தமிழக தளவாட வசதிகளுக்கு ஸ்பெயின் ரூ.2,500 கோடி முதலீடு
2 மாசி 2024 வெள்ளி 02:14 | பார்வைகள் : 1498
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், 2,500 கோடி ரூபாயில் தளவாட வசதிகள் அமைக்க, ஸ்பெயின் நாட்டின், 'ஹபக் லாய்டு' நிறுவனத்துடன், முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
சரக்கு முனையங்கள் மற்றும் சரக்கு கையாளும் பூங்காக்களை அமைப்பதில், உலகளவில் முன்னணியாக திகழும், 'ஹபக் லாய்டு' நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் ஜெஸ்பெர் கன்ஸ்ட்ரப், இயக்குனர் ஆல்பர்ட் லாரென்ட் ஆகியோர், நேற்று முன்தினம் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினர்.
சந்திப்பின் போது, 2,500 கோடி ரூபாய் முதலீட்டில், துாத்துக்குடி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், தளவாட வசதிகள் அமைக்க, இந்நிறுவனம் முன்வந்துள்ளது.
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், முதல்வர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது. இம்முதலீடு, 1,000 பேருக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துவதோடு, தமிழகத்தின் எதிர்கால தொழில் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.
அதைத்தொடர்ந்து, சாலை கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனமான, 'அபர்ட்டிஸ்' நிறுவனத்தின் லாரா பெர்ஜனோ, முதல்வரை சந்தித்து பேசினார்.
அப்போது முதல்வர் அவரிடம், அபர்ட்டிஸ் நிறுவனம், தமிழகத்தின் சாலை கட்டமைப்புகளில் முதலீடு செய்ய கேட்டுக் கொண்டார்.
தமிழகத்தின் மாநில நெடுஞ்சாலை கட்டமைப்பில் முதலீடு செய்ய, அபர்ட்டிஸ் நிறுவனம் ஆர்வம் தெரிவித்துள்ளது.
சந்திப்பின் போது, அமைச்சர் ராஜா, வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் விஷ்ணு ஆகியோர் உடனிருந்தனர்.