சிவப்பு அரிசியால் கிடைக்கும் பயன்கள்
4 மாசி 2024 ஞாயிறு 09:25 | பார்வைகள் : 3228
தினமும் ஒரே வெள்ளை அரிசி சாதம் சாப்பிட்டு போர் அடிக்கிறதா? அதற்குப் பதிலாக உங்கள் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் மாற்று அரிசி இருப்பது உங்களுக்கு தெரியுமா? அட ஆமாங்க, சிவப்பு அரிசியை பற்றி தான் சொல்றோம். நம் உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துகள், நார்ச்சத்து, வைட்டமின், தாதுக்கள் போன்றவை சிவப்பு அரிசியில் நிறையவே உள்ளது.
சூப்பர்ஃபூட் என்று சொல்லப்படும் முக்கிய பிரிவுகளில் ஒன்றாக இருக்கிறது சிவப்பு அரிசி. சிவப்பு அரிசியில் உள்ள தவிடுகளில் வெள்ளை அரிசியை விட அதிகமான இரும்புச்சத்தும் துத்தநாகமும் இருக்கிறது. சிவப்பு நிற உமி மற்றும் தவிடு கொண்ட முழு தானிய அரிசி என்றுகூட இதைக் கூறலாம்.
இந்த அரிசியில் உள்ள அந்தோசைனின்ஸ் தான் இதற்கு சிவப்பு நிறத்தை தருகிறது. அரிசியின் மேல் அடுக்கில் உள்ள தவிடு காரணமாக சிவப்பு நிறமாக இருக்கிறது. ஆனால் வெள்ளை அரிசியில் இதில் இருப்பது போல் உமியோ, தவிடோ கிடையாது.
சிவப்பு அரிசியின் ஆரோக்கிய நன்மைகள்: ஃபிட்னெஸில் ஆர்வமுள்ளவர்களின் விருப்பமாக சிவப்பு அரிசி இருக்கிறது. இதிலுள்ள ஊட்டச்சத்துகள் காரணமாக உலகம் முழுவதும் உள்ள மக்களால் விரும்பி சாப்பிடப்படுகிறது. சிவப்பு அரிசியில் உள்ள அந்தோசைனின் ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தை குறைக்கும் தன்மையுடையது.
நீரிழிவை கட்டுப்படுத்துகிறது : குறைவான க்ளைசைமிக் குறியீடு காரணமாக சிவப்பு அரிசி சாப்பிடுவதால் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கிறது. ஆகையால் நீரிழிவு நோயாளிகள் தங்கள் டயட்டில் சிவப்பு அரிசியை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
செரிமானத்திற்கு உதவுகிறது : சிவப்பு அரிசியில் உள்ள நார்ச்சத்து நமது குடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இதிலுள்ள ஊட்டச்சத்துகள் மலச்சிக்கல் ஏற்படுவதை தடுக்கிறது.
இதய நோய்களை தடுக்கிறது : சிவப்பு அரிசி சாப்பிடுவதால் நம் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவு குறைந்து இதய நோய் வரும் ஆபத்தைக் குறைக்கிறது.
உடல் எடை பராமரிப்பு : உடல் எடை குறைக்க வேண்டும் என விரும்புகிறவர்கள் தங்கள் டயட்டில் அவசியம் சிவப்பு அரிசியை சேர்த்துக் கொள்ளுங்கள். சிவப்பு அரிசியில் உள்ள நார்ச்சத்து பசியின்மையை போக்குவதோடு வயிறு நிறைந்த திருப்தியை தரும்.
எலும்பு ஆரோக்கியம் : உடலில் மாக்னீசியம் அளவு குறைந்தால் எலும்பின் அடர்த்தி குறையும். சிவப்பு அரிசியில் மாக்னீசியம் அதிகளவு இருப்பதால் இதை சாப்பிடுவதன் மூலம் மூட்டு வலி போன்ற எலும்பு பிரச்சனைகளை தவிர்க்கலாம். சிவப்பு அரிசியில் செய்யக்கூடிய எளிமையான உணவுகள் குறித்து தெரிந்துகொள்ளுவோம்.
சிவப்பு அரிசி கிச்சடி : உடனடியாக செய்துவிடக்கூடிய இந்த கிச்சடியை ஊற வைத்த பாசி பருப்பு மற்றும் சிவப்பு அரிசியோடு சமைக்க வேண்டும். இதோடு காய்கறி மற்றும் மசாலாக்கள் சேர்க்கும் போது உங்களுக்கு தேவையான புரதம் கிடைக்கிறது.
சிவப்பு அரிசி பிரியாணி : வழக்கமாக பயன்படுத்தும் பாஸ்மதி அரிசிக்குப் பதிலாக சிவப்பு அரிசி பிரியாணி ஆரோக்கியம் நிறைந்ததாகவும் சுவையாகவும் இருக்கும். நீங்கள் இதில் சிக்கன், காய்கறி அகியவற்றை உங்கள் சுவைக்கு ஏற்ப பயன்படுத்தலாம்.
சிவப்பு அரிசி சாலட் : உங்கள் டயட்டில் தினமும் சிவப்பு அரிசி சாலடை சேர்த்துக் கொண்டால் நிறைய நன்மைகள் கிடைக்கும். கொஞ்சமாக மசாலா பொருளோடு சிவப்பு அரிசியை வதக்கி, அதனோடு கேரட், வெள்ளரிக்காய் மற்றும் காய்கறிகளை சேர்த்து ஆரோக்கியம் நிறைந்த சாலடை தயார் செய்யுங்கள்.