Paristamil Navigation Paristamil advert login

நிறைவேற்றப்பட்டுள்ள நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம் செல்லுபடியாகுமா ?

நிறைவேற்றப்பட்டுள்ள நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம் செல்லுபடியாகுமா ?

3 மாசி 2024 சனி 08:22 | பார்வைகள் : 2167


இலங்கை பாராளுமன்றத்தில் 23, 24 ஆகிய இரு தினங்களில் பல்வேறு வாதப்பிரதிவாதங்களுக்கு மத்தியில் முன்னெடுக்கப்பட்ட சர்ச்சைகளுக்குரிய உள்ளடக்கங்கள் நிரம்பிய உத்தேச நிகழ்நிலை காப்புச் சட்ட மூலத்தின் மீதான விவாதம் நிறைவுக்கு வந்து சட்டமூலமும் நிறைவேற்றப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன அறிவித்துள்ளார்.

அச்சட்டமூலம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுவதா, இல்லையா என்பது உட்பட மூன்று வாக்கெடுப்புக்கள் நடத்தப்பட்ட நிலையில்தான் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, விவாதம் நடத்துவதா, இல்லையா என்பதற்காக முன்னெடுக்கப்பட்ட வாக்கெடுப்பில் ஆதரவாக 83 வாக்குகளும் எதிராக 50 வாக்குகளும் அளிக்கப்பட்டன. அதன் பிரகாரம் 33 மேலதிக வாக்குகள் காரணமாக சட்டமூலம் மீதான விவாதம் முன்னெடுக்கப்பட்டது.

பின்னர், குறித்த சட்டமூலம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு ஈற்றில் குழு நிலையில் திருத்தங்கள் முன்வைக்கப்பட்டபோது பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடியால் சட்டமூலத்தின் 36ஆவது பிரிவு தொடர்பில் முன்வைக்கப்பட்ட திருத்தத்துக்கு வாக்கெடுப்பு கோரப்பட்டது. அதற்காக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் குறித்த திருத்தத்துக்கு ஆதரவாக 51 வாக்குகளும், எதிராக 92 வாக்குகளும் அளிக்கப்பட்டு 41 மேலதிக வாக்குகளால் அந்தத் திருத்தம் தோற்கடிக்கப்பட்டது.

அதன் பின்னர், உத்தேச நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்தின் மீது எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியல்லவால் வாக்கெடுப்புக் கோரப்பட்டதையடுத்து நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் சட்டமூலத்துக்கு ஆதரவாக 108 வாக்கும் எதிராக 62 வாக்குகளும் பதிவாகின. இதற்கமை இந்தச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு 46 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், இச்சட்டமூலத்தின் மீதான மூன்றாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு கோரப்பட்டபோது சபையில் காணப்பட்ட குழப்ப நிலைமைகள் காரணமாக அந்த விடயம் கருத்தில் கொள்ளப்படவில்லை என்பது தேசிய மக்கள் சக்தியின் பாரிய குற்றச்சாட்டாக உள்ளது.

விசேடமாக, சபையில், குழுநிலை திருத்தங்களை சபை முதல்வரான அமைச்சர் கலாநிதி. சுசில் பிரேமஜயந்த வாசித்தபோது ஆளும் தரப்பினர் அவரைச் சூழ்ந்து பாதுகாப்பு அளித்தனர்.

அத்துடன் எதிர்க்கட்சினருக்கு எதிராக கோசங்களையும் தாராளமாக எழுப்பினார்கள்.

இதனால், மேற்கொள்ளப்பட்ட அச்சட்டமூலத்தில் உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டிய விடயங்களில் செய்யப்பட்ட மாற்றங்கள், அதற்கு மேலதிகமாக மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் பற்றிய தெளிவொன்றை எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் யாரும் அறிந்திருக்கவில்லை.

அது ஒருபுறம் இருக்கையில், உத்தேச நிகழ்நிலை காப்புச் சட்ட மூலம் துறைசார் மேற்பார்வைக் குழுவில் அனுமதிக்கப்பட்டமை, முதல் உறுப்பினர்களுக்காக சபையில் சமர்ப்பிக்கப்பட்ட வடிவத்தின் பிரதியில் காணப்படுகின்ற உள்ளடக்கம், நீதிமன்றம் பரிந்துரைத்த விடயங்கள் கவனம் செலுத்தப்பட்டு திருத்தங்கள் செய்யப்பட்டமை, குழுநிலையில் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் திருத்தங்கள்  தெளிவுபடுத்தப்படாமை, மூன்றாவது வாசிப்பு மீது வாக்கெடுப்பு கோரப்பட்டும் அதற்கு அனுமதிக்கப்படாமை வரையில் சர்ச்சைகள் குறைவின்றி காணப்படுகின்றன.

குறிப்பாக, உத்தேச நிகழ்நிலை காப்புச் சட்ட மூலத்துக்கு கடந்த 22ஆம் திகதி ஊடகம், இளைஞர், மரபுரிமை மற்றும் புதிய பிரஜைகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அங்கீகரித்துள்ளதாக அக்குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் லலித் வரண்குமார அறிவித்தார்.

அந்த அறிவிப்பு வெளியாகியிருந்தபோதும் விவாதம் ஆரம்பிப்பதற்கு சற்று முன்னரேயே அதாவது 23ஆம் திகதி காலையில் தான் துறைசார் மேற்பார்வைக்குழு அனுமதி வழங்கியதாக கூறப்பட்ட இரண்டு தாள்களை உள்ளடக்கியவாறான சட்டமூலம் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது.

துறைசார் மேற்பார்வைக் குழு விசேடமாக உயர்நீதிமன்றத்தின் பரிந்துரைகள் அடங்கிய சட்டமூலமொன்று அனுமதியளிப்பதாக இருந்தால் அப்பரிந்துரைகளை மையப்படுத்திய பட்டியலைக் குறிப்பிட்டு மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் அடங்கிய பட்டியலையும் வெளிப்படுத்த வேண்டும்.

அத்துடன், குறித்த விடயங்களை உள்ளடக்கிய சட்டமூலத்தினை விவாதம் ஆரம்பிப்பதற்கு முன்னைய நாளின் நண்பகலுக்கு முன்னராக உறுப்பினர்களுக்கு கிடைக்கப்பெறச் செய்தல் வேண்டும் என்பது பாராளுமன்ற மரபாக பின்பற்றப்பட்டு வருகிறது.

ஆனால், குறித்த சட்டமூலம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்னதாக அவ்விதமான நிலைமைகள் பின்பற்றப்படவில்லை. இந்த விடயங்களை உள்ளடக்கி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் எதிர்க்கட்சிகளின் கூட்டணியினர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவைச் சந்தித்தபோது, ‘கட்சித் தலைவர்கள்’ கூட்டத்தில் தீர்மானிப்போம் என்ற விடயம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

பின்னர், கட்சித்தலைவர்கள் கூட்டத்தின்போது, பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலில் குறித்த சட்டமூலம் மீதான விவாதம் நிரலிடப்பட்டுள்ள நிலையில், அதனை ஒத்திவைப்பதற்கு சபையின் அனுமதியை பெறுவதற்காக வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று தீர்மானிக்கப்பட்டது.

துரதிர்ஷ்டவசமாக ஆளும் தரப்பின் பெரும்பான்மை காரணமாக அந்த வாக்கெடுப்பில் சட்டமூலத்தின் மீதான வாக்கெடுப்பை நகர்த்தாதிருப்பதற்கான தடையை ஏற்படுத்த முடிந்திருக்கவில்லை.

முன்னதாக இந்தச் சட்டமூலத்தினை அறிமுகப்படுத்துகின்றபோது, அரசாங்கம் பெண்கள், சிறுவர்கள் மற்றும் தனிநபரின் கௌரவம் ஆகியவற்றை பாதுகாப்பதற்காகவே கொண்டுவருவதாக அறிவித்திருந்தது. அத்தோடு, குறித்த சட்டமூலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்களை பின்னிணைப்பாக கொண்டு வருவதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் அறிவித்துள்ளார்.

மேலும், நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டவுடனேயே இது தொடர்பில் 57 திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று சட்ட வல்லுநர்கள் குறிப்பிட்டிருந்த நிலையில், அவை உட்பட 34 திருத்தங்களை மேற்கொண்டால்தான் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என்று உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டியிருந்தது.

இவ்வாறு உயர்நீதிமன்றம் குறிப்பிட்ட விடயங்களை ஆராய்ந்து பார்த்தபோது சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலத்தில் 13 விடயங்களில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டியிருப்பதாக இரண்டாம் நாள் விவாதத்தின்போது, ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.

ஆனால், அவர் சுட்டிக்காட்டிய விடயங்கள் எழுத்து மூலமாக சபாநாயகருக்கு அளிக்கப்பட்டு பின்னர் சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தகவல்கள் காணப்படுகின்றபோதும்,  குழுநிலையில் அவை எவ்வாறு மாற்றியமைக்கப்பட்டுள்ளன என்பது பற்றிய தகவல்கள் தெளிவாக இல்லை.

ஆகவே, நிகழ்நிலை சட்டமூலமானது நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டாலும் அரசியலமைப்பின் 76ஆவது பிரிவுக்கு அமைவாக அது நிறைவேற்றப்பட வேண்டிய முறைமைகளை பின்பற்றவில்லை என்பதால் குறித்த சட்டமூலத்தினை சட்டமாக கருதமுடியாது என்ற தர்க்கங்களும் தாராளமாக உள்ளன.

இதனால், எதிர்க்கட்சியினர் நிறைவேற்றப்பட்ட குறித்த சட்டமூலத்தினை ‘சான்றுரைப்படுத்தும் செயற்பாட்டை முன்னெடுக்க வேண்டாம்’ என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவிடத்தில் தொடர்ச்சியாக கோரியவாறு உள்ளது. அத்துடன், நிறைவேற்றப்பட்ட சட்டமூலத்தின் உள்ளடக்கத்தை கட்சித் தலைவர்கள் கூட்டமொன்றை கூட்டி மீளாய்வுக்கு உட்படுத்துமாறும் கோருகின்றனர்.

மேற்படி கோரிக்கை எவ்வளவு தூரம் சாத்தியமாகும் என்பது தொடர்பில் ஐயப்பாடுகள் உள்ளன. 

எதிர்க்கட்சியினரின் கோரிக்கை கருத்தில் கொள்ளப்படாவிட்டால், மீண்டும் உயர்நீதிமன்றத்தின் வாயிலை நாடுவதுதான் சாத்தியமான முறைமையாக இருக்கிறது. அவ்வாறு நாடுகின்றபோது, மீண்டும்  நீதித்துறைக்கும் சட்டவாக்கத்துறைக்கும் இடையிலான முரண்பாடுகளே மேலெழும்.

அதேநேரம், குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டதன் பின்னர், அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங், பிரித்தானியா உயர்ஸ்தானிகர் அன்றூ பற்றிக், கனடிய உயர்ஸ்தானிகர் எரிக் வொல், அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்பன் உள்ளிட்டவர்கள் பொதுமக்களின் கருத்து வெளியிடும் சுதந்திரம் மட்டுப்படுத்தப்படுவதை மையப்படுத்தி கேள்விகளைத் தொடுத்துள்ளன.

விசேடமாக, பொருளாதார ரீதியில் நெருக்கடியான சூழலிலிருந்து விடுபடாதிருக்கும் இலங்கையின் எதிர்கால மீட்சிக்கும், டிஜிட்டல் பொருளாதாரம், சுற்றுலா உள்ளிட்ட துறைகளின் ஊடாக வருமானத்தை ஈட்டிக்கொள்வதற்கும் மேற்படி சட்டமூலத்தினை நிறைவேற்றியதால் ஏற்படப்போகும் ஆபத்துக்களையும் அந்நாடுகள் சுட்டிக்காட்டியுள்ளன.

அதேநேரம், உள்நாட்டில் அதிகரிக்கப்பட்டுள்ள வற் வரி மற்றும் தேர்தல் காலம் என்பதால் மக்களின் பிரதிபலிப்புக்களை முடக்குவதற்காகவே இந்தச் சட்டமூலத்தினை அரசாங்கம் அவசர அவசரமாக கொண்டுவந்திருக்கிறது என்பதை சிவில் அமைப்பினர் பகிரங்கமாகவே சுட்டிக்காட்டியுள்ளனர்.

குறிப்பாக, புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூலத்துக்கு எதிராக உயர்நீதிமன்றில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் நீதிமன்றின் விசாரணைகளை அடுத்து அச்சட்டமூலமும் விரைவில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

அதேநேரம், அடுத்து தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு சட்டமூலம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. வர்த்தமானியில் வெளியிடப்படாத முன்மொழியப்பட்ட ஒளிபரப்பு ஒழுங்குமுறை அதிகார சபை சட்டமூலமும் விரைவில் நகர்த்தப்படலாம் என்று உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆக, ஒன்றன் பின் ஒன்றாக கொண்டுவரப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் சட்டங்கள் ஊடாக, இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு என்று அடையாளப்படுத்தப்படுவதன் காரணமாக மக்களை பாதுகாத்தல், அடிப்படை உரிமைகளை பாதுகாத்தல் ஆகியன அரசியலமைப்பின் ஊடாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆட்சியாளர்கள் மார்பு தட்டிக்கொண்டாலும், ஈற்றில் பொதுமக்கள் ஜனநாயகமும் இன்றி,  சோசலிசமும் இன்றி கட்டுறுதியான சர்வாதிகார ஆட்சிக்குள் சிறைப்பட்டிருக்கும் நிலைதான் நீளப்போகிறது.

நன்றி வீரகேசரி

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்