கரீபியன் தீவு நாடு ஒன்றுக்கு விடுக்கப்பட்டுள்ள பயண எச்சரிக்கை
27 தை 2024 சனி 08:26 | பார்வைகள் : 3019
கரீபியன் தீவு நாடான பஹாமாஸிற்கு செல்லும் மக்கள் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டுமென்று அங்குள்ள அமெரிக்க தூதரகம் பயண எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த மாதத்தில் 27 நாட்களில் பஹாமாஸ் தீவு நாட்டில் 18 கொலைச் சம்பவங்கள் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அங்குள்ள குழுக்களுக்கு இடையேயான மோதலில் கொலைகள் நடந்துள்ளதாக கூறப்பட்டாலும், சுற்றுலா பயணிகள் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மட்டுமின்றி, வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்களும் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள், கரீபியன் தீவு நாட்டுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தால், மறு ஆலோசனை மேற்கொள்ளவும் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
நாசாவ் பகுதியில் உள்ள அமெரிக்க தூதரகம், 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து நாசாவ் பகுதியில் 18 கொலைகள் நடந்துள்ளன என்பதை அமெரிக்க குடிமக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.
பட்டப்பகலில் தெருக்களில் மட்டுமின்றி, எந்த மணி நேரத்திலும் எப்போது வேண்டுமானாலும் கொலை நடக்கலாம் என்ற சூழல் இருப்பதாக எச்சரித்துள்ளனர்.
மேலும், இரவு நேரங்களில் வாகன பயணம் அல்லது நடந்து செல்வதும் சிக்கலை ஏற்படுத்தலாம் எனவும்,
சுற்றும் என்ன நடக்கிறது என்பதை பயணிகள் உணர்ந்து செயல்பட வேண்டும் என்றும், வழிப்பறி சம்பவங்களை தடுக்க முயல்வது கொலையில் முடியலாம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த விடயங்களை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு சாலைத் தடைகள் மற்றும் இரகசிய பொலிஸ் கண்காணிப்பு உட்பட பல்வேறு நடவடிக்கைகளை பஹாமாஸின் பிரதமர் பிலிப் டேவிஸ் முன்னெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக கரீபியன் தீவான ஜமைக்கா தொடர்பில் பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
அதில், குடியிருப்புக்குள் அத்துமீறல், ஆயுதமேந்திய கொள்ளைகள், துஸ்பிரயோகம் மற்றும் கொலைகள் உட்பட வன்முறைக் குற்றங்கள் பொதுவான நிகழ்வுகளாக ஜமைக்காவில் காணப்படுவதாக குறிப்பிட்டிருந்தனர்.