5ஆவது வருடத்தை நோக்கி நகரும் “நீதிக்கான ஏக்கம்”
20 மாசி 2024 செவ்வாய் 09:40 | பார்வைகள் : 2098
“திடீரென சத்தமொன்று கேட்டது. ஒரு கணம் என்ன நடந்தது என்றே தெரியவில்லை. நான் கண்ணை திறந்து பார்த்தபோது, எனக்கு அருகில் காயமடைந்து விழுந்த எனது தம்பியை அங்கிருந்தவர்கள் முச்சக்கரவண்டியில் ஏற்றியதை பார்த்தேன். பின்னர் என தம்பி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உள்ளதை இரண்டு நாட்களுக்கு பின்னரே என்னால் அறிந்துகொள்ள முடிந்தது. இரண்டு நாட்களாக தம்பியை பற்றி எந்த தகவலும் இல்லை” இவ்வாறு தனது கதையை பகிர்ந்து கொள்கிறார் கட்டுவாப்பிட்டிவில் வசிக்கும் 22 வயதான தினுக்கி கௌசல்யா.
2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய தேவாயத்துக்கு வழமைபோலவே தனது தம்பியான சயூரு சத்சரவுடன் சென்ற தினுக்கி கௌசல்யா, வழிபாடுகளில் ஈடுபட்டு உள்ளார். திருப்பலின் நிறைவில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் நிகழ்ந்த அந்த அசம்பாவிதம் இன்று தினுக்கி கௌசல்யாவின் வாழ்க்கையை அப்படியே புரட்டி போட்டு விட்டது.
சிறுவயதிலேயே தாய் கைவிட்டு சென்ற நிலையில், தனது தந்தை, தம்பி மற்றும் தந்தையின் தாயுடன் , வசித்து வருகிறார் இந்த தினுக்கி கௌசல்யா. தந்தை கூலி வேலை செய்பவர், தந்தையின் தாய் நீண்டகால நோயினால் பாதிக்கப்பட்டவர். இந்த நிலையில் அவர்களுடன் தனது தம்பியை பராமரிக்கும் முழு பொறுப்பும் இப்போது அந்த தினுக்கி கௌசல்யாவிடமே இருக்கின்றது.
தனது தம்பியை கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக சாதாரண தரத்துடன் தனது படிப்பினை நிறுத்த வேண்டிய நிலைக்கு தான் ஆளானதாக தெரிவிக்கும் தினுக்கி கௌசல்யா, தனது தம்பி முழுமையாக குணமடைய வேண்டும் என்ற ஆசையுடன், தொடர்ந்து வறுமையுடன் போராடி வருகின்றார்.
அப்போது 9 வயதான சிறுவனாக, அக்காவுடன் மகிழ்ச்சியாக தேவாலயத்துக்கு சென்ற சயூரு சத்சர, தனது தலையில் ஈய உருண்டைகளை சுமந்த வண்ணம் சுமார் ஒன்றரை மாதங்களுக்கு பின்னரே வீடு திரும்ப நேரிட்டுள்ளது. நான்கு வருடங்கள் கடந்தும் இன்றும் மாதம் ஒரு முறை கொழும்புக்கு சென்று மருத்துவம் பார்க்க வேண்டிய நிலையில், தனது ஒரு கை கால்கள் சீராக செயற்படாததால், உடை மாற்றுவதற்கும் கழிவறைக்கு செல்வதற்கும் கூட இன்று மற்றவர்களின் உதவியை நாட வேண்டிய நிலையில் சயூரு சத்சரவின் நாட்கள் நகருக்கின்றன.
“குண்டு தாக்குதலில் காயமடைந்த பின்னர் சுமார் ஒன்றரை மாதங்கள் சத்சரவை வைத்தியசாலையில் வைத்திருந்தார்கள். பின்னர் சில மாதங்கள் கழித்து மற்றுமொரு சத்திர சிகிச்சைக்காக மீண்டும் ஒன்றரை மாதங்கள் வைத்தியசாலையில தங்கியிருந்து சிகிச்சை பெற்றோம்” என கூறும் தினுக்கி கௌசல்யா, தற்போதும் மாதாந்தம் கொழும்புக்கு கிளினிக் சென்று வர 10ஆயிரம் ரூபாய்க்கும் அதிக பணம் தேவை என்றும் கூறுகின்றார். பணம் கிடைக்காத சந்தர்ப்பங்களில் அவர்களால் கிளினிக் செல்ல முடிவதில்லை.
“இந்த பிள்ளையின் எதிர்காலத்தை நினைத்தால் எனக்கும் அச்சமாகவும் அழுகையாகவும் வருகிறது. எங்கள் காலத்துக்கு பின்னர் தனது தம்பியுடன் இவள் எப்படி வாழ்க்கையை சமாளிக்க போகிறாள்... கடவுளே இந்த பிள்ளைக்கு நீதான் ஒரு வழியை காட்ட வேண்டும்” - இவ்வாறு தனது மன வேதனை அங்கலாய்ப்பாக வெளிப்படுத்துகின்றார் தினுக்கி கௌசல்யாவின் 68 வயது பாட்டி .
குண்டு தாக்குதலுக்கு பின்னர் தேவாலயத்தினால் அமைத்துக்கொடுக்கப்பட்ட வீட்டில் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார் தினுக்கி கௌசல்யா. குண்டு தாக்குதலில் காயமடைந்த அக்கா மற்றும் தம்பிக்கு ஆரம்பத்தில் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட சிறிதளவான கொடுப்பனவுக்கு பின்னர் இதுவரை எந்தவிதமான உதவிகளும் கிடைக்கவில்லை என்று அந்தக் குடுப்பத்தினர் கூறுகின்றனர்.
தாக்குதலுக்கு உள்ளாகி 4 வருடங்கள் கடந்திருந்தாலும் அந்த சிறுவனின் கண்களில் உள்ள அச்சம் மற்றும் இறுக்கம் இதுவரை நீங்கவில்லை. புதியவர்களை கண்டால் சயூரு சத்சரவின் கண்களில் மிரட்சிதான் மிஞ்சுகின்றது.
கட்டுவாப்பிட்டிய தேவாயத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்ட சுமார் 15 குடும்பத்தினர், அங்கு அமைக்கப்பட்டுள்ள குடியிருப்பு தொகுதியில், தங்கள் இழத்த சொந்தங்களை நினைத்துக்கொண்டு வேதனையுடன் வாழ்ந்து வருகின்றனர். அந்த குடியிருப்பு தொகுதியை பார்க்கும்போது ஏப்ரல் குண்டுத் தாக்குதலில் கொடூரத்தை இன்றும் நினைவுப்படுத்துவதாக உள்ளது.
5 ஆண்டுகள் நிறைவை நோக்கி
ஏப்ரல் 21, 2019 அன்று முழு நாட்டையும் உலுக்கிய ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத குண்டுவெடிப்புகளின் 5ஆவது ஆண்டு நிறைவை இலங்கை நினைவுகூற இன்னும் சில மாதங்களே உள்ளது. இருந்தும் இதில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் இன்னும் அந்த நினைவுகளில் இருந்து மீளவில்லை.
கொழும்பு, நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பில் உள்ள தேவாலயங்களில் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த தொடர் குண்டுவெடிப்புகளில் கிட்டத்தட்ட 300 பேர் இறந்ததுடன், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.
2029ஆம் ஆண்டுடன் முடிவுக்கு வந்த இலங்கையின் இரத்தம் தோய்ந்த உள்நாட்டுப் போருக்குப் பின்னர், ஒரு தசாப்த காலமாக இலங்கை அனுபவித்த அமைதியை, நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட மற்றும் பாதிக்கப்பட்ட ஏப்ரல் 21 தாக்குதல் உலுக்கியது.
இந்த தாக்குல் இடம்பெற்று 5ஆவது வருடத்தை அண்மித்துள்ள போதும், இலங்கையின் கத்தோலிக்க திருச்சபை, குறிப்பாக கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, வத்திக்கான் மற்றும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை உட்பட உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் இந்த சம்பவம் தொடர்பாக இலங்கை அதிகாரிகளின் மெதுவான விசாரணைகள் குறித்து கவலையை எழுப்பி வருகின்றார்.
“எங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. எமக்கு தம்மால் இயன்றவரை நீதி வழங்கியுள்ளதாக அதிகாரத்தில் உள்ளவர்கள் கூறுகின்றனர். ஆனால் அது அவ்வாறு இல்லை. நாம் தொடர்ந்தும் நீதி கோரவில்லையென்றால் இந்த நாட்டில் உள்ள வேறு சில மதத்தினருக்கு எதிரான மீண்டும் இவ்வாறான விடயமொன்று இடம்பெறலாம். இந்த சம்பவத்துக்கு பயங்கரவாதிகளே காரணம் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் அவர்களுக்குப் பின்னால் மறைந்திருந்த கையொன்று இருக்கின்றது. இது ஒரு சதி வேலையாகும்.” என்கிறார் கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்டியன் தேவாலயத்தின் திருத்தந்தை மஞ்சுள செபஸ்டியன்.
“விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை எங்களிடம் கொடுத்துள்ளனர். ஆனால் நாங்கள் பெற்ற அறிக்கை தொடர்பான கேள்விகள் எங்களிடம் உள்ளன, அந்த கேள்விகளை நாங்கள் அரசாங்கத்திடம் சமர்ப்பித்துள்ளோம். மேலும் என்ன நடந்தது என்பதனை புரிந்து கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது. தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுடன் நான் வாழ்ந்து வருகிறேன். வெளியில் இருப்பவர்களால் அவர்களின் நிலைமை எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதை நினைத்துக்கூட பார்க்க முடியாது.”
“முழுமையாக ஊனமுற்றவர்கள் உள்ளனர், சிலருக்கு குரல் இல்லை, சிலர் கைகால்களை இழந்துள்ளனர். இன்னும் சிலர் உடம்பில் குண்டுகளின் பாகங்களை தாங்கிவாறு உள்ளனர். பாதிக்கப்பட்ட மக்கள் மற்றவர்களுடன் இணைந்து வாழ முடியும் என்றாலும். அவர்களால் கடந்த கால நினைவுகளில் இருந்து மீள முடியாத நிலை உள்ளது” என்று அந்த மக்களின் நிலையை விளக்குகிறார் திருத்தந்தை மஞ்சுள செபஸ்டியன்.
இதேவேளை, பாதிக்கப்பட்ட மக்களுடன் பேராயார் மல்கம் ரஞ்சித் ஆண்டகை உள்ளதுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்று உள்ளூர் அதிகாரிகளை வலியுறுத்த ஜெனீவாவுக்கு நீதிக்கான கோரிக்கையை எடுத்துச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக திருத்தந்தை மஞ்சுள செபஸ்டியன் சுட்டிக்காட்டுகின்றார்.
நீர்கொழும்பு கத்தோலிக்க தேவாலயங்கள் மீதான ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னும் அந்த நினைவுகளை சுமந்துகொண்டு தவிக்கின்றனர்.
குண்டுத்தாக்குதலில் உயிரிந்த 43 பேரின் உடல்களை தாங்கிக்கொண்டு அமைதியாக இருக்கின்றது கட்டுவாப்பிட்டிய தேவாலயத்துக்கு சற்று தூரத்தில் அமைந்துள்ள மயானம். ”இங்குதான் அனைவரையும் கொண்டு வந்து அடக்கம் செய்தனர். வரிசையாக குழிகளை வெட்டி ஒரே நேரத்தில் அத்தனை பேரையும் ஒன்றாக அடக்கம் செய்த தருணத்தை மீண்டும் ஒரு முறை என்னால் நினைத்து பாரக்கக்கூட முடியாது” என்கிறார் பொன்னுசாமி (பெயர் மாற்றப்பட்டுள்ளது).
யாழ்ப்பாணத்தை சேர்ந்த 58 வயதுடைய பொன்னுசாமி சுமார் 40 வருடங்களாக கட்டுவாப்பிட்டிய பகுதியில் வசித்து வருகின்றார். யுத்தத்தால் சிறுவயதிலேயே இங்கு இடம்பெயர நேரிட்டதாக கூறும் அவர், 2019 ஏப்ரல் 21ஆம் திகதி காலையில் திடீரென எழும்பிய சத்ததை கேட்டு, அது குண்டு வெடித்த சத்தம் என்பதை உணர்ந்துகொள்ள சிறிய அவகாசமே தனக்கு தேவைப்பட்டாக குறிப்பிடுகின்றார். சிறுவயதில் யாழ்ப்பாணத்தில் வசித்ததால் குண்டு வெடிப்பு சத்தங்கள் தனக்கு பழக்கப்பட்டிருந்ததாக அவர் சொல்கிறார்.
கடந்த நான்கு வருடங்களில் ஏப்ரல் 19 தாக்குதல் வழக்கு தொடர்பாக குறைந்தது 200 சந்தேக நபர்களை இலங்கை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், அவர்களில் டஜன் கணக்கானவர்கள் மீது குற்றஞ்சாட்டியுள்ளனர்.
அத்துடன், கடந்த வருடம் ஜனவரி மாதம், இலங்கையின் உயர் நீதிமன்றம், 2019ல் ஜனாதிபதியாக இருந்த மைத்ரிபால சிறிசேன, பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 100 மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியின் போது மக்களின் எழுச்சியால் வெளியேற்றப்பட்ட முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, 2019 இல் ஆட்சிக்கு வந்த போது, தேசிய பாதுகாப்பை மேம்படுத்துவதாகவும், ஈஸ்டர் தாக்குதல்களுக்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதாகவும் உறுதியளித்தார்.
அத்துடன், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பதவிக்கு வந்த ஆரம்பத்தில், பாராளுமன்றத்தில் விசாரணைகளை துரிதப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று கூறியிருந்தார்.
இலங்கையின் அமைதியை உலுக்கிப்பார்த்த இந்த தாக்குதலில் ஏறக்குறைய 300 பேர் இறந்தனர், பலர் வாழ்நாள் முழுவதும் ஊனமுற்றவர்களாக ஆனார்கள், பல குடும்பங்கள் தங்கள் உணவளிப்பவர்கள் மற்றும் குழந்தைகள் இல்லாமலேயே தனது வாழ்நாளை கடத்திக் கொண்டு இருக்கின்றனர்.
இந்த மோசமான தாக்கல் நடந்து ஐந்து வருடங்கள் அண்மித்துள்ள நிலையில் பாதிக்கப்பட்ட கத்தோலிக்க சமூகத்தைச் சேர்ந்தவர்களின் கோரிக்கையும் எதிர்பார்ப்பும் ”உண்மை இன்னும் வெளிவரவில்லை, எமக்கு உண்மையும் நீதியும் தேவை” என்பதாகவே உள்ளது.
அப்போது என் மகளுக்கு 13 வயது, இன்று இருந்திருந்தால் என் மகள் உயர்தரத்துக்கு தோற்றியிருப்பாள்” என்று தன் வேதனையை பெருமூச்சாக வெளிப்படுத்துகின்றார் தனது பெயரை குறிப்பிட விரும்பாத, கனிஷ்கா நிரோஷியின் தந்தை.
கனிஷ்கா நிரோஷி தனது மற்றுமொரு சகோதரி மற்றும் தாயுடன் கட்டுவாப்பிட்டிய தேவாயலத்துக்கு சென்றிருந்த நிலையில் அங்கு குண்டு வெடிப்பில் சிக்கி தனது இன்னுயிரை இழந்தவர். சகோதரிக்கு சிறியளவு பாதிப்பு ஏற்பட, தாய் பாரிய காயங்களுக்கு உள்ளாகி சுமார் ஒரு மாதத்துக்கும் அதிகமாக நீர்கொழும்பு வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப்பெற்று இப்போது குணமடைந்து வருகின்றார்.
“எனது மகள் உயிரிழந்தது என் மனைவிக்கு தெரியாது. ஒரு மாதத்துக்கு பின்னர் அவர் வீடு திரும்பியதும் கனிஷ்கா நிரோஷி எங்கே என்று கேட்டு கதறியதுடன், நள்ளிரவு வேளையில் கனிஷ்கா நிரோஷி அடக்கம் செய்யப்பட்ட கல்லறையை காட்டுமாறு கூறி அழுதார். அவர் கதறிய அந்த தருணங்களை என்னால் மறக்கவே முடியாது” - இது அந்த தந்தையின் வேதனை.
”எனது மற்ற மகளை பார்க்கும் போது உயிரிழந்த கனிஷ்கா நிரோஷி எனது நினைவுக்கு வருவதை என்னால் தடுக்கமுடிவதில்லை” என்று சொல்லியபடியே தனது வீட்டில் வரவேற்பு அறையில் வைக்கப்பட்டுள்ள கனிஷ்கா நிரோஷியின் புகைப்படத்தை பார்த்து கண்கலங்கினார் அந்த 53 வயதான தந்தை.
“இந்த சம்பவத்தில் மகளை இழந்த பின்னர் என்னால் தேவாயத்துக்கு சென்று வழிபாடுகளில் பங்கு பற்ற முடியவில்லை. எனது மகளுக்கும் உயிரிழந்த மற்ற மக்களுக்கும் என்று நீதி கிடைக்கின்றதோ அன்றுதான் நான் மீண்டும் தேவாலயத்துக்கு செல்வேன்” என தீர்மானமிக்க குரலில் கூறிவிட்டு எழுந்து சென்றார் கனிஷ்கா நிரோஷியின் தந்தை.
மக்கள் மத்தியில் அதிருப்தி
இதேவேளை ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பில் அரசாங்கம் முன்னெடுத்த நடவடிக்கைகள் தொடர்பில் மக்கள் மத்தியில் அதிருப்தியான நிலையே காணப்படுகின்றது என்பதை மாற்றுக்கொள்கைகளுக்கான மய்யம் கடந்த வருட இறுதியில் நடத்தியுள்ள ஆய்வொன்று சுட்டிக்காட்டுகின்றது.
முஸ்லிம்கள் எப்படி உணர்ந்தார்கள்
இலங்கையில் ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புக்குப் பின்னர், அதன் விளைவுகள் சமூகத்தின் கட்டமைப்புக்குள் ஆழமாக எதிரொலிக்க ஆரம்பித்து விட்டது. தனிநபர்கள் மற்றும் வணிகங்களில் ஒரே மாதிரியாக நீடித்த வடுக்களை இந்த சம்பவம் ஏற்படுத்தி விட்டது. முகமது சிஃபான் என்ற கடை உரிமையாளருக்கு, இந்த வீழ்ச்சி அப்பட்டமாக தெரிகின்றது. குண்டு வெடிப்புக்கு பின்னர் அவரது 90 சதவீதமான சிங்கள வாடிக்கையாளர்கள் அவரது வியாபாரத்துக்கு ஆதரவளிப்பதை நிறுத்திவிட்டனர், இது அவரது வியாபாரத்தில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி மற்றும் நூறாயிரக்கணக்கான ரூபாய் அளவான நிதி இழப்புக்கு வழிவகுத்தது.
பொருளாதார மாற்றங்களுக்கு அப்பால், தாக்குதல்கள் தற்போதுள்ள சமூக பதட்டங்களை அதிகப்படுத்தியது, குறிப்பாக முஸ்லீம் சமூகங்களை குறிவைத்திருந்தது. பாத்திமா நுஸ்ரா என்ற முஸ்லீம் பெண் இதில் பாதிக்கப்பட்டவர்களின் ஒருவர். குண்டுவெடிப்புகளுக்குப் பிறகு, பாதுகாப்பு நோக்கங்களுக்காக பொது இடங்களில் முகத்தை மூடுவதற்கு அரசாங்கம் தடை விதித்தது, பாரம்பரிய இஸ்லாமிய உடைகளை அணிந்த முஸ்லீம் பெண்கள் அதிக சோதனை மற்றும் பாகுபாட்டுக்கு உட்படுத்தப்பட்டனர். அடக்கமான முக்காடு அணிந்தவர்கள் கூட துன்புறுத்தலையும் ஒதுக்கிவைப்பதையும் எதிர்கொண்டனர், தனிநபர்கள் தங்கள் மத நம்பிக்கைகளுக்கு முரணான ஆடைக் குறியீடுகளுக்கு இணங்காவிட்டால் அரசாங்க அலுவலகங்களுக்குள் நுழைய மறுக்கப்பட்டனர்.
இந்த பாகுபாடு பணியிடங்களுக்கு அப்பால் பொது இடங்களுக்கு விரிவடைந்தது, அங்கு மொஹமட் போன்ற நபர்கள் தனிப்பட்ட அச்சுறுத்தல்கள் மற்றும் மிரட்டல்களை எதிர்கொண்டனர். மொஹமட் தனது தாடியை கத்தரித்து, பொது இடங்களில் அலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிப்பதைத் தவிர்த்து வந்த மோசமான நாட்களை நினைவுப்படுத்தினார்.
தோளில் பையொன்றை எடுத்துச் செல்லுவதற்கு பலரும் அச்சமடைந்திருந்த காலம் அது. சாதாரணமாக செயற்பாடுகள் சில காலங்களாக பயத்தால் நிறைந்திருந்தன. மொஹமட் போன்ற நபர்கள் பல மாதங்களாக தமது பழக்கவழக்கங்களைத் தவிர்க்க நேர்ந்ததுடன், தாக்குதல்களுக்குப் பிறகான பாதிப்பு இன்றும் அவர்களில் பிரதிபலிப்பதாக கூறுகின்றனர்.
ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பானது உடல் மற்றும் உயிர் ரீதியான பாதிப்பை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் பிரிவினை மற்றும் அவநம்பிக்கையின் விதைகளை சமூகத்தில் விதைத்தது. அத்துடன், இலங்கையின் சமூக-பொருளாதார நிலப்பரப்பில் மாறாத வடுக்களை ஏற்படுத்தியது.
இந்த சோகத்தின் பின்விளைவுகளை நாடு எதிர்கொண்டுள்ள நிலையில், மத மற்றும் இன வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட மற்றும் பரஸ்பர மரியாதையின் சூழலை வளர்ப்பதன் மூலம், பாகுபாடு மற்றும் சகிப்புத்தன்மை இன்மையை தூண்டும் அடிப்படை காரணிகளுக்கு தீர்வு காண வேண்டியது அவசியமாகும்.
புரிந்துணர்வையும் நல்லிணக்கத்தையும் ஊக்குவிப்பதற்கான ஒருங்கிணைந்த முயற்சிகளின் மூலமே இலங்கை இந்த அழிவுகரமான நிகழ்வினால் ஏற்பட்ட காயங்களை ஆற்றி, ஐக்கிய தேசமாக வலுவாக வெளிப்பட முடியும்.
நன்றி தமிழ்Mirror