Paristamil Navigation Paristamil advert login

இலங்கை தமிழரசு கட்சிக்குள் குழப்பம் - சுமந்திரனுக்கு பதவி கொடுக்க மறுத்த சிறீதரன்

இலங்கை தமிழரசு கட்சிக்குள் குழப்பம் - சுமந்திரனுக்கு பதவி கொடுக்க மறுத்த சிறீதரன்

28 தை 2024 ஞாயிறு 11:28 | பார்வைகள் : 1747


இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய மற்றும் பொதுக் குழு கூட்டம் நேற்று இடம்பெற்றிருந்த நிலையில், பெரும் சர்ச்சைகளும் சண்டைகளும் ஏற்பட்டிருந்தன.

இதனை பலரும் விமர்சித்திருந்த நிலையில், நேற்றைய கூட்டத்தில் என்ன நடந்தது என்றத் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

நேற்று காலை 10.30 மணிக்கு கட்சியின் மத்திய குழு ஆரம்பமாகியது. அப்போது எழுந்த எம்.ஏ.சுமந்திரன் ''சிறீ எனக்கு சிரேஷ்ட உப தலைவர் பதவி தருவதாக நேற்று முந்தினம் சொன்னார். எனக்கு அந்த பதவி வேண்டாம் எனக்கு பொதுச்செயலாளர் பதவிதான் வேண்டும்'' என்றார்.

அப்போது புதிய தலைவர் சிறீதரன், “நீங்கள் எனக்கு எதிராக போட்டியிட்டவர். உங்களை செயலாளராக வைத்துக்கொண்டு இயங்க முடியாது. அத்தோடு, எம் கட்சி மரபின்படி செயலாளர் பதவி கிழக்கிற்குதான் கொடுக்கப்பட வேண்டும்” என்றார்.

இதன் போது கிழக்கை சேர்ந்த மத்தியகுழு உறுப்பினர்களும் கடும் எதிர்ப்பை சுமந்திரனுக்கு வெளியிட்டனர்.

வேறு வழியில்லாத நிலையில் சுமந்திரன், ''அப்படியானால் கிழக்கின் மூன்று மாவட்டங்களின் தலைமைகளில் (சாணக்கியன், கலையரசன், குகதாசன்) ஒருவருக்கு கொடுத்தால் ஏற்கிறேன்'' என்றார். அப்போது சிறீநேசனின் பெயர் சிறீதரன் தரப்பினரால் முன்மொழியப்பட்டது.

சுமந்திரன் சாணக்கியனை முன்மொழிந்தார். குகதாசன் தனக்கு செயலாளர் பதவி தரப்பட வேண்டும் என்றார். கடும் குழப்பம் ஏற்பட்டது. சிறிது நேரத்தின் பின் அனைவரும் கலந்துரையாடி முழுமன விருப்பம் இன்றி குகதாசனை செயலாளர் ஆக்குவோம் என்று முடிவுக்கு வந்தனர்.

மற்றைய பதவிகளுக்கான தெரிவுகளும் இறுதி செய்யப்பட்டன. அதில் எந்த குழப்பங்களும் வரவில்லை. இத்தோடு, மத்தியகுழு கூட்டம் முடிவடைந்தது.

பொதுக்குழு கூட்டம் ஆரம்பமாகியது. அப்போது மத்தியகுழுவில் எடுக்கப்பட்ட முடிவை அறிவித்தனர். அப்போது பொதுக்குழு “செயலாளர் குகதாசன்” என்ற முடிவை ஏற்கவில்லை. கடும் குழப்பமும் அமளிதுமளியும் ஏற்பட்டது.

இதன்போது எழுந்த மாவை சேனாதிராஜா கூட்டத்தை அமைதிப்படுத்தி செயலாளருக்கான தேர்தல் நாளை நடைபெறும் என்று அறிவித்தார். அதன் பின் மதிய உணவுக்காக இடைவேளை விடப்பட்டது.

மதிய உணவின் பின் கூட்டம் மீண்டும் ஆரம்பமாகியது. இடைவேளையின் பின் கூட்டம் நடைபெற்ற இடத்திற்குள் பொதுக்குழுவில் இல்லாத பலர் வந்திருந்தார்கள்.

அப்போது வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்ட போது எழுந்த சுமந்திரன், ''மத்தியகுழுவில் எடுக்கப்பட்ட தீர்மாணத்தை எத்தனை பேர் ஆதரக்கிறீர்கள் என்று கை உயர்த்துங்கோ'' என்றார்.

இளம் பாராளுமன்ற உறுப்பினர் இரண்டு கைகளையும் உயர்த்தினார். ஒரு எம்பியின் சாரதி இரண்டு கையையும் உயர்த்தினார். நிகழ்வு நடைபெற்ற விடுதி ஊழியர்களும் உள்ளே நின்று கை உயர்த்தினார்கள். இவை அனைத்தையும் சேர்த்து 112 வாக்குகள் என எண்ணினார்கள்.

பின் தீர்மானத்தை யார் ஏற்கவில்லை என கையுயர்த்த கோரினார் சுமந்திரன், அப்போது 104 பேர் உருட்டுமாட்டு செய்யாமல் கையுயர்த்தினார்கள்.

இதன் பின் குழப்ப நிலை தோன்றியது. அப்போது எழுந்த தலைவர் மாவை இன்றைய தெரிவுகள் இரத்து செய்யப்படுகின்றன. நாளை மாநாடு நடைபெறாது என்று அறிவித்தார்.

இதுதான் நேற்று நடைபெற்ற விடயங்களின் முழுத்தொகுப்பு. இவ்வளவு குழப்பத்திற்கு காரணம் சுமந்திரன் செயலாளர் பதவிக்கு போட்டி போட போகிறேன் என்று சொன்னதுதான்.

புதிய தலைவரை இயங்கவிடாமல் தடுத்து கட்சியை குழப்பும் சிலரது நிகழ்ச்சி நிரல் நேற்று வெளிப்படையாக தெரிந்ததை அவதானிக்க முடிந்தது.

 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்