நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு பாரபட்சம்: அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு
23 மாசி 2024 வெள்ளி 06:18 | பார்வைகள் : 2162
தமிழக மக்கள் திராவிட மாடல் ஆட்சிக்கு ஆதரவாக இருப்பதால், மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது, என, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
சட்டசபையில் நேற்று பட்ஜெட் மீதான விவாதத்திற்கு, அமைச்சர் தங்கம் தென்னரசு அளித்த பதிலுரை:
மத்திய அரசின் திட்டங்கள் பெயரை, தமிழக அரசின் திட்டங்களுக்கு சூட்டுவதாக திட்டமிட்டு பிரசாரம் செய்கின்றனர். மத்திய அரசு தங்களுடையது என பெருமை கொள்ளும் திட்டங்களுக்கு, தமிழக அரசு பெருமளவு நிதி வழங்குகிறது.
பிரதம மந்திரி ஊரக வீடு வழங்கும் திட்டத்தில், ஒரு வீட்டிற்கு 1.20 லட்சம் ரூபாய் ஒதுக்கப்படுகிறது. இதில், மத்திய அரசின் பங்கு 72,000 ரூபாய்; மாநில அரசின் பங்கு 48,000 ரூபாய்.
இதில், வீடு கட்ட முடியாது என்பதால், தமிழக அரசு கூடுதலாக 1.20 லட்சம் ரூபாய் சேர்த்து வழங்குகிறது. ஆனால் திட்டத்திற்கு, 'பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா' என்று பெயரிட்டு பெருமை கொள்கின்றனர்.
நகர்ப்புறத்தில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில், மத்திய அரசின் பங்கு 1.50 லட்சம் ரூபாய் மட்டுமே; மாநில அரசின் பங்கு 7 லட்சம் ரூபாய். பிரதமரின் கிராம சாலை திட்டத்தை பெயர் மாற்றி, முதல்வரின் கிராம சாலை திட்டம் என்று அறிவித்துள்ளதாக கூறுகின்றனர்.
இத்திட்டம் முழுதும் மாநில அரசின் நிதியில் செயல்படுத்தப்படுகிறது. பிரதம மந்திரியின் கிராம சாலை திட்டத்திற்கு, 1,945 கோடி ரூபாய் மதிப்பில், மத்திய அரசுக்கு முன்மொழிவுகள் அனுப்பப்பட்டுள்ளன; இன்று வரை ஒப்புதல் வழங்கப்படவில்லை.
அதேபோல, ஊட்டச்சத்தை உறுதி செய்ய, மாதிரி பள்ளிகள் திட்டத்தை, மாநில அரசு தன் சொந்த நிதியில் செயல்படுத்துகிறது.
மத்திய அரசு வெளியிட்ட தேசிய கல்விக் கொள்கையில், பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது; இதுவரை செயல்படுத்தவில்லை. தமிழக முதல்வர் செயல்படுத்தி உள்ளார்.
பேரிடர் மேலாண்மை
மிக்ஜாம் புயலால், சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்கள் பெரும் பாதிப்பை சந்தித்தன. இவற்றை சீரமைக்க மத்திய அரசிடம், 19,689 கோடி ரூபாய் கேட்கப்பட்டது. தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பிற்கு, 18,214 கோடி ரூபாய் கோரப்பட்டது.
ஆனால், ஆண்டுதோறும் விடுவிக்கப்படும் மாநில பேரிடர் நிவாரண நிதியின் இரண்டாவது தவணையை மட்டும், மத்திய அரசு வழங்கியது.
பல்வேறு குழுவினர் வந்த போதிலும், இதுவரை எந்த நிதியையும் மத்திய அரசு வழங்கவில்லை. ஆனால், பிற மாநிலங்களுக்கு நிதி வழங்கி உள்ளனர். தமிழக மக்கள் திராவிட மாடல் ஆட்சிக்கு ஆதரவாக இருப்பதன் காரணமாக, மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது.
பிரதமர் மோடி துாத்துக்குடிக்கு வர உள்ளார். அதற்கு முன், தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து, தமிழகத்திற்கு மத்திய அரசு நிதி வழங்கும் என்று நம்புகிறேன்.
மெட்ரோ ரயில் திட்டம்
சென்னை மெட்ரோ ரயில் திட்டம் இரண்டாம் கட்டப் பணி, 63,246 கோடி ரூபாயில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு, 50 சதவீதம் வழங்க வேண்டும்; இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை.
நமக்கு ஒப்புதல் அளிக்காத மத்திய அரசு, நாக்பூர், கொச்சி, இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நியாயமற்ற செயலால், மாநில அரசுக்கு இந்த ஆண்டு 9,000 கோடி ரூபாய், அடுத்த ஆண்டு 12,000 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்பட்டு உள்ளது.
மத்திய அரசு தன் கடமையை நிறைவேற்றாததால், மாநில அரசின் பற்றாக்குறையும் கடனும் அதிகரித்துள்ளது. மத்திய அரசு விரைவில் ஒப்புதல் அளிக்கும் என நம்புகிறோம்.
கூட்டாட்சி தத்துவம்<
மத்திய அரசு தன் வரிகளை, மாநிலங்களுக்கு எவ்வாறு பகிர்ந்தளிக்க வேண்டும் என, ஒவ்வொரு ஐந்து ஆண்டும் நிதிக்குழு பரிந்துரை செய்கிறது. கடந்த 10வது நிதிக்குழுவில், 6.64 சதவீதமாக இருந்த நம் பங்கு, 15வது நிதிக்குழுவில் 4.08 சதவீதமாகக் குறைந்துள்ளது; நம் மாநிலத்திற்கு அநீதியை அளிக்கிறது.
மேலும், மத்திய அரசு தன் வரிகள் மீது மேல் வரி மற்றும் கூடுதல் கட்டணத்தை விதிக்கிறது. நியாயமாக பார்த்தால், இத்தொகையை மாநில அரசுகளுடன் பகிர்ந்தளிக்க வேண்டும். ஆனால் மத்திய அரசு, அத்தொகையை வைத்து திட்டங்களை தீட்டுகிறது.
ஒருவேளை மத்திய அரசு, கூட்டாட்சி தத்துவத்தை கடைப்பிடித்து, இத்தொகையை மாநிலங்களுக்கு பகிர்ந்தளித்திருந்தால், மாநில அரசின் பற்றாக்குறை, கடன் சுமை குறைந்திருக்கும்.
இது, தமிழகத்தைச் சார்ந்த பிரச்னை மட்டும் இல்லை; அனைத்து மாநிலங்களையும் சார்ந்தது. இந்த நியாயமற்ற முறையை மாற்ற வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்துவோம்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
அமைச்சர் தங்கம் தென்னரசு மேலும் கூறியதாவது:
பொருளாதாரம் குறித்தும், நிதி மேலாண்மை குறித்தும், அடிப்படை புரிதல் இல்லாமல் எதிர்க்கட்சியினர், அரசின் கடன் அளவு குறித்து தவறான கருத்துக்களை முன்வைத்துள்ளனர். கடந்த 2011ம் ஆண்டு வரவு - செலவு திட்டத்தின் மொத்த மதிப்பு 1.02 லட்சம் கோடி ரூபாய்; மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.51 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.
இன்று வரவு - செலவு திட்டத்தின் மொத்த மதிப்பு 4.12 லட்சம் கோடி ரூபாய்; மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 31.55 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
நிதிக்குழுவின் வரம்புக்குள் தான் கடன் வாங்கி உள்ளோம். மத்திய அரசு நம் நிதி நிலையை பாதிக்கும் வகையில் செயல்படாமல் இருந்தால், நம் கடன் இந்த ஆண்டு 26,117 கோடி ரூபாய், அடுத்த ஆண்டு 26,442 கோடி ரூபாய் அளவுக்கு குறைந்திருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.