ஆப்கன் தங்க மலையில் 2,000 ஆண்டு பழைய புராதன பொருட்கள் கொள்ளை
27 தை 2024 சனி 08:51 | பார்வைகள் : 2654
ஆப்கானிஸ்தானில் பத்துக்கும் மேற்பட்ட தொல்பொருள் தளங்கள் 'திட்டமிட்டு கொள்ளையடிக்கப்பட்டு' அழிக்கப்பட்டுள்ளதாக, அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
செயற்கைக்கோள் புகைப்படங்களின் பகுப்பாய்வு மூலம் இதற்கான முதல் உறுதியான ஆதாரம் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த கொள்ளை சம்பவங்கள் முந்தைய அரசாங்கங்களின் காலத்தில் தொடங்கி, ஆகஸ்ட் 2021-ம் ஆண்டில் தாலிபன்கள் ஆட்சிக்கு வந்த பின்னரும் தொடர்கிறது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
அழிக்கப்பட்ட தளங்களில் பிந்தைய வெண்கலம் மற்றும் இரும்புக் காலம், அதாவது கி.மு. 1,000-க்கு முந்தைய பழைய குடியிருப்புகளும் அடங்கும். பெரும்பாலான இடங்கள் வடக்கு ஆப்கானிஸ்தானின் பால்க் பகுதியில் அழிக்கப்பட்டுள்ளன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த இடம் பாக்ட்ரியா நாகரிகத்தின் 'மையமாக' கருதப்பட்டது.
ஆறாம் நூற்றாண்டில் அக்கீமினிட் பேரரசின் (Achaemenid) போது இது பண்டைய ஆப்கானிஸ்தானின் பணக்கார மற்றும் அதிக மக்கள் தொகை கொண்ட பகுதியாக இருந்தது.
கிமு 327-ல், அலெக்சாண்டர் அக்கீனிட் ஆட்சியாளரைத் தோற்கடித்து, இந்தப் பகுதியைக் கைப்பற்றி, பாக்ட்ரியா நாகரிகப் பெண்ணான ரோக்ஸானாவை மணந்தார்.
இந்த பிராந்தியத்தின் முக்கிய நகரமான பாக்ட்ரா (இன்றைய பால்க்), கிழக்கு-மேற்கு பட்டுப் பாதையில் அமைந்துள்ளது. பார்சி மற்றும் புத்த மதங்களைப் பின்பற்றுபவர்களுக்கு இது ஒரு முக்கிய மையமாக இருந்தது. பின்னர் அது இஸ்லாத்தின் முக்கிய மையமாக மாறியது.
சிகாகோ பல்கலைக் கழகத்தின் கலாசார பாரம்பரிய பாதுகாப்பு மையம், ஆப்கானிஸ்தான் முழுவதும் 29,000-க்கும் மேற்பட்ட தொல்பொருள் தளங்களை செயற்கைக்கோள் மற்றும் பிற கருவிகளைப் பயன்படுத்தி அடையாளம் கண்டுள்ளது.
ஆனால், 2018-க்குப் பிறகு பால்க் பகுதியின் செயற்கைக்கோள் படங்களில் ஒரு புதிய வடிவம் காணப்படுகிறது.
சிகாகோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இந்த படங்களில் சில புள்ளிகளை அடையாளம் கண்டுள்ளதாக கூறுகிறார்கள். இவை புல்டோசர்கள் என்று அவர்கள் நம்புகிறார்கள். ஏனென்றால், சில நேரங்களில் அவை தோன்றும் மற்றும் சில நேரங்களில் மறைந்துவிடும். அவற்றின் இயக்கங்களின் தடயங்களையும் அவை விட்டுச் சென்றுள்ளன.
கலாசார பாரம்பரிய பாதுகாப்பு மையத்தின் இயக்குநர் பேராசிரியர் ஜில் ஸ்டெய்ன், பிந்தைய புகைப்படங்கள், கொள்ளையர்களால் தோண்டப்பட்ட துளைகளுடன் புதிதாக அழிக்கப்பட்ட பகுதிகளைக் காட்டுகின்றன என்று விளக்கினார்.
2018 மற்றும் 2021-க்கு இடையில் 'வாரத்திற்கு ஒரு குடியிருப்பு என்ற வியக்கத்தக்க வீதத்தில்' 162 பழங்கால குடியிருப்புகள் அழிக்கப்பட்டதாக அவரது குழு கூறுகிறது.
அவரைப் பொருத்தவரை, தாலிபன்களின் வருகைக்குப் பிறகும் இந்த போக்கு தொடர்கிறது. தாலிபன்கள் ஆட்சியில் 37 இடங்கள் அழிக்கப்பட்டுள்ளன.
சிகாகோ பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள், தொல்பொருள் இடங்களைப் பற்றிய தகவல்களை கொள்ளையடிப்பவர்களுக்கு வழங்குவதைத் தவிர்க்க விரும்புகிறார்கள். எனவே, அவர்கள் இந்த இடங்களைப் பற்றிய துல்லியமான தகவல்களை வெளியிடுவதில்லை.
பல இடங்கள் பற்றிய தகவல்களை ஆவணப்படுத்தும் பணி இன்னும் ஆரம்ப நிலையில் உள்ளது.
இந்த தொல்பொருள் தளங்களுக்கு அடியில் என்ன இருக்கிறது என்பது ஆராய்ச்சியாளர்களுக்குத் தெரியாது. இந்த இடங்களில் மேடுகள், கோட்டைகள், சாலையோர விடுதிகள் மற்றும் கால்வாய்கள் உள்ளன.
97 கிலோமீட்டர் தொலைவில் திலா டெப்பே உள்ளது. அங்கு பாக்ட்ரியா நாகரிகத்திலிருந்து 2,000 ஆண்டுகள் பழமையான தங்க வைப்பகம் 1978-ல் கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த 'தங்க மலை'யில் 20 ஆயிரம் அரிய பொருட்கள் கிடைத்தன. அவற்றில் தங்க ஆபரணங்கள், தங்க கிரீடம் மற்றும் தங்க நாணயங்கள் இருந்தன. அந்த இடம், ஆப்கானிஸ்தானின் தொலைந்து போன பொக்கிஷம் என்றும் அழைக்கப்படுகிறது.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளரான ராசா ஹுசைனி கூறுகையில், "ஒவ்வொரு மேட்டிலும் பல நிலைகளைக் கொண்ட நாகரிகத்தை நீங்கள் காணலாம்” என்றார்.
பால்க்கில் பிறந்த ஹுசைனி, கடந்த சில ஆண்டுகளாக வடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள பல்வேறு தொல்பொருள் தளங்களில் தன்னார்வ ஆய்வுகளை நடத்தினார். இன்று அதில் பல இடங்கள் இடிக்கப்பட்டுள்ளன. சிகாகோ பல்கலைக்கழகத்தின் படங்களை பார்த்து அவர் வியக்கிறார்.
தெளிவாக புலப்படும் இந்த அழிவின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதற்கு தெளிவான பதில் இல்லை.
இந்த இடங்களை அழிப்பது முன்னாள் அதிபர் அஷ்ரஃப் கானி காலத்தில் தொடங்கி தாலிபன் ஆட்சியில் தொடர்கிறது என்பது தெளிவாகிறது என்று ஸ்டெயின் கூறுகிறார்.
கானியின் அரசாங்கம் பலவீனமாக இருந்தது மற்றும் அவர் முழு நாட்டையும் கட்டுப்படுத்தவில்லை. ஆகஸ்ட் 2021-ல் தாலிபன் கட்டுப்பாட்டின் கீழ் வந்த முதல் பகுதிகளில் வடக்கு ஆப்கானிஸ்தானின் மிகப்பெரிய நகரமான பால்க் மற்றும் மசார்-இ-ஷரீப் ஆகியவை அடங்கும்.
இந்த இடங்களை கொள்ளையடிப்பதில் ஈடுபடுபவர்கள், புல்டோசர் போன்ற இயந்திரங்களை வாங்கவோ அல்லது வாடகைக்கு எடுக்கும் அளவுக்கு பணக்காரர்களாகவும் சக்தி வாய்ந்தவர்களாகவும் இருப்பதாக பேராசிரியர் ஸ்டெய்ன் நம்புகிறார். தங்கள் பணியில் யாரும் தலையிடக் கூடாது என்பதற்காக கிராமப் புறங்களில் தங்கள் பணியை செய்து வருகின்றனர்.
2009-ல் தான் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறுவதற்கு முன்பே, பல தொல்பொருள் இடங்கள் சூறையாடப்பட்டதாக ஹுசைனி கூறுகிறார்.
"உள்ளூரில் பலம் வாய்ந்தவர்கள் மற்றும் போராளிகளின் அனுமதியின்றி யாரும் இதனை செய்ய முடியாது" என அவர் என்னிடம் கூறினார்.
“அவர்களுக்கு வரலாற்றின் மதிப்பு தெரியாது. எதை அவர்கள் கண்டுபிடிக்கிறார்களோ அதைத் தோண்டி அழித்துவிடுவார்கள். மிக கூர்மையாக அவர்கள் அந்த இடங்களை கண்டுபிடிப்பதை நான் என் கண்களால் பார்த்திருக்கிறேன்.
அவர் ஒரு காலத்தில் பழங்கால தொல்பொருள் தளத்தின் பராமரிப்பை உறுதி செய்வதற்கான பிரசாரத்தின் ஒரு பகுதியாக இருந்ததாக கூறினார். அங்கு போராளிகள் அமைப்பின் தளபதி ஒருவர் அபின் வளர்த்தார்.
2001-ஆம் ஆண்டில் தாலிபன் ஆட்சியின் போது பாமியானில் 1,500 ஆண்டுகள் பழமையான புத்தர் சிலைகளை தாலிபன்கள் தகர்த்தனர். இந்த சிலைகள் ஒரு காலத்தில் உலகின் மிகப்பெரிய புத்தர் சிலைகளாக இருந்தன.
எவ்வாறாயினும், 20 ஆண்டுகளுக்குப் பிறகு 2021-ல் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், நாட்டின் புராதன பாரம்பரியத்திற்கு மதிப்பளிப்பதாக தாலிபன்கள் கூறினர்.
தாலிபனின் தகவல் மற்றும் கலாசார துணை அமைச்சர் அதிகுல்லா அசிஸி இந்த இடங்களில் கொள்ளையடிக்கப்பட்டதாகக் கூறப்படுவதை நிராகரித்துள்ளார். நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களைப் பராமரிப்பதற்காக 800 பலமான பிரிவுகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என்றார்.
சில அமைப்புகள் 'புல்டோசர்களின் நடமாட்டம் மற்றும் கொள்ளையர்கள் அந்த இடங்களை தோண்டுவது' பற்றிய புகைப்படங்களை அமைச்சகத்திற்கு அனுப்பியதாகவும், அதுகுறித்து விசாரிக்க வெவ்வேறு குழுக்களை அனுப்பியதாகவும் அவர் பிபிசியிடம் கூறினார்.
இந்த இடங்கள் எதிலும் இவ்வாறான ஒரு சம்பவம்கூட நடைபெறவில்லை என உறுதியளிக்கிறேன் என அமைச்சர் தெரிவித்தார்.
செப்டம்பரில் மூன்று பேர் கைது செய்யப்பட்டதாக தாலிபன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அவர்கள் சிலைகள், மம்மிகள், தங்க கிரீடம், புத்தகங்கள் மற்றும் வாள் உட்பட சுமார் 27 மில்லியன் டாலர் மதிப்பிலான பழங்கால பொருட்களை கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.
அந்த பொருட்கள் தேசிய அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமைச்சர் அசிஸியின் பதிலைப் பேராசிரியர் ஸ்டெயினிடம் தெரிவித்தேன். இதுகுறித்து பேராசிரியர் ஸ்டெயின் கூறுகையில், "தாலிபன்கள் ஏன் இதனை மறுக்கிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை. ஆதாரங்களைப் பார்க்கும் போது வெட்கமாக இருக்கிறது. இரண்டு வெவ்வேறு ஆட்சிகளுக்கு இடையேயும் இந்த விவகாரம் தொடர்பாக தொடர்ச்சி இருப்பதை இது காட்டுகிறது" என்றார்.
கொள்ளையடிக்கப்பட்ட கலைப்பொருட்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து இரான், பாகிஸ்தான் மற்றும் பிற நாடுகளுக்கு கடத்தப்பட்டு ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் தூர கிழக்கு நாடுகளுக்கு அனுப்பப்படுவதாக பேராசிரியர் ஸ்டெய்ன் கூறுகிறார்.
இந்த பொருட்களில் சில பெயர் மற்றும் தேதி குறிப்பிடப்படாமல் உலகெங்கிலும் நடைபெறும் ஏலங்கள் மற்றும் அருங்காட்சியகங்களில் காட்சிப்படுத்தப்படலாம்.
அங்கு அவை பட்டியலிடப்படவில்லை என்றால், அவற்றைக் கண்காணிப்பது கடினம். அவற்றை கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் வேண்டும் என்று அவர் கூறுகிறார்.