தமிழக பா.ஜ., வளர்ச்சியை தேர்தல் முடிவு காட்டும்: அண்ணாமலை
21 மாசி 2024 புதன் 04:31 | பார்வைகள் : 1573
தமிழக மக்கள் மாற்றத்திற்கு காத்திருப்பதை, லோக்சபா தேர்தல் முடிவு வெளிப்படுத்தும்; பா.ஜ.,வின் வளர்ச்சியை, கிடைக்கக்கூடிய ஓட்டுகள் பேசும்,'' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த பா.ஜ., செய்தி தொடர்பாளர்களுக்கு, சென்னை தி.நகர், கமலாலயத்தில் நேற்று பயிற்சி முகாம் நடந்தது. அதில், மத்திய அமைச்சர் ஹர்தீப்சிங் புரி, புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் உட்பட பலர் பங்கேற்றனர்.
பின், அண்ணாமலை அளித்த பேட்டி:<br><br>கடந்த, 10 ஆண்டுகளில், நகர்ப்புற வளர்ச்சித் துறைக்கு, 18 லட்சம் கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. உலகில் பெட்ரோல், டீசல் விலை அதிகம் உள்ளது. அதே சமயம், அவற்றின் விலையை குறைத்தது மத்திய அரசு தான்.
தி.மு.க., அரசு, பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதாக வாக்குறுதி அறிவித்தது; இதுவரை குறைக்கவில்லை. பா.ஜ., - எம்.எல்.ஏ., வானதியின் அலுவலகம் தான், தமிழகத்தில் முதல் ஐ.எஸ்.ஓ., தரச்சான்று பெற்ற எம்.எல்.ஏ., அலுவலகம்.
பிரதமர் மோடி, வரும் 27ம் தேதி மதியம், 'என் மண் என் மக்கள்' பாதயாத்திரை நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பிரதமர் வரும்போது, கூட்டணி கட்சி தலைவர்கள் வருவர். யாரெல்லாம் வருவர் என்பதை, விரைவில் சொல்கிறோம்.
பிரதமர் மோடி, 28ம் தேதி பங்கேற்கும் அரசு நிகழ்ச்சி குறித்த விபரத்தை, மாநில அரசு தான் தெரிவிக்க வேண்டும்.
தமிழகம் கடன் சுமையில் இருக்கிறது என்பதை, பட்ஜெட் உணர்த்துகிறது. மத்திய அரசின் திட்டங்களுக்கு, பட்ஜெட்டில் புதுப்பெயர் வைக்கப்பட்டுஉள்ளது.
விவசாயிகள் பயிர் காப்பீட்டு திட்ட நிதியை மத்திய அரசு, தமிழக அரசுக்கு வழங்கி விட்டது. இன்னும் தமிழக அரசு வழங்காமல் உள்ளது. பேரிடர் நிவாரணம் தமிழகத்திற்கு உறுதியாக வரும்.<br><br>இதை வைத்து, தி.மு.க., அரசு அரசியல் செய்கிறது. தமிழக மக்கள் மாற்றம் வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளனர். வரும் தேர்தல் பிரதமர் மோடிக்கான தேர்தல். பா.ஜ., கூட்டணி, வலிமையானது மட்டுமல்ல, வெற்றி பெறும் கூட்டணி.
அனைத்து கட்சிகளுக்கும், கதவுகள் மட்டுமல்ல, ஜன்னலும் திறந்திருக்கின்றன. பா.ஜ., அணியில் யார் வேண்டுமானாலும் சேரலாம். பிரதான கட்சி என்று சொல்கிற காலம் மாறி விட்டது. தமிழக மக்கள் மாற்றத்திற்காக காத்திருப்பதை, லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தும். நான் பேசுவதை விட, பா.ஜ.,வின் வளர்ச்சியை ஓட்டுகள் பேசும்.
அடுத்த மூன்று, நான்கு நாட்களில், முக்கியப் புள்ளிகள் பா.ஜ.,வில் இணைய உள்ளனர். மக்கள் யாருக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறார்களோ, அவர்கள் பா.ஜ.,வில் இணைய உள்ளனர்.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையே ஒரு, 'ரவுடி ஷீட்டர்' தான். அவர், ரவுடிகள் எல்லாம் பா.ஜ.,வில் இணைவதாக சொல்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.