Paristamil Navigation Paristamil advert login

சனாதன தர்மம் குறித்து பேசிய விவகாரம் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பெங்களூரு கோர்ட்டு சம்மன்

சனாதன தர்மம் குறித்து பேசிய விவகாரம் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பெங்களூரு கோர்ட்டு சம்மன்

2 மாசி 2024 வெள்ளி 14:15 | பார்வைகள் : 2391


சென்னையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 2-ந்தேதி சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மத்தை டெங்கு, மலேரியா போல் ஒழிக்க வேண்டும் என்று பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு நாடு முழுவதும் பல்வேறு இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. 

இந்நிலையில் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக பெங்களூருவைச் சேர்ந்த பரமேஷ் என்பவர் பெங்களூருவில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், இது தொடர்பாக வரும் மார்ச் 4-ந்தேதி நேரில் ஆஜராகுமாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சம்மன் அனுப்ப கோர்ட்டு உத்தரவிட்டது. 

இது குறித்து மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தர்மபால் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகனான அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மத்திற்கு எதிரான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, சனாதன தர்மத்தை டெங்கு, மலேரியா போல் ஒழிக்க வேண்டும் என்று பேசியுள்ளார். 

அவரது பேச்சு அனைத்து செய்தி ஊடகங்களிலும் வெளியான நிலையில், உதயநிதி ஸ்டாலின் தனது கருத்தில் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார். அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்பட்டுள்ள சூழலில், இந்து தர்மத்தின் மீதான பக்தியும், விழிப்புணர்வும் அதிகரித்துள்ளது. இதுபோன்ற பேச்சுக்கள் இந்து தர்மத்தை பின்பற்றுபவர்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக அமையும். உதயநிதி ஸ்டாலினை வரும் மார்ச் 4-ந்தேதி நேரில் ஆஜராக கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது" என்று தெரிவித்தார். 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்