வருவாய் அதிகரித்தும் கடன் உயர்வது ஏன்? இ.பி.எஸ்., கேள்வி
22 மாசி 2024 வியாழன் 01:55 | பார்வைகள் : 1955
தமிழக அரசின் வருவாய் அதிகரித்தும், கடன் குறையாமல் அதிகரிப்பது ஏன்?'' என, எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்., சரமாரி கேள்வி எழுப்பினார்.
சட்டசபையில் நடந்த விவாதம்:
அ.தி.மு.க., - தங்கமணி: பழனிசாமி முதல்வராக இருந்தபோது, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார். கொரோனா காரணமாக, ஓராண்டு எந்த வருவாயும் இல்லை. இவற்றை எல்லாம் சமாளித்து, 10 ஆண்டுகளில் 3.50 லட்சம் கோடி கடன் மட்டும்தான் வாங்கி இருந்தோம்.
நீங்கள் எந்த திட்டங்களையும் செயல்படுத்தாமல், மூன்று ஆண்டுகளில் 3.50 லட்சம் கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளீர்கள். இப்படி போனால் எப்படி?
அமைச்சர் எ.வ.வேலு: கடந்த மூன்று ஆண்டுகளில், சமூக நலன் சார்ந்து, பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம். மக்கள் நலனுக்காக கடன் வாங்கப்படுகிறது.
எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி: அ.தி.மு.க., ஆட்சியில், பல திட்டங்களை கொண்டு வந்தோம். நீங்கள் கடன் வாங்கி, எந்த பெரிய திட்டத்தை கொண்டு வந்துள்ளீர்கள்? கடன் வாங்குவது தவறல்ல. ஆனால், அதிக கடன் வாங்குகிறீர்கள்.
அமைச்சர் தங்கம் தென்னரசு: தி.மு.க., ஆட்சியில் செய்த திட்டங்களை புத்தகமாக போட்டுள்ளோம். கடன் கட்டுக்குள் உள்ளது. வருவாய் பற்றாக்குறையை குறைக்கவும், வருவாயை பெருக்கவும், அரசு அனைத்து முயற்சிகளை எடுத்து வருகிறது. நிதி மேலாண்மை சிறப்பாக உள்ளது.
பழனிசாமி: தி.மு.க., ஆட்சி வந்த பின், வரிகளை உயர்த்தினீர்கள். இதனால் வருவாய் அதிகரித்தும், கடன் அதிகரிக்கிறது. வருவாய் அதிகரிக்கும்போது, கடன் குறைய வேண்டும். நிதி மேலாண்மைக் குழு போட்டீர்கள். இது தொடர்பான விபரம் பட்ஜெட்டில் இல்லை.
தங்கம் தென்னரசு: மத்திய அரசிடமிருந்து வர வேண்டிய வரி வருவாய் வரவில்லை. வருமானத்தை கூட்ட நடவடிக்கை எடுத்துள்ளோம்.
இ.பி.எஸ்.,: ஜி.எஸ்.டி., வருவாய் அதிகரித்துள்ளது. பல திட்டங்களை அறிவித்துள்ளதாக, அமைச்சர் வேலு தெரிவித்தார். அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை நிறுத்தி விட்டு, அந்த நிதியை பயன்படுத்துகிறீர்கள்.
தங்கம் தென்னரசு: தாலிக்கு தங்கம் திட்டத்தை நிறுத்தவில்லை. மூவலுார் ராமமிர்தம் திட்டம் தவிர, மற்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அந்த திட்ட நிதி புதுமைப் பெண் திட்டத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் வழங்காமல் நிலுவையில் வைத்து விட்டீர்கள்.
இ.பி.எஸ்.,: தங்கம் விலை ஏறியதால், 'டெண்டர்' விடுவதில் தாமதம் ஏற்பட்டது. அதில் உள்ள குறைகளை சரி செய்து, திட்டத்தை தொடர வேண்டும். <br><br>தங்கம் தென்னரசு: இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தை நிறுத்தவில்லை. லேப்டாப் கிடைக்கவில்லை.
இ.பி.எஸ்.,: அந்த திட்டம் மீண்டும் தொடருமா?<br><br>தங்கம் தென்னரசு: நிதி நிலைமைக்கு ஏற்ப, முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.