மத்திய அரசிடம் நிலுவைத் தொகை கோரி கோல்கட்டாவில் மம்தா தர்ணா
2 மாசி 2024 வெள்ளி 16:21 | பார்வைகள் : 1858
மத்திய அரசிடம் இருந்து மேற்கு வங்கத்துக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்கக் கோரி, மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கோல்கட்டாவில் தர்ணா போராட்டம் நடத்தினார்.
மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, 'மாநிலத்தில் செயல்படுத்தப்படும் மக்கள் நலத் திட்டங்களுக்கு மத்திய அரசிடம் இருந்து வர வேண்டிய பல ஆயிரம் கோடி ரூபாய் நிலுவைத் தொகை கிடைக்கவில்லை' என சமீபத்தில் குற்றஞ்சாட்டியிருந்தார்.
இந்நிலையில், மம்தா பானர்ஜி நேற்று கோல்கட்டாவின் மைதான் பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்திய பின், தர்ணாவில் ஈடுபட்டார். மத்திய அரசு, 100 நாள் வேலை திட்டம், பிரதமரின் வீடு கட்டும் திட்டம் உட்பட பல்வேறு திட்டங்களுக்கு வழங்க வேண்டிய பல ஆயிரம் கோடி ரூபாயை நிலுவை வைத்துள்ளது.
இந்த தொகைகளை உடனடியாக வழங்க வேண்டும்,” என அவர் கூறினார். தர்ணா நடக்கும் இடத்தின் அருகே, சிறிய கூடாரத்தில் முதல்வர் அலுவலகத்தை அமைத்திருந்தனர். இதில் இருந்தபடி முக்கிய கோப்புகளில் மம்தா கையெழுத்திட்டார்.