ICC தலைவராக ஜெய் ஷா இரு பதவிகளில் இருந்து ராஜினாமா.?
31 தை 2024 புதன் 08:10 | பார்வைகள் : 2148
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) செயலாளராக உள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷாவுக்கு மேலும் ஒரு முக்கிய பதவி கிடைக்கப் போகிறதா..?
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) தலைவராக ஜெய் ஷா விரைவில் தேர்வு செய்யப்பட உள்ளாரா?
இந்த ஆண்டு நவம்பரில் ICC தலைவராக ஜெய் ஷா (Jai Shah) பதவியேற்பார் என்றும் அதற்கான அடித்தள வேலைகளும் நடைபெற்று வருவதாகவும் தேசிய ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்தக் கூற்றுகளுக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் அவர் இரண்டு முக்கியப் பதவிகளில் இருந்து விரைவில் ராஜினாமா செய்யப் போவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஜெய் ஷா தற்போது பிசிசிஐ செயலாளராகவும், ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் (ஏசிசி) தலைவராகவும் உள்ளார்.
இந்தோனேசியாவின் Bali நகரில் ACC ஆண்டு பொதுக் கூட்டம் (AGM) விரைவில் நடைபெற உள்ளது. இந்த கூட்டங்களில் ஜெய் ஷா தனது முடிவை அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏசிசி தலைவரின் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள், தற்போது ஜெய் ஷா இரண்டாவது ஆண்டில் இருக்கிறார்.
2019-இல் பிசிசிஐ செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார் ஜெய் ஷா. ஆனால், ரோஜர் பின்னி தலைவராக இருந்தபோதும் ஜெய் ஷாவுக்கு அனைத்து அதிகாரங்களும் இருந்தன என்பது பகிரங்க ரகசியம்.
ஐசிசி தலைவர் பதவிக்காக, பிசிசிஐ செயலாளர் மற்றும் ஏசிசி தலைவர் பதவியில் இருந்து ஜெய் ஷா விலகுவார் என்பது தகவல். முழு விவரம் விரைவில் தெரியவரும்.