Paristamil Navigation Paristamil advert login

தலைமை பொறுப்பை ஏற்கும் பெண்களுக்கு...சில டிப்ஸ்

தலைமை பொறுப்பை ஏற்கும் பெண்களுக்கு...சில டிப்ஸ்

30 தை 2024 செவ்வாய் 08:49 | பார்வைகள் : 2071


அரசு, தனியார் என அனைத்து துறை அலுவலகங்களிலும் தலைமை பொறுப்பை ஏற்கும் பெண்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து கொண்டிருக்கிறது. கடின உழைப்பு, அர்ப்பணிப்பு, நேர மேலாண்மை போன்ற செயல்பாடுகள் அவர்களுக்கு பதவி உயர்வை பெற்றுக் கொடுக்கின்றன. ஆண்களுக்கு இணையாக அத்தகைய உயர் பதவியை அலங்கரிக்கும்போது ஒருசில பிரச்சினைகளையும் எதிர்கொள்ள நேரிடும். பெண்களை பொறுத்தவரை பதவி உயர்வு மலர் கிரீடமாக அமைந்தாலும் பலவித எதிர்விளைவுகளை சமாளிக்க வேண்டிய நிர்பந்தத்தையும் ஏற்படுத்துகிறது.

அதிலும் பெண் தலைமையை ஏற்றுக்கொள்ள சில ஆண்கள் விரும்பமாட்டார்கள். இது அவர்களுடைய குணமாக அமைந்திருக்கலாம். பெண் தலைமை என்றதும் அவர்களிடத்தில் ஒருவித தாழ்வு மனப்பான்மை வேரூன்றி விடும். பெண் அதிகாரிகளின் உத்தரவுகளை மீறி நடப்பதற்கு முயற்சிப்பார்கள். தலைமை பொறுப்பு வகிக்கும் பெண்ணை காட்டிலும் தனக்கு அதிக திறமை இருப்பதாக காட்டிக்கொள்ள முயற்சி செய்வார்கள். இந்த பதவிக்கு இவர் தகுதியற்றவர் என்றும் சிலர் குற்றம் சாட்டுவார்கள்.

தலைமை பொறுப்பில் இருக்கும் பெண்கள் இதையெல்லாம் எதிர்கொள்ளும் தைரியம், மன பக்குவம் கொண்டவர்களாக இருக்க வேண்டும். அதற்காக தனக்கு கீழ் பணிபுரியும் ஊழியர்களிடம் அதிகாரத் தோரணையுடனோ, கடுமையாகவோ நடந்துகொள்ளக்கூடாது.

சக பணியாளர்களுக்கு `பாஸாக' இருப்பதற்கு தன்னுடைய திறமையை நிரூபிக்க பொறுமையுடன் நடந்து கொள்ள வேண்டும். அவர்களின் நடவடிக்கைகள் மனம் நோகும்படி அமைந்தாலும் சகிப்பு தன்மை கொண்டிருக்க வேண்டும். சட்டென்று டென்ஷனாகி எவரையும் கடிந்து கொள்ளக்கூடாது.

இதில் மன வருத்தப்பட வைக்கும் இன்னொரு விஷயம் என்னவென்றால், பெண் தலைமைப் பதவியில் இருப்பதை உடன் பணிபுரியும் சில பெண்களே விரும்ப மாட்டார்கள். `என்னைக் காட்டிலும் எந்த விதத்தில் அவர் தகுதியானவர்' என்று கருதுவார்கள். `உழைப்பு எங்களுடையது. பதவி, புகழ் எல்லாம் இவர்களுக்கா?' என்றும் நினைப்பார்கள். ஒட்டுமொத்த பணியாளர்களின் கூட்டு முயற்சியால் நிர்வகிக்கப்படுவதுதான் அலுவலகமும், நிர்வாகமும் என்பதை புரிய வைக்க வேண்டும். `நாளை நான் வகிக்கும் இதே பொறுப்புக்கு நீங்கள் யாரேனும் வரக்கூடும். அதற்கு உங்களை தகுதியானவர்களாக மாற்றிக்கொள்ளுங்கள்' என்று சக பணியாளர்களை உற்சாகப்படுத்த வேண்டும்.

தலைமை பொறுப்புக்கு வருபவர்கள் கையாள வேண்டிய முக்கியமான விஷயம் ஒன்றும் இருக்கிறது. அனைவரிடமும் இன்முகத்துடனும், பக்குவமாகவும் பேசும் சுபாவம் கொண்டவர்களாக தங்களை வெளிக்காட்டிக்கொள்ள வேண்டும். இந்த சுபாவம்

மற்றவர்கள் மத்தியில் உங்களை எளிதில் ஈர்க்க வைத்துவிடும். ஏதேனும் தவறு நடந்துவிட்டால் அந்த சமயத்தில் தலைமை பொறுப்பில் இருப்பவர்களின் அணுகுமுறை மென்மையானதாக இருக்கவேண்டும். அதேநேரம் மீண்டும் அதுபோன்ற தவறு நடக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தை சக ஊழியர்கள் மனதிலும் விதைத்து விட வேண்டும்.

தங்களுடைய செயல்பாடுகளுக்கு ஒத்துழைக்கவில்லை என்பதற்காக பலர் முன்னிலையில் எவரையும் அவமானப்படுத்தக்கூடாது. தாங்கள் நடந்து கொள்ளும் விதத்தை பார்த்து சம்பந்தப்பட்டவரே தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்க வேண்டும். குழுவாக இணைந்து செய்த வேலைகள் வெற்றிகரமாக நிறைவடையும்போது குறிப்பிட்ட ஒரு சிலரை மட்டும் பாராட்டுவது கூடாது. அது மற்றவர்கள் மத்தியில் கருத்து வேறுபாட்டை உருவாக்கும். அனைவரையும் பாரபட்சம் இன்றி வழிநடத்துவது தான் தலைமைக்கு அழகு.

சின்னச்சின்ன வேலையாக இருந்தாலும் அதனை உடனே செய்து முடிப்பவர்களை சக ஊழியர்கள் முன்னிலையில் பாராட்ட வேண்டும். அது மற்றவர்கள் மத்தியில் உங்களுக்கு உயரிய மதிப்பை ஏற்படுத்தித் தரும்.

அதேபோன்ற பாராட்டை தாங்களும் பெற வேண்டும் என்று மற்றவர்களும் விரும்புவார்கள். ஒருவரை பாராட்டும் போது பயன்படுத்தும் வார்த்தைகள் மற்றவா்களை குறை கூறுவதுபோல் இருக்கக்கூடாது. சக பணியாளர்கள் முன்பு உண்மையான உழைப்பு மதிக்கப்பட வேண்டும்.

ஒரு முக்கியமான காரியம் பற்றி முடிவு எடுக்கும்போது அது பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தப்பட வேண்டும். அந்த முடிவை பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று கருத்து கேட்கவும் வேண்டும். இது நல்ல அணுகுமுறையும் கூட.

அந்த முடிவின் விளைவு எப்படி இருந்தாலும் அது தனிப்பட்ட முறையில் தலைமையை பாதிக்காது. சரியான நேரத்தில் சரியான முடிவும் எடுக்க வேண்டும். அதுதான் நல்ல தலைமை பண்பாக அமையும். அதையே மேலிடமும் எதிர்பார்க்கும்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்