குப்பை தீவுகளாக மாறி வரும் கடற்கரைகள்: சுற்றுச்சூழல், வாழ்வாதாரம் பாதிக்கும் அபாயம்
5 மாசி 2024 திங்கள் 03:20 | பார்வைகள் : 2154
காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் 30,000க்கும் மேற்பட்டோர் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இங்கிருந்து, 2,000 விசைப்படகுகள், 7,000 பைபர் படகுகள், 500 கட்டுமரங்களில் மீன்பிடி தொழில் நடக்கிறது. தினமும் 200 டன் மீன்கள் விற்பனைக்கு வருகின்றன.
முக்கியத்துவம் பெற்ற காசிமேடு மீன் பிடித்துறைமுக பகுதியில், பிளாஸ்டிக் குப்பை கழிவுகள், மரக்கழிவுகள், தெர்மாகோல் உள்ளிட்டவற்றால் குப்பை தீவுகளாக காட்சியளிக்கிறது.
வடசென்னையில் காசிமேடு முதல் எண்ணுார் வரையிலான கடற்கரை பகுதிகளில் இந்த நிலைமை தான் தொடர்கிறது.
தொடர்ந்து கொட்டப்படும் கட்டட கழிவுகள், பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பை கழிவுகள் தடுக்க, அதிகாரிகளும் எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.
வடசென்னை கடற்கரை பகுதிகளில் கொட்டப்பட்டு வரும் பல விதமான குப்பை கழிவுகளால், கடற்கரை சுற்றுச்சூழல் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள், கடல் வளம் அழியும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அனைத்து மீனவர் சங்க தலைவர் நாஞ்சில் ரவி கூறியதாவது:
சிந்தாதிரிப்பேட்டை, சைதாப்பேட்டை, ஜாம்பஜார், பட்டாளம், காவாங்கரை, வானகரம் உள்ளிட்ட பெரிய மீன் மார்க்கெட்கள் கூவம் நதிக்கரை ஓரம் அமைந்துள்ளன.
இங்கு மீன் மார்க்கெட்டுகளில் விற்பனைக்கு வரும் மீன்களின் தெர்மாகோல் பாக்ஸ்கள் உடைத்து, கூவம் நதிக்கரையில் போடப்படுகின்றன. அவை கடலில் கலக்கின்றன.
மேலும், காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் பழைய படகுகளை உடைக்கும் மீனவர்களும், அதன் கழிவுகளை கடலிலேயே போட்டு செல்கின்றனர்.
இவ்வாறு பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் அடியில் சேர்வதால், மீன்கள் கரைகளில் இன விருத்தி செய்வதில்லை.
மேலும் கூவத்தில் சேரும் குப்பை, கயிறுகள் மூலம் கடலில் கலப்பதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றன. ஆனால் அவை முறையாக அகற்றப்படுவதில்லை. பெயரளவில் மட்டுமே பணிகள் நடக்கின்றன.
குப்பையை அகற்ற வேண்டிய பெரிய பொறுப்பு, காசிமேடு மீன்பிடித் துறைமுக பொறுப்புக் கழகத்திற்கு உள்ளது. ஆனால், அவையும் பெயரளவிலேயே செயல்படுகின்றன.
எனவே, காசிமேடு மீன்பிடித் துறைமுக பொறுப்புக் கழகம், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் மீனவர்களுடன் இணைந்து, போர்க்கால அடிப்படையில் குப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டால் மட்டுமே இதற்கு தீர்வு கிடைக்கும்.<br><br>இவ்வாறு அவர் கூறினார்