பேரிடரை கையாள இன்னும் கற்க வேண்டும்: அலுவலர்களுக்கு தலைமை செயலர் அறிவுரை
4 மாசி 2024 ஞாயிறு 03:46 | பார்வைகள் : 1607
பேரிடர் சூழலை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து, நாம் அனைவரும் கூடுதலாக கற்றுக்கொள்ள வேண்டும்,'' என, தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா தெரிவித்தார்.
பேரிடர் மேலாண்மை துறை சார்பில், கடந்த டிசம்பரில் நடந்த, 'இரட்டை பேரிடர்களின் படிப்பினை கள் மற்றும் எதிர்கால முன்னெடுப்புகள்' குறித்த ஒரு நாள் கருத்து பரிமாற்ற பயிலரங்கம், தலைமை செயலகத்தில் நேற்று நடந்தது.
புதிய வழிகள்
பயிலரங்கத்தை துவக்கி வைத்து, தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா பேசியதாவது:<br><br> கடந்த ஆண்டு டிசம்பரில் தாக்கிய, 'மிக்ஜாம்' புயல் பாதிப்புக்கு பின், அரசு அலுவலர்கள் கலந்துரையாடல் நடத்த திட்டமிட்டு இருந்தோம்.
குறிப்பாக, தென்மாவட்டங்களில் மழை பாதிப்பு அதிகம் இருந்தது. இதுபோன்ற பேரிடர் சூழலை, நாம் எவ்வாறு கையாள்வது என்பதை, நாம் அனைவரும் கூடுதலாக கற்றுக்கொள்ள வேண்டும்.<br><br>புயல், வெள்ள காலங்களில் எவ்வாறு சிறப்பாக செயல்படுவது; எப்படி எதிர்கொள்வது என்பதே இந்த கருத்தரங்கின் நோக்கம். பேரிடர் காலங்களில், மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை, புதிய வழிகளில் எவ்வாறு கொண்டு சேர்ப்பது என்பது குறித்தும் ஆராய வேண்டும்.
மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்வதற்கான பணிகளை கவனிக்க வேண்டும். சென்னையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏற்பட்ட வெள்ளத்தில், நிறைய கற்றுள்ளோம்; பல பணிகளை செய்து உள்ளோம். தற்காலிக மற்றும் நிரந்தரப் பணிகள் மேற்கொள்வது குறித்து ஆலோசிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கலந்துரையாடல்
பயிலரங்களில் பல்வேறு துறை அலுவலர்கள், ஏழு குழுக்களாக பிரிந்து விவாதித்து, அறிக்கை அளித்தனர்.
பேரிடர் கண்காணிப்பு, முன்னெச்சரிக்கை அமைப்புகளை வலுப்படுத்துதல்; உடனடி தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள்; உடனடி நிவாரணம் வழங்குதல்; உள்கட்டமைப்புகளின் மீட்பு, புனரமைப்பு; வெள்ளத் தடுப்புக்கான நகர்ப்புற திட்டமிடல்; சமூக ஈடுபாடுகள்; மக்கள் தொடர்புத் துறை பணி ஆகியவை குறித்து கலந்துரையாடப்பட்டது.
ஏழு குழுக்கள் பரிந்துரை அடிப்படையில், எதிர்காலத்தில் பேரிடர்களை சந்திப்பதில், உரிய மேல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என, தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா தெரிவித்தார்.