் உதவியுடன், உக்ரைன் போரிட்டு வருகிறது.
பல உலக நாடுகள் மற்றும் ஐ.நா. சபை உள்ளிட்ட அமைப்புகளின் போர் நிறுத்த கோரிக்கைகளை ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் புறக்கணித்து விட்டார்.
இந்நிலையில், உக்ரைனுக்கு பொருளாதார மற்றும் ராணுவ உதவியை பெருமளவு வழங்கி வந்த அமெரிக்காவில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
உக்ரைனுக்கு தொடர்ந்து நிதியுதவி அளிப்பதற்கு அந்நாட்டின் பாராளுமன்றம் ஒப்புதல் தரவில்லை.
இப்பின்னணியில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (Joe Biden), டெலாவேர் (Delaware) மாநில தேவாலய கூட்டத்தை முடித்து வரும் போது உக்ரைன் விவகாரம் குறித்து பேட்டியளித்தார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது:
நான் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியுடன் (Volodymyr Zelensky) தொலைபேசியில் உரையாடினேன். உக்ரைனுக்கு தேவைப்படும் நிதியை வழங்க வழி ஏற்படுத்தப்படும் என அவருக்கு நம்பிக்கை தெரிவித்தேன்.
அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் உக்ரைன் ராணுவத்திற்கு உதவிட மறுப்பது அறிவற்ற செயல் மட்டுமல்ல நியாயம் இல்லாததும் கூட.
நான் இதற்காக உறுப்பினர்களோடு போராடி, உக்ரைனுக்கு தேவைப்படும் தளவாடங்கள் கிடைக்க வழிவகை செய்வேன்.
அமெரிக்க உதவி இல்லாவிட்டால், உக்ரைன் மேலும் பல பிராந்தியங்களை ரஷியா வசம் இழக்க நேரிடும் என்பதை நாம் நினவில் கொள்ள வேண்டும்.
இவ்வாறு பைடன் கூறினார்.
முன்னதாக, உக்ரைனுக்கான ராணுவ உதவி குறித்து விவாதிக்காமல் இரண்டு வாரங்கள் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டதற்கு பைடன் கண்டனம் தெரிவித்திருந்தார்.
போர் தொடங்கிய காலகட்டத்திலிருந்து மனிதாபிமான உதவி, நிதியுதவி மற்றும் ராணுவ உதவி எனும் வகையில் $75 பில்லியனுக்கும் மேல் உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கியுள்ளது.