இலங்கையின் 76 ஆவது சுதந்திரதின நிகழ்வு ஆரம்பம்
4 மாசி 2024 ஞாயிறு 04:41 | பார்வைகள் : 2484
இலங்கையின் 76 ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
கொழும்பு காலி முகத்திடலில் சுதந்திர தின நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஸ் குணவர்தன ஆகியோரின் தலைமையில் இடம்பெறுகின்றது.
இலங்கையின் 76ஆவது சுதந்திர தின நிகழ்வில் பிரதம அதிதியாக தாய்லாந்து பிரதமர் ஷரேத்தா தவிசின் கலந்துக்கொண்டுள்ளார்.
76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இலங்கையின் 75ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் போது, வங்குரோத்தடைந்த நாடு என்று முத்திரை குத்தப்பட்டிருந்தோம். ஆனால், 76ஆவது சுதந்திர தினத்தில், பல இடர்பாடுகளுக்கு மத்தியிலும், அந்த நிலையிலிருந்து விடுபட்டு, பொருளாதாரத்தை நிலையான நிலைக்கு கொண்டு வர முடிந்துள்ளது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் 75ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் போது, வங்குரோத்தடைந்த நாடு என்று முத்திரை குத்தப்பட்டிருந்தோம். ஆனால், 76ஆவது சுதந்திர தினத்தில், பல இடர்பாடுகளுக்கு மத்தியிலும், அந்த நிலையிலிருந்து விடுபட்டு, பொருளாதாரத்தை நிலையான நிலைக்கு கொண்டு வர முடிந்துள்ளது.
நாட்டின் பெரும்பான்மையான மக்கள், துன்பங்களைச் சகித்துக்கொண்டு நாட்டை மீளக் கட்டியெழுப்பும் நீண்ட கால வேலைத்திட்டத்திற்கு ஆதரவளித்ததால் எம்மால் மெதுவாக முன்னேற முடிந்தது.
இந்தப் பாதையில் தொடர்ந்து செல்லும் போது, சிரமங்கள் யாவும் மறைந்துவிடும். வாழ்க்கைச் சுமை குறையும். பொருளாதாரம் வலுவடையும். இலங்கை தாய்க்கு மீண்டும் விடிவு கிட்டும்.
1948 இல் இலங்கை சுதந்திர நாடாக மாறிய போது, இலங்கை கீழைத்தேய பிராந்தியத்தில் வளர்ச்சியடைந்த நாடாக மாற வேண்டும் என்பதே சர்வதேசத்தின் எதிர்பார்ப்பாக இருந்தது.
அதற்கான அனைத்து பின்னணி காரணிகளும் எங்களிடம் இருந்தன. ஆனால் இறுதியில் நாம் வங்குரோத்தடைந்த நாடாக மாற நேரிட்டது.
கடந்த கால தவறுகளை மீண்டும் செய்யக்கூடாது. இலங்கையின் தற்போதைய பாதை உலகத்திற்கு நம்பிக்கை ஏற்படுத்தியிருப்பதால், இந்தப் பாதையில் தொடர்ந்து பயணிக்கவும், மீண்டும் சுபீட்சத்தைக் கொண்டுவரவும் இந்த சுதந்திர தினத்தில் உறுதி கொள்வோம்.
நாட்டை மீளக் கட்டியெழுப்பும் பெருமைமிக்க பணிக்கு இலங்கையிலும் நாட்டுக்கு வெளியிலும் வாழும் அனைத்து இலங்கையர்களும் தங்களால் முடிந்தளவு பங்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கு நிபந்தனையின்றி பாடுபடுவது ஆட்சியாளர்களினதும் பொறுப்பாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு எதிர்க்கட்சித் தலைவரின் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
போர்த்துகீசியர்களாலும், ஒல்லாந்தர்களாலும் பினனர் 1815 முதல் 1948 வரை ஆங்கிலேயர்களினாலும் முழுமையாக காலனித்துவப்படுத்தப்பட்டிருந்த நாம் 1948 பெப்ரவரி 4 ஆம் திகதி சுதந்திரத்தைப் பெற்றுக் கொண்டோம். அவ்வாறு சுதந்திமடைந்து இவ்வருடம் பெப்ரவரி 04 ஆம் திகதியுடன் 76 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
உயரிய சுதந்திரத்திற்காக நாடு எதிர்கொண்ட அனைத்து சவால்களையும் எதிர்கொள்ள, கடந்த காலம் தொட்டு இன்று வரை உயிர் தியாகம் செய்த அனைத்து தேசப்பற்றாளர்களுக்கும் தேசத்தின் மரியாதையும் அஞ்சலியும் செலுத்தப்பட வேண்டும்.
இலங்கை சுதந்திரம் பெற்று 76 வருடங்கள் கடந்துள்ள போதிலும்,பெற்ற சுதந்திரத்தை தேசிய,சமூக,கல்வி,மத ரீதியிலாக அர்த்தமுள்ளதாக்க நாம் தவறிவிட்டோம்.
1948 இல் இருந்து,76 வருடங்களாக பல்வேறு சவால்களை எதிர்கொண்டு நாம் பெற்ற அரசியல் சுதந்திரத்தை பொருளாதார மற்றும் சமூக சுதந்திரமாக மாற்றும் பொறுப்பு எமக்கு உள்ளது.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக, குறுகிய பேதங்கள் போலவே இனவாத மற்றும் மதவாத உணர்வுகளுடன் அரசியல் களம் மிகவும் அழுக்கடைந்து போயுள்ளமையினால்,நாம் ஒரு நாடாக பிரிந்து பல துரதிஷ்டவசமான அவலங்களை எதிர்கொண்டோம்.
இதன் பிரகாரம்,ஒரு நாடாக அடைந்த சாதனைகள், பின்னடைவுகள் மற்றும் தோல்விகளை கடந்த 76 ஆண்டுகளில் நமக்கு நல்ல பாடங்களைப் போதித்திருக்கின்றன.
'சுதந்திரம்' என்பது கிடைத்தவுடன் சும்மா கிடக்கும் ஒன்றல்லாது,தொடர்ந்தும் பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கான அர்ப்பணிப்பு முழு குடிமகனின் பொறுப்பாகும் என்பதோடு, சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கு நிபந்தனையற்ற அர்பணிப்பை வழங்குவதும் ஆட்சியாளர்களினதும் பொறுப்பாகும்.
மக்களின் சுதந்திரத்துக்கு வேலி போட்டு, வரையறையின்றிய திட்டத்திற்குள் அரசாங்கம் இறங்கியிருப்பது அவலம் என்பதோடு,மனித சுதந்திரத்தை பாதுகாப்பதாக உறுதிமொழி எடுக்குமாறு சுதந்திர தினத்தன்று அரசாங்கத்திற்கு வலியுறுத்த இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்கிறேன்.
அத்துடன்,இலங்கையர்களாகிய நமக்கு சுதந்திரம் அடைவதற்கு முன்னரே கிடைத்த சர்வஜன வாக்குரிமை என்பது சுதந்திர நாட்டில் மக்களிடம் உள்ள பலமான உரிமையாகும்.
ஜனநாயக சமூகத்துக்கான இருப்பையும் மனித உரிமைகளையும் பாதுகாக்கும் சர்வஜன வாக்குரிமைக்கு சவால் விடுவதானது நாட்டின் சுதந்திரத்திற்கு சவால் விடுவதானதாகும்.இந்தத் தருணத்தில் இந்தச் சவாலை எமது தாய் நாடு எதிர்கொண்டிருப்பது பாரதூரமான பேரிடராகும்.
மக்களின் சுதந்திரத்திற்கு தடை விதிக்கும் சட்டங்களை நிறைவேற்றி,தற்போதைய ஆட்சியாளர்கள் நடந்து கொள்ளும் விதம்,நாம் பெற்றுள்ள சுதந்திரத்தினுள் உரிமையாக்கிக் கொண்ட ஜனநாயக ஆட்சியை சர்வாதிகாரமாக மாற்றும் முயற்சியாகும்.இந்த முயற்சியை முறியடிக்க நாட்டின் சுதந்திரத்திற்காக அர்ப்பணிப்போடு செயல்படும் சகல சக்திகளும் ஒன்றிணைய வேண்டியது,இந்த சுதந்திர தினத்தில் நமது அபிலாஷையாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.