◉ ஆசிரியர் வேலை நிறுத்தம்! - பரிசில் 130 பாடசாலைகள் மூடப்படுகின்றன!
30 தை 2024 செவ்வாய் 06:00 | பார்வைகள் : 5486
நாளை மறுநாள் வியாழக்கிழமை ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதை அடுத்து, தலைநகர் பரிசில் 130 பாடசாலைகள் மூடப்பட உள்ளன.
பரிசில் உள்ள 638 பாடசாலைகளில் 130 பாடசாலைகள் மூடப்பட்டு கல்விச் செயற்பாடுகள் தடைப்படுவது பெரும் கவலையளிப்பதாக தெரிவிக்கப்படுகிறது. கிட்டத்தட்ட 65% சதவீதமான ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
இந்த வேலை நிறுத்தம், புதிய கல்வி அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள Amélie Oudéa-Castéra இனை பதவி விலக்கக்கோரி இடம்பெற உள்ளது. ஆசிரியர்களுக்கான தொழிற்சங்கமான FSU-SNUipp, நேற்று திங்கட்கிழமை இந்த வேலை நிறுத்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
கடந்த பத்து நாட்களுக்கு முன்பாக பிரான்சின் புதிய கல்வி அமைச்சராக Amélie Oudéa-Castéra நியமிக்கப்பட்டார். அவர் தனது இரு பிள்ளைகளையும் தனியார் பாடசாலைகளில் பயிற்றுவிக்கிறார். இந்த விடயமே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பல தரப்பில் எதிர்ப்பு வலுத்தும் மக்ரோனின் அரசாங்கம் இது தொடர்பில் அமைதி காத்து வந்தது. அதையடுத்தே இந்த ஆசிரியர் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.