'அன்னாசிப்பழ கேசரி'
31 தை 2024 புதன் 15:14 | பார்வைகள் : 1733
உடல் பருமனை குறைக்க விரும்புபவர்களின் டயட்டில் கண்டிப்பாக இந்த அன்னாசிப்பழம் இடம் பெற்றிருக்கும். இப்படி பல ஆரோக்கிய நன்மைகளை உள்ளடக்கிய அன்னாசிப் பழத்தைக் கொண்டு எவ்வாறு வீட்டிலேயே சுவையான கேசரியை செய்யலாம் என்று இங்கே பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
அன்னாசிப்பழம் - 1
ரவா - 1 கப்
சர்க்கரை - தேவைக்கேற்ப
நெய் - 1/2 கப்
முந்திரி - 10 - 15
உலர் திராட்சை - 10 - 15
ஏலக்காய் - 1/2 டீஸ்பூன்
தண்ணீர்
செய்முறை :
முதலில் அன்னாசி பழத்தின் தோலை நன்றாக சீவி நீக்கிவிட்டு அதை சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்து கொள்ளவும்.
வெட்டிய அன்னாசிபழத்தில் முக்கால் வாசி அளவை எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் நன்றாக மசிய அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து அடுப்பில் வாணலியை ஒன்றை வைத்து நெய் விட்டு அதில் முந்திரி மற்றும் உலர் திராட்சையை சேர்த்து நன்றாக வறுத்து தனியே வைத்துக்கொள்ளுங்கள்.
பிறகு அதே நெய்யில் ரவையை சேர்த்து அதையும் நன்கு வறுத்து கொள்ளவும்.
ரவை நன்கு வறுபட்டவுடன் அதில் ஏற்கனவே அரைத்து வைத்துள்ள அன்னாசி பழத்தை சேர்த்து நன்கு கிளறிவிடவும்.
பின்பு அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கிளறி விட்டு அதனுடன் இனிப்பிற்கேற்ப சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து விட்டுக்கொள்ளவும்.
சர்க்கரை நன்றாக இளகி ரவாவுடன் மிக்ஸ் ஆனவுடன் நுணுக்கிய ஏலக்காய் சேர்த்து கிளறி விட்டுக்கொள்ளுங்கள்.
பிறகு வறுத்து வைத்துள்ள முந்திரி, உலர் திராட்சை மற்றும் மீதமுள்ள பொடியாக நறுக்கிய அன்னாசிப்பழத்தை சேர்த்து நன்றாக கலந்து கடைசியாக சிறிதளவு நெய் சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான ‘அன்னாசிப்பழ கேசரி’ ரெடி…