இது தமிழகமா? ஸ்பெயினா?: வியந்து பேசிய முதல்வர் ஸ்டாலின்
5 மாசி 2024 திங்கள் 07:51 | பார்வைகள் : 2673
தமிழகத்தில் இருக்கிறோமா, வெளிநாட்டில் இருக்கிறோமா என சந்தேகம் எழுகிறது" என ஸ்பெயினில் தமிழர்கள் மத்தியில் பேசுகையில் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டார்.
முதலீடுகளை ஈர்க்க ஸ்பெயின் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் அங்கு தமிழர்கள் மத்தியில் பேசியதாவது: ஸ்பெயினில் தமிழகத்தில் இருப்பது போன்ற உணர்வுகளை தருகிறார்கள் தமிழர்கள். ஸ்பெயினுக்கு முதன் முறை வந்த போதே பலமுறை வந்த உணர்வு தருகிறது. தமிழகத்தில் இருக்கிறோமா, வெளிநாட்டில் இருக்கிறோமா என சந்தேகம் எழுகிறது.
அயலக தமிழர்களுக்கு கருணாநிதி என்ன செய்ய நினைத்தாரோ அதை நாங்கள் இப்போது செய்து கொண்டிருக்கிறோம். அயல்நாட்டில் இருக்கக் கூடியவர்களுக்காக துணை நிற்க வேண்டும் என்பதற்காக கருணாநிதி முதல்வராக இருந்த போது ஒரு அமைப்பை உருவாக்கினார். சில நாட்களில் ஆட்சி கலைக்கப்பட்டு விட்டதால் அது செயல்படாமல் போய் விட்டது.
தமிழர்களின் பாசம், நேசம், அன்பு கொண்ட உபசரிப்பு என்னை நெகிழ வைத்திருக்கிறது. கடல் கடந்து வெளிநாட்டில் வாழும் தமிழர்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். வெளிநாட்டில் உள்ள தமிழர்களை சென்னைக்கு வரவழைத்து கலந்து பேசினோம். அவர்களின் பிரச்னைகளை தீர்த்து வைத்துள்ளோம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.