காங்கிரஸ், திரிணமுல் காங்., மோதல்...முற்றுகிறது! இண்டியா அணி தலைவர்கள் கவலை
4 மாசி 2024 ஞாயிறு 10:35 | பார்வைகள் : 1484
காங்கிரஸ் மற்றும் திரிணமுல் காங்கிரஸ் இடையிலான மோதல் முற்றி வருவதால், இண்டியா கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளின் தலைவர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
பிரதமர் மோடி தலைமையில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் முனைப்பில் பா.ஜ., தீவிரமாக உள்ளது. இந்த முறை விட்டால் இனி தேறுவது கஷ்டம் என, மோடியின் வெற்றியை தடுக்க எதிர்க்கட்சிகள் கைகோர்த்தன. மொத்தம் 28 கட்சிகள் சேர்ந்த கூட்டணிக்கு இண்டியா என பெயர் சூட்டின.
ஆனால், தொகுதி பங்கீடு பேச்சு தொடங்கியதுமே மோதல் வெடித்தது. மாநிலங்களில் ஆட்சியில் உள்ள கட்சிகள், காங்கிரசுக்கு தொகுதிகளை தாரை வார்க்க முடியாது என்றன.
நாங்கள் நிச்சயமாக ஜெயிக்க வாய்ப்புள்ள தொகுதிகளை உங்களுக்கு விட்டுக் கொடுத்து, நீங்கள் தோல்வி அடைந்தால் இண்டியா கூட்டணிக்கு தான் இழப்பு. அதனால் கொடுப்பதை வாங்கிக் கொள்ளுங்கள்' என கறாராக பேரம் பேசின.
மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்கிரஸ், பஞ்சாபில் ஆம் ஆத்மி, கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தமிழகத்தில் தி.மு.க., என இக்கட்சிகள் நேராகவும், மறைமுகமாகவும் காங்கிரசுக்கு அழுத்தம் கொடுத்தன. மற்ற கட்சிகளை விட மம்தாவின் திரிணமுல் காங்கிரஸ் கெடுபிடியாக நடந்து கொண்டது. 'கடந்த தேர்தலில் நீங்கள் ஜெயித்த இரண்டு தொகுதிகளை மட்டும் தருகிறோம்' என்றது. காங்கிரஸ் ஏற்கவில்லை. 'அப்படியானால் ஒரு சீட் கூட தராமல் 42 தொகுதிகளிலும் நாங்களே நிற்போம்' என அறிவித்தார் மம்தா.
மேலும், 'மாநிலத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு எதிராக அரசியல் செய்கிறேன். எனவே அவர்களுக்கும் தொகுதி ஒதுக்க மாட்டேன். நீங்களும் தொகுதி வேண்டும் என்றால் கம்யூனிஸ்டுகளை கழற்றி விட்டு வாருங்கள்' என மம்தா நிபந்தனை விதித்தார்.
யாத்திரை செல்லும் ராகுலையும் மம்தா கிண்டல் செய்தார். ராகுல் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், 'நிலைமை சரியாகவிடும்' என்று தொடர்ந்து கூறி வருகிறார்.
ஆனால், மேற்கு வங்கத்தில் உள்ள அவரது கட்சியின் தலைவர் பொறுக்க முடியாமல் மம்தாவுக்கு பதிலடி கொடுக்கிறார்.
நாடு முழுதும் போட்டியிட்டாலும், 40 தொகுதிகளில்கூட காங்கிரஸ் ஜெயிக்க முடியாது' என்று மம்தா கூறியதை கண்டித்த ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ''மம்தாவுக்கு பா.ஜ.,வைப் பார்த்து பயம். அந்த பயத்தில், காங்கிரஸ் மீது பாய்கிறார்,'' என்றார்.
இப்படியாக இரண்டு கட்சிகளுக்கும் இடையே மோதல் முற்றுவதால், கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுக்கு கவலை ஏற்பட்டுள்ளது. 'இண்டியா அணியில் எதிர்பார்த்த எதுவும் நடக்கவில்லை' எனக்கூறி ஐக்கிய ஜனதா தளம் விலகியதை போல, மேலும் பல கட்சிகள் வெளியேறுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.