உலகம் அழியும் நாளை குறிக்கும் டூம்ஸ்டே கடிகாரம் நள்ளிரவை தொட 90 விநாடிகளே தேவை...?
27 தை 2024 சனி 09:03 | பார்வைகள் : 1871
டூம்ஸ்டே கடிகாரம்: அணுசக்தி அழிவுக்கு உலகம் இன்னும் எவ்வளவு நெருக்கமாக உள்ளது என்பதைக் காட்டும் ஓர் அடையாளமாக இது உள்ளது. இந்தக் கடிகாரம் நள்ளிரவைத் தொட இன்னும் தற்போது 90 விநாடிகள் மட்டுமே தேவை.
விஞ்ஞானிகள் அந்தக் கடிகாரத்தின் முட்களை "டூம்ஸ்டே"க்கு (உலகில் அழிவு ஏற்படும் நாள்) மிக அருகில் நகர்த்தியிருப்பதற்கான காரணங்களைப் பட்டியலிட்டுள்ளனர். ஆனால் அந்த முட்களை மேலும் முன்னோக்கி நகர்த்துவதை நிறுத்திவிட்டனர்.
புதிய அணு ஆயுதப் போட்டியின் அச்சுறுத்தல், யுக்ரேன் போர் மற்றும் காலநிலை மாற்றக் கவலைகள் அனைத்தும் அழிவுக்கான காரணிகள் என்று அவர்கள் கூறினர். இந்தக் கடிகாரத்தின் நேரம் ஆண்டுதோறும் அணு விஞ்ஞானிகள் வெளியிடும் வருடாந்திர செய்தியை அடிப்படையாக வைத்து அமைக்கப்படுகிறது.
கடந்த 2007ஆம் ஆண்டு முதல், செயற்கை நுண்ணறிவு மற்றும் காலநிலை மாற்றம் போன்ற புதிய, மனிதர்களால் உருவாக்கப்பட்ட அபாயங்களின் தாக்கத்தையும், அத்துடன் மிகப்பெரிய அச்சுறுத்தலான அணு ஆயுதப் போரையும் கருத்தில் கொண்டு இந்தக் கடிகாரத்தின் நேரம் மாற்றியமைக்கப்படுகிறது.
செவ்வாய்க்கிழமையன்று, 2024ஆம் ஆண்டுக்கான அணு விஞ்ஞானிகளிள் அறிக்கையில், சீனா, ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகள் அனைத்தும் “தங்கள் அணு ஆயுதங்களை அதிகரிக்க அல்லது நவீனப்படுத்த" பெரும் தொகையைச் செலவழித்து வருவதாகக் கூறப்பட்டுள்ளது. இது "அணு ஆயுதப் போர் குறித்துத் தொடர்ந்து நீடிக்கும் ஆபத்தை" சேர்த்தது.
யுக்ரேனில் நடந்த போர் "எப்போதும் இல்லாத அணுசக்தி அதிகரிப்பின் அபாயத்தை" உருவாக்கியுள்ளது என்று இந்த அறிக்கை கூறுகிறது.
காலநிலை மாற்றம் குறித்த நடவடிக்கையின் பற்றாக்குறை மற்றும் வளர்ந்து வரும் உயிரியல் தொழில்நுட்பங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவுக் (AI) கருவிகளை "தவறாகப் பயன்படுத்துவதில்" தொடர்புடைய ஆபத்துகள் ஆகியவை மேற்கோள் காட்டப்பட்டுள்ளன.
“டூம்ஸ்டே” கடிகாரம் 1947இல் ஜே ராபர்ட் ஓப்பன்ஹெய்மர் மற்றும் அணுகுண்டை உருவாக்கிய சக அமெரிக்க விஞ்ஞானிகளால் நிறுவப்பட்டது.
அதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இரண்டாம் உலகப் போரின் முடிவில், ஜப்பானிய நகரங்களான ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் அதன் பேரழிவு விளைவுகளை அவர்கள் நேரடியாகக் கண்டனர். அதன் அடிப்படையில் அவர்கள் பொது மக்களை எச்சரிக்க விரும்பினர் என்பதுடன் அணு ஆயுதங்கள் மீண்டும் பயன்படுத்தப்படாது என்பதை உறுதிப்படுத்த உலகத் தலைவர்களுக்கு அழுத்தம் கொடுக்க விரும்பினர்.
இந்தக் கடிகாரத்தின் முட்கள் 25 முறை நகர்த்தப்பட்டுள்ளன. 1947ஆம் ஆண்டில், அவை நள்ளிரவு முதல் ஏழு நிமிடங்களில் தொடங்கின. பனிப்போரின் முடிவில் 1991இல், கடிகாரத்தின் முட்களை அவர்கள் நள்ளிரவு முதல் 17 நிமிடங்கள் வரை முன்னோக்கித் திருப்பினர்.
அணு விஞ்ஞானிகள் வெளியிட்ட அறிக்கையின் தலைவர் ரேச்சல் ப்ரோன்சன் பிபிசியிடம் பேசுகையில், "பிரிட்டன் உட்பட ஒவ்வொரு பெரிய நாடும் அணு ஆயுதங்கள் மிக நீண்ட காலத்திற்குப் பயன்படுத்தக் கூடியது போல் தங்கள் அணு ஆயுதங்களில் முதலீடு செய்கின்றன. இது மிகவும் ஆபத்தான நேரம். தலைவர்கள் பொறுப்புடன் செயல்படவில்லை," எனக் கவலை தெரிவித்தார்.
பல ஆண்டுகளாக டூம்ஸ்டே கடிகாரத்தின் நேரத்தை மாற்றியமைப்பதில் ஈடுபட்டுள்ள ரஷ்ய அணு ஆயுத நிபுணரான பாவெல் போட்விக், யுக்ரேன் படையெடுப்பிற்குப் பிறகு அதிபர் புதின் ரஷ்யாவின் அணுசக்தி படைகளை உஷார்படுத்தியபோது அதிர்ச்சியடைந்ததாகக் கூறுகிறார்.
ரஷ்ய அதிபரின் அச்சுறுத்தலுக்கு உலகம் திகிலுடன் பதிலளித்தது. ஆனால் அவர் ஓர் எச்சரிக்கையை வெளிப்படுத்த வேண்டுமென்றே அதுபோன்று செய்ததாகத் தெரிகிறது.
"எங்களுக்கு ஒரு குறிப்பிட்ட சுதந்திரம் உள்ளது என்பதை உறுதிப்படுத்தத்தான் எங்களிடம் அணு ஆயுதங்கள் உள்ளன," என அவர் கூறியதாக போட்விக் கூறுகிறார்.
"ரஷ்ய அதிபர் இந்த அறிக்கைகளை வெளியிடுவதன் மூலம் மேற்குலக நாடுகளை யுக்ரேன் போரில் தலையிடுவதைத் தடுக்க முடியும் என்று நம்பினார். இது சரியான கணக்கீடுதான். இவ்வாறுதான் அணு ஆயுதப் போர் தடுப்பு செயல்படுகிறது."
பல தசாப்தங்களாக ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தங்கள் இருந்தபோதிலும், உலகில் இன்னும் 13,000 அணு ஆயுதங்கள் உள்ளன, அவற்றில் 90% ரஷ்ய மற்றும் அமெரிக்க நாடுகள் வசம் இருக்கின்றன. பிரிட்டன், பிரான்ஸ், சீனா, இந்தியா, பாகிஸ்தான், வட கொரியா ஆகிய மற்ற ஆறு நாடுகள் அணுசக்தி நாடுகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இஸ்ரேலிடம் இந்த ஆயுதங்கள் இருப்பதாகப் பரவலாக நம்பப்படுகிறது, ஆனால் அது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. பெரும்பாலான நவீன அணு ஆயுதங்கள் ஹிரோஷிமா மற்றும் நாகசாகியை அழித்ததைவிட பல மடங்கு சக்தி வாய்ந்தவை.
கடந்த 2021ஆம் ஆண்டில், பிரிட்டன் தனது போர்க் கப்பல்களின் எண்ணிக்கையை 225இல் இருந்து 260 ஆக உயர்த்தியது. மேலும் 35 போர்க் கப்பல்கள் உருவாக்கப்படும் சாத்தியமும், நாட்டின் அணுசக்தியும் அதிக எச்சரிக்கையுடன் உள்ளன. யுக்ரேனில் போர் தொடங்கியதில் இருந்து, மாஸ்கோவின் அணு ஆயுதங்கள் பிரிட்டனுக்கு எதிராகப் பயன்படுத்தப்படலாம் என்று அரசுடன் நெருங்கிய மூத்த ரஷ்ய பிரமுகர்களிடம் இருந்து எச்சரிக்கைகள் வெளிப்பட்டன.
பிரிட்டனின் அணு ஆயுதத் தடுப்புப் பிரிவுப் படை ஸ்காட்லாந்தின் மேற்கில் ஃபாஸ்லேன் ராணுவ தளத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் நான்கு ‘வான்கார்ட்’ நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளன. அவற்றில் அணு ஆயுதங்களை ஏந்திய டிரைடென்ட் ஏவுகணைகள் தயாராக வைக்கப்பட்டுள்ளன.
ஹெச்எம்எஸ் விக்டோரியஸ் நீர்மூழ்கிக் கப்பலில் பணியாற்றிய முன்னாள் லெப்டினன்ட் சிடிஆர் ஃபியர்கல் டால்டன், டிரைடென்ட் ஏவுகணையை உண்மையில் ஏவிய ஒரு சில நபர்களில் ஒருவர். அது போலியாக உருவாக்கப்பட்ட போரின்போது சோதனை அடிப்படையில் ஏவப்பட்டது.
"எப்போதும் ஒரு நீர்மூழ்கிக் கப்பல் 15 நிமிடங்களில் செயல்படுவதற்குத் தயாராக இருந்துகொண்டே இருக்கும்," என்று டால்டன் கூறுகிறார். "நாம் பேசுகையில், அங்கு ஒரு அணுசக்தி தடுப்புப் படை உள்ளது. உலகில் உள்ள விளாதிமிர் புதின் போன்றவர்களுக்கு அது எப்போதும் தயாராக இருப்பது நன்றாகவே தெரியும். அது நம்பகமான அமைப்பு என்பதுடன், தேவைப்பட்டால் அதை எப்போதும் பயன்படுத்தலாம்," என்றார்.
அணுகுண்டு உருவாக்கப்பட்ட காலத்தில் இருந்தே இந்த ஆயுதங்களுக்கு எதிர்ப்பு இருந்து வருகிறது. 1980களில், கிரீன்ஹாம் பொது அமைதி முகாமைச் சேர்ந்த பெண்கள் அனைத்து அமெரிக்க அணுசக்தி ஏவுகணைகளையும் பிரிட்டன் மண்ணில் இருந்து அகற்றப் போராடினர் - எஞ்சிய கடைசி போர்க் கப்பல்களும் 2008ஆம் ஆண்டு வெளியேறின.
இருப்பினும், சஃபோல்க்கில் உள்ள ஆர்ஏஎஃப் லேக்கன்ஹீத்தில் (RAF Lakenheath) - இருக்கும் ராயல் விமானப் படைத் தளத்தில்- அணு ஆயுதக் குறைப்புக்கான பிரசாரம் காரணமாக இப்போது அமெரிக்க ஆயுதங்கள் மீண்டும் திரும்புவதற்கான சாத்தியக் கூறுகளும் குறைந்து வருகின்றன.
பென்டகன் ஆவணங்கள் - அமெரிக்க விஞ்ஞானிகளின் கூட்டமைப்பால் முதலில் அறிவிக்கப்பட்டது - அமெரிக்க "சிறப்பு" ஆயுதங்களுக்கு என இருக்கும் தளத்தில் பாதுகாப்பாக வைக்கப்படும் எனக் கூறுகிறது.
அத்தகைய ஆயுதங்களை வீழ்த்தும் திறன் கொண்ட அமெரிக்க போர் விமானங்கள் 2021இல் லேக்கன்ஹீத்தை வந்தடைந்தன. மேலும் இந்தத் தளத்தில் அணுசக்தி பணியில் ஈடுபடுவதற்கு,போர் வீரர்களுக்கான தங்குமிடங்களை உருவாக்க அமெரிக்க விமானப்படை தற்போது திட்டமிட்டுள்ளது.
"நாங்கள் எங்கள் பக்கத்தில் பொதுக் கருத்தைப் பெற்றுள்ளோம் என்பதை நாங்கள் அறிவோம்," என்று அணு ஆயுதக் குறைப்புக்கான பிரசார அமைப்பைச் சேர்ந்த சோஃபி போல்ட் விளக்குகிறார் - அவரது சிறிய குழு, படைத்தளத்தின் சுற்றளவு வேலிக்கு அருகே முழக்கங்களை எழுப்பியது. "கிட்டத்தட்ட 60% மக்கள் பிரிட்டனில் அணுகுண்டுகளை வைத்திருக்க விரும்பவில்லை," என்கிறார் அவர்.
"இந்தத் தளத்துடன் எங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. இது முற்றிலும் அமெரிக்க கட்டுப்பாட்டில் உள்ளது," என்று மற்றொரு எதிர்ப்பாளர் ஆலன் ரைட் கூறுகிறார். "அடுத்த முறை மீண்டும் டிரம்ப் வெள்ளை மாளிகையில் நுழைந்தால், அவர் அணுகுண்டைப் பயன்படுத்தலாம். ஏனெனில் அவர் புதினைவிட பெரிய அளவிலான அணுசக்தியைப் பெற்றுள்ளார்."
எவ்வாறாயினும், டொனால்ட் டிரம்ப் ஏற்கெனவே யுக்ரேனில் நடந்த போரை 24 மணிநேரத்திற்குள் முடிவுக்குக் கொண்டு வருவதாகக் கூறினார். இருப்பினும் அது எப்படி சாத்தியம் என்று அவர் விளக்கமளிக்கவில்லை. யுக்ரேனுக்கான அமெரிக்க ஆதரவு குறையக்கூடும் என்று சில ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
கடந்த தசாப்தத்தில், அணு ஆயுத கிளப்பில் இணைந்த சமீபத்திய நாடான வட கொரியாவின் அதிபரான கிம் ஜாங்-உன், அணு ஆயுதப் போர் பற்றிய அச்சத்தையும் அதிகரித்துள்ளார். அமெரிக்காவை சென்றடையக்கூடிய அணு ஆயுதங்களைத் தாங்கிச் செல்லக்கூடிய ஏவுகணைகளை சோதனை செய்ததாக அவர் பெருமையாகக் கூறியுள்ளார்.
அணு விஞ்ஞானிகள் ஒவ்வோர் ஆண்டும் அளிக்கும் அறிக்கையைத் தயாரிக்கும் குழுவின் முன்னாள் உறுப்பினரும், ‘டூம்ஸ்டே’ கடிகார ஆலோசகருமான சிக் ஹெக்கர், ஒரு அறிவியல் ஆராய்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக வட கொரியாவின் அணுசக்தி நிலையங்களை ஏழு முறை பார்வையிட்டுள்ளார். மேலும் வட கொரியாவிடம் இப்போது 50 முதல் 60 அணு ஆயுதங்கள் இருக்கலாம் என்று அவர் மதிப்பிடுகிறார்.
"அணு ஆயுதங்கள், அணு ஆயுத பயங்கரவாதம், அணு ஆயுத பரவல் - இவை அனைத்தும் தவறான திசையில் செல்கின்றன என்பது மட்டும் உண்மை," என்று அவர் கூறுகிறார்.