மஹிந்தவின் விசுவாசியான சனத் நிஷாந்தவின் சாரதியின் பகீர் வாக்குமூலம்
26 தை 2024 வெள்ளி 12:14 | பார்வைகள் : 2369
இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த, நேற்று அதிகாலை கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற மிக மோசமான வாகன விபத்தில் உயிரிழந்தார்.
விபத்து தொடர்பாக இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் கார் சாரதி பிரபாத் எரங்க, வெளியிட்ட வாக்குமூலம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
'விபத்தின் போது அமைச்சர் நன்றாக உறங்கிவிட்டார்... 160 கிலோமீற்றர் வேகத்தில் ஜீப் சென்று கொண்டிருந்தது. நான் இடது பக்கம் வாகனத்தை திருப்பும் போது சுற்றுவதை போல் உணர்ந்தேன்... அதன் பிறகு என்ன நடந்தது என்றே தெரியவில்லை!! என பொலிஸாரின் விசாரணைகளின் போது அவர் குறிப்பிட்டார்.
மேலும், “இடது பக்கத்திலிருந்து ஒரு காரை முந்திச் சென்றேன். நான் ஜீப்பை வலது பாதையில் நகர்த்த முற்பட்ட போது, முன்னால் சென்ற கண்டெய்னர் மீது மோதியது. ஜீப்பின் கட்டுப்பாட்டை இழந்தேன். அது தடுப்பில் மோதி நின்றது” என்றார்.
விபத்து இடம்பெற்ற போது, வாகனம் மணிக்கு 160 கிலோ மீற்றர் வேகத்தில் பயணித்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த சாரதி, ராகமயிலுள்ள கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த விபத்தில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் தலை மற்றும் வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது.
சனத் நிஷாந்தவின் உடல், பொது மக்கள் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக பொரளையில் உள்ள ஜயரத்ன மலர் சாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மறைந்த இராஜாங்க அமைச்சரின் பூதவுடல் இன்று மாலை புத்தளத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு எடுத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.