அதிகரிக்கும் குடியுரிமை இரத்தும் நாடுகடத்தலும்!!
19 மாசி 2024 திங்கள் 08:25 | பார்வைகள் : 5099
தீவிர இஸ்லாமியவாதம், மற்றும் நாட்டிற்கான தாக்குதல் அபாயம், என குடியுரிமைப் பறிப்பும், நாடு கடத்தல்களும் 2023 ஆம் ஆண்டில் அதிகரித்துள்ளதாகப் பிரான்சின் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் தர்மனமன் தெரிவித்துள்ளார்.
2022 ஆம் ஆண்டைவிட, நாடுகடத்தப்பட்டவர்கள் எண்ணிக்கை 2023 இல் 26சதவீதம் அதிகரித்துள்ளது. 2023 இல் 44 பேர் நாடுகடத்தப்பட்டுள்ளதாகவும் இவர் தெரிவித்துள்ளார்.
இதில் பிரெஞ்சுக் குடியுரிமை பெற்றவர்களும், குடியுரிமை பறிக்கப்பட்டு நாடுகடத்தப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிரான்சின் தேசிய உள்ளகப் புலனாய்வின் பொதுத் தலைமையகமான DGSI ( Direction générale de la sécurité intérieure) மற்றும் அதன் நட்பு நாட்டுப் புலனாய்வு நிறுவனங்களின் தகவல்களின் அடிப்படையிலுமே, இந்த நாடுகடத்தல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நாடுகடத்தப்பட்டவர்கள், எந்த நாட்டினர் என்று அதிகாரபூர்வத் தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படாவிட்டாலும், புலனாய்வு ஊடகவியலின் தகவலின் படி, இதில் முக்கியமாக ஜிகாதித் தொடர்புள்ள ஆப்கானிஸ்தான் மற்றும் ஆப்கானோ பாக்கிஸ்தான் பிரஜைகளும், மற்றும் சிறைத்தண்டனை முடிந்து, ஜிகாதிப் பயங்கரவாதத் தாக்குதல் நடாத்தும் அபாயமுள்ளவர்களும் நாடுகடத்தப்பட்டுள்ளார்கள்.
இந்த நடவடிக்கை மேலும் இறுக்கமாக, 2024 இலும் தொடரும் என உள்துறை அமைச்சர் எச்சரித்துள்ளார்.