தீக்குச்சிகளினால் உருவாக்கப்பட்ட ஈஃபிள் கோபுரம்! - கின்னஸ் சாதனை அதிகாரிகளால் நிராகரிப்பு!
5 மாசி 2024 திங்கள் 07:14 | பார்வைகள் : 3610
எட்டு ஆண்டுகள் உழைப்பினால் உருவாக்கப்பட்ட 7.20 மீற்றர் உயரம் கொண்ட ‘தீக்குச்சி’ ஈஃபிள் கோபுரம் கின்னஸ் சாதனை அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
Richard Plaud எனும் Charente-Maritime நகரவாசி ஒருவர் இந்த ஈஃபிள் கோபுரத்தை உருவாக்கியிருந்தார். இது தொடர்பாக நாம் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம். தனியே தீக்குச்சிகளால் ஒட்டப்பட்டு இந்த ஈஃபிள் கோபுரம் அமைக்கப்பட்டு, கின்னஸ் சாதனை அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அவர்கள் வந்து பார்வையிட்டு, இந்த சாதனையை ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளனர். இது போன்ற தீக்குச்சி கோபுரம் இதே உயரத்தில் இதற்கு முன்னாள் எங்கேயும் அமைக்கப்படவில்லை. இருந்தபோதும், குறித்த தீக்குச்சிகள் அனைத்தும் அதற்குரிய ‘விலைப்படியலை’ கொண்டிருக்கவில்லை என தெரிவித்து இந்த சாதனை நிராகரிக்கப்பட்டது.
அனைத்து தீக்குச்சிகளும் வணிக ரீதியாக வாங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அதனை உருவாக்கியவர் அக்குச்சிகளை அவ்வாறு பெறவில்லை என தெரிவிக்கப்பட்டு சாதனை நிராகரிக்கப்பட்டது.