உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம் இன்று முதல் அமல்
31 தை 2024 புதன் 02:09 | பார்வைகள் : 2143
முதல்வர் துவக்கி வைத்த, 'உங்களை தேடி உங்கள் ஊரில்' என்ற புதிய திட்டம், இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.<br><br> 'பொதுமக்கள் முகாம்களை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்' என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அரசு செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும், தடையின்றி மக்களை சென்றடைவதை உறுதி செய்யும் நோக்கத்தில், 'உங்களை தேடி உங்கள் ஊரில்' என்ற புதிய திட்டத்தை, கடந்த நவ., 23ம் தேதி முதல்வர் அறிவித்தார். இத்திட்டம் இன்று நடைமுறைக்கு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ், சென்னை தவிர்த்து மற்ற மாவட்டங்களில், குறிப்பிட்ட தாலுகாவில், ஒவ்வொரு மாதமும் நான்காவது புதன்கிழமை, உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம், கலெக்டர் தலைமையில் நடக்கும்.
முகாம் நடக்கும் தாலுகா குறித்த தகவல், முன்கூட்டியே பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும். முகாம் நடக்கும் அன்று காலை 9:00 மணி முதல், மறுநாள் காலை 9:00 மணி வரை, மாவட்டகலெக்டர் மற்றும் இதர உயர் அலுவலர்கள், அந்த தாலுகாவில் தங்கி, பல்வேறு அரசு துறைகளின் வழியே செயல்படுத்தப்படும் திட்டங்கள், சேவைகள் போன்றவற்றின் செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு செய்வர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.