ஆணுறை பாக்கெட்டில் கட்சி சின்னம்: அரசியல் கட்சிகளின் அடாவடி
23 மாசி 2024 வெள்ளி 06:17 | பார்வைகள் : 2234
ஆந்திராவில் லோக்சபா தேர்தலோடு சட்டசபை தேர்தலும் நடப்பதால் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. அதிலொரு பகுதியாக ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சியின் சின்னம் மற்றும் பெயர் அச்சிடப்பட்ட ஆணுறை பாக்கெட்டுகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
இன்னும் ஓரிரு மாதங்களில் லோக்சபா தேர்தல் துவங்கிவிடும் சூழலில் அரசியல் கட்சிகள் ஒருபக்கம் கூட்டணி பேச்சு, தொகுதி பங்கீடு என பிஸியாக இருக்கின்றன. மறுபக்கம், பிரசாரங்களில் புதுமையை புகுத்த திட்டமிட்டு வருகின்றன.
அந்த வகையில், ஆந்திராவில் ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியும், எதிர்க்கட்சியான தெலுங்கு தேசமும் வித்தியாசமான முறையில் கட்சியின் சின்னத்தை மக்களிடம் கொண்டு செல்ல ஆணுறை அட்டை பெட்டியில் தங்களது கட்சி சின்னத்தை பதிவிட்டுள்ளன.
ஆந்திராவில் லோக்சபா தேர்தலுடன், சட்டசபை தேர்தலும் நடப்பதால் இந்த யுக்தியை கையில் எடுத்துள்ளனர்.
ஆந்திராவில் ஆணுறைகள் மிக அதிகமாக விற்பனை செய்யப்படுவதாக கூறப்படும் நிலையில் ஆணுறைகளை பிரசார கருவியாக அம்மாநில அரசியல் கட்சிகள் பயன்படுத்தி வருகின்றன.
இரண்டு முக்கிய கட்சிகள் தங்கள் கட்சியின் சின்னங்களை ஆணுறையில் அச்சிட மிகப்பெரிய அளவில் பணம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தங்கள் கட்சி சின்னத்துடன் கூடிய ஆணுறைகளை இலவசமாக விநியோகம் செய்யவும் அரசியல் கட்சிகள் திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.