இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டி: பன்னீர்செல்வம் உறுதி
6 மாசி 2024 செவ்வாய் 00:57 | பார்வைகள் : 2055
நீதிமன்ற தீர்ப்புகள் தற்காலிகமானவை. தேர்தலில் பா.ஜ., கூட்டணியில் நாங்கள் இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடுவோம், என மதுரையில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கூறினார். <br><br>அ.தி.மு.க., தொண்டர்களின் உரிமை மீட்புக்குழு ஆலோசனை கூட்டம் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் மதுரையில் நடந்தது.
அதில் பங்கேற்று அவர் பேசியதாவது:
ஒன்றரை கோடி தொண்டர்களால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி தேர்வு செய்யப்பட்டு தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்பதவி 2026 வரை உள்ளது. அதனால், பழனிசாமி தன்னை பொதுச் செயலராக அறிவித்துக் கொண்டது தவறு.
பழனிசாமி பதவிக்கு வந்த பின் நடந்த எட்டு தேர்தல்களில், அ.தி.மு.க., தோல்வி அடைந்துள்ளது. ஏன், எடப்பாடி தொகுதியிலேயே தோல்வியை கண்டுள்ளது. தான்தோன்றித்தனமாக செயல்படும் பழனிசாமி கட்சி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லையெனில் தொண்டர்கள் அவரை துாக்கி எறிவர்.
செல்லுார் ராஜு, ராஜன் செல்லப்பா தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் முழுச் செலவையும் நான் தான் செய்தேன். என் வரலாறு தெரியாமல் பேசுகிறார் ஜெயக்குமார். அவர் நாவை அடக்கி பேச வேண்டும். இல்லையென்றால், தமிழகத்தில் எங்கும் அவர் நடமாட முடியாது.
நீதிமன்ற தீர்ப்புகள் தற்காலிகமானவை. பழனிசாமி இல்லாத அ.தி.மு.க., தொண்டர்களால் உருவாக்கப்படும்.<br><br>இவ்வாறு அவர் பேசினார்.