Paristamil Navigation Paristamil advert login

ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையால் கைது: புதிய முதல்-மந்திரி யார்..?

ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையால் கைது: புதிய முதல்-மந்திரி யார்..?

31 தை 2024 புதன் 16:38 | பார்வைகள் : 969


ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநில முதல்-மந்திரியாக ஹேமந்த் சோரன் பதவி வகித்து வருகிறார். ஹேமந்த் சோரன் மீது சுரங்க முறைகேடு வழக்கு நிலுவையில் உள்ளது. இவ்வழக்கில் அமலாக்கத்துறையும் இணைந்து விசாரணை நடத்தி வருகிறது. ஹேமந்த் சோரன் மீதான வழக்கில் ஏற்கனவே 14 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவ்வழக்கில் ஹேமந்த் சோரனை விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டு 10 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. கடந்த சில நாட்களுக்கு முன்னர்தான் விசாரணைக்கு ஹேமந்த் சோரன் ஆஜரானர். இதனையடுத்து மீண்டும் அமலாக்கத்துறை அவரை விசாரணைக்கு அழைத்தது. ஆனால் ஹேமந்த் சோரன் விசாரணைக்கு ஆஜராகாமல் திடீரென தலைமறைவானார். அவருக்காக டெல்லி பங்களாவில் 30 மணிநேரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் காத்திருந்தனர்.

இந்த சூழலில் டெல்லியில் இருந்து ராஞ்சி திரும்பிய ஹேமந்த் சோரன், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.எல்.ஏக்கள் ஆலோசனைக் கூட்டத்தை கூட்டினார். இந்தக் கூட்டத்தில் ஜனவரி 31-ந் தேதி அமலாக்கத்துறை விசாரணையின்போது தாம் கைது செய்யப்பட்டால் புதிய முதல்-மந்திரி யார் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. 

ஹேமந்த் சோரன் மனைவி கல்பனாவை முதல்-மந்திரியாக்க  விரும்புவதும் ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் கல்பனாவும் பங்கேற்றார். இப்பின்னணியில் தற்போது ஹேமந்த் சோரனிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். 

இந்நிலையில் சுரங்க முறைகேடு வழக்கில் ஜார்க்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் 6 மணி நேர விசாரணக்குப் பிறகு தற்போது அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். 

முன்னதாக முதல்-மந்திரி பதவியில் இருந்து ஹேமந்த் சோரன் ராஜினாமா செய்தார். அம்மாநில கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணனை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். அதனை அவர் ஏற்றுக்கொண்டார். இந்நிலையில் ஹேமந்த் சோரன் அமைச்சரவையில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த சம்பாய் சோரன், புதிய முதல்-மந்திரியாக பதவியேற்க உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. 

ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ஜார்க்கண்ட் தலைநகரில் பதற்றம் நிலவி வருகிறது. தலைநகர் ராஞ்சியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 7,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.  

வர்த்தக‌ விளம்பரங்கள்