Paristamil Navigation Paristamil advert login

இலங்கை தமிழ் அரசு கட்சியின் புதிய நிர்வாகத் தெரிவில் குழப்பம்

இலங்கை தமிழ் அரசு கட்சியின் புதிய நிர்வாகத் தெரிவில் குழப்பம்

27 தை 2024 சனி 11:31 | பார்வைகள் : 1432


இலங்கை தமிழ் அரசு கட்சியின் 17ஆவது தேசிய மாநாட்டுக்காக இன்று மத்திய குழு கூடி கலந்தாலோசித்து, கட்சியின் புதிய நிர்வாகக் குழுவினரை தெரிவுசெய்தது. 

அவ்வாறு தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர்கள் பின்னர் கூடிய பொதுச்சபையில் முன்வைக்கப்பட்டது. அப்போது, கட்சியின் புதிய நிர்வாகத் தெரிவு தொடர்பான மத்திய குழுவின் தீர்மானத்தை ஏற்க முடியாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

இலங்கை தமிழ் அரசு கட்சியின் புதிய தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கடந்த 21ஆம் திகதி தெரிவுசெய்யப்பட்டிருந்தார். அதை தொடர்ந்து, ஏனைய பதவிகளுக்கான தெரிவுகள் இன்று (27) திருகோணமலை-முருகாபுரி ஜேக்கப் கடற்கரை தனியார் விடுதியில் இடம்பெற்று வருகிறது.

அந்த வகையில் தெரிவுகளுக்காக பொதுச்சபையை கூட்டுவதற்கு முன்னதாக இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழு கூடி ஆலோசித்திருந்தது.

மத்தியகுழுவின் ஆலோசனைக்கமைய, இலங்கை தமிழ் அரசு கட்சியின் பொதுச் செயலாளராக திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த சண்முகம் குகதாசன், சிரேஷ்ட உபதலைவராக வட மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், இணை பொருளாளர்களாக மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் மற்றும் கனகசபாபதி, துணைத் தலைவர்களாக ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா, பாராளுமன்ற உறுப்பினர்களான சார்ள்ஸ் நிர்மலநாதன், கலையரசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன், முன்னாள் வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், இணை செயலாளர்களாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராஜா, ரஞ்சனி கனகராஜா, முன்னாள் மட்டக்களப்பு மாநகர முதல்வர் சரவணபவன், பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் என 13 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டிருந்தனர்.

அதன் பின்னர் பொதுச்சபையைக் கூட்டி மத்திய குழு எடுத்த தீர்மானங்கள் பொதுச்சபையில் முன்வைக்கப்பட்டது.

இருப்பினும் பொதுச்சபையில் அங்கம் வகிக்கின்ற சில உறுப்பினர்கள் மத்திய செயற்குழுவின் இந்த முடிவை ஏற்க மறுத்ததுடன், பொதுச்சபையில் வாக்கெடுப்பை நடாத்தி பதவிகளுக்கான தெரிவுகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நிர்வாகத் தெரிவுகள் தொடர்பில் தொடர்ந்தும் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்