19 வயதுக்குக் கீழ் உலகக் கிண்ண அரை இறுதியில் பாகிஸ்தான்
4 மாசி 2024 ஞாயிறு 08:31 | பார்வைகள் : 1597
தென் ஆபிரிக்காவில் நடைபெற்றுவரும் 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண அரை இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கு கடைசி அணியாக பாகிஸ்தான் தகுதி பெற்றுக்கொண்டது.
பெனோனி, விலோமூர் பார்க் விளையாட்டரங்கில் நேற்று சனிக்கிழமை (03) மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய 1ஆம் குழுவுக்கான சுப்பர் 6 லீக் போட்டியில் பங்களாதேஷை 5 ஓட்டங்களால் வெற்றிகொண்டதன் மூலம் பாகிஸ்தான் அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது.
இந்தப் போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்று கூறமுடியாத அளவுக்கு இரண்டு அணிகளும் மாறி மாறி ஆட்டத்தின் பிடியை தத்தமது பக்கம் திருப்பிக்கொண்டிருந்தன.
ரொஹானத் தௌல்லா போசன், ஷெய்க் பாவெஸ் ஜிபொன் ஆகிய இருவரும் தலா 24 ஓட்டங்களுக்கு தலா 4 விக்கெட்களைக் கைப்பற்றி பாகிஸ்தானை 40.4 ஓவர்களில் 155 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்தினர்.
எனினும் உபைத் ஷா 5 விக்கெட் குவியலைப் பதிவு செய்து பங்களாதேஷை 150 ஓட்டங்களுக்கு கட்டுப்பத்தி பாகிஸ்தான் வெற்றிபெறுவதை உறுதிசெய்தார்.
பாகிஸ்தான் துடுப்பாட்டத்தில் மத்திய வரிசை வீரர் அரபாத் மின்ஹாஸ் 34 ஓட்டங்களையும் ஆரம்ப வீரர் ஷாஸெய்ப் கான் 26 ஓட்டங்களையும் பெற்றனர். ஏனைய எவரும் 20 ஓட்டங்களை எட்டவில்லை.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 35.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 150 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
மொஹமத் ஷிஹாப் ஜமெஸ் 26 ஓட்டங்களையும் 10ஆம் இலக்க வீரர் ரொஹானத் தௌல்லா போசன் ஆட்டம் இழக்காமல் 21 ஓட்டங்களையும் சௌதர் மொஹமத் ரிஸ்வான் 20 ஒட்டங்களையும் பெற்றனர்.
பாகிஸ்தான் பந்துவீச்சில் உபைத் ஷா 44 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் அலி ராஸா 44 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
நியூஸிலாந்துக்கு எதிராக புளூம்பொன்டெய்னில் இன்று நடைபெற்ற முதலாம் குழுவுக்கான சுப்பர் 6 கிரிக்கெட் போட்டியில் சகலதுறைகளிலும் ஆற்றல்களை வெளிப்படுத்திய அயர்லாந்து, 41 ஓட்டங்களால் டக்வேர்த் லூயிஸ் முறைமையில் வெற்றிபெற்றது.
அயர்லாந்து முதலாவதாகத் துடுப்பெடுத்தாடி 50 ஒவர்களில் 9 விக்கெட்களை இழந்து 267 ஓட்டங்களைக் குவித்தது.
கெவின் ரூஸ்டன் 82 ஓட்டங்களையும் கியான் ஹில்டன் 72 ஓட்டங்களையும் பெற்றதுடன் 3ஆவது விக்கெட்டில் 129 ஓட்டங்களைப் பகிர்ந்து அயர்லாந்து அணியை பலப்படுத்தினர்.
அயர்லாந்துக்கு 38 ஓட்டங்கள் உதிரிகளாக கிடைத்தமை அதன் மொத்த எண்ணிக்கைக்கு வலுசேர்ப்பதாக அமைந்தது.
பந்துவீச்சில் இவெய்த் ஷ்ரூடர் 46 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 35.1 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 131 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மழை குறுக்கிட்டது. இதன் காரணமாக ஆட்டத்தை தொடரமுடியாமல் போனது.
வெற்றி அணியைத் தீர்மானிக்க டக்வேர்த் லூயிஸ் றைமை கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது நியூஸிலாந்தின் வெற்றி இலக்கு 173 ஓட்டங்களாக இருந்தது. இதன் காரணமாக நியூஸிலாந்து 31 ஓட்டங்களால் தோல்வி அடைந்தது.
ஜேம்ஸ் நெல்சன் 34 ஒட்டங்களையும் லெச்சியன் ஸ்டெக்பூல் 33 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் ஒலிவர் ரைலி 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
பொச்சேஸ்ட்ரூமில் நடைபெற்ற இரண்டாம் குழுவுக்கான சுப்பர் 6 போட்டியில் ஸிம்பாப்வேயை 146 ஓட்டங்களால் இங்கிலாந்து இலகுவாக வெற்றிகொண்டது.
இங்கிலாந்து 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 237 ஓட்டங்களைக் குவித்தது.
சார்லி அலிசன் 76 ஓட்டங்களையும் தியோ வில்லி 61 ஓட்டங்களையும் பெற்றனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஸிம்பாப்வே 24.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 91 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
தஸீம் சௌத்ரி அலி 29 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்களை வீழ்த்தினார். இந்த வருட 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இதுவே அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியாகும்.