வரும் 8ல் விசாரணைக்கு ஆஜராக சீமான் கட்சி நிர்வாகிக்கு உத்தரவு
6 மாசி 2024 செவ்வாய் 01:01 | பார்வைகள் : 1994
நானே நேரில் செல்வேன் என்று கூறிய, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும், அவரது கட்சி நிர்வாகியும், என்.ஐ.ஏ., அலுவலகத்தில் நேற்று விசாரணைக்கு ஆஜராகவில்லை.
விடுதலை புலிகள் அமைப்பை புனரமைக்க நிதி திரட்டுதல் மற்றும் ஆயுத போராட்டத்தில் ஈடுபட துப்பாக்கி தயாரிப்பு உள்ளிட்ட சட்ட விரோத செயலில், நாம் தமிழர் கட்சியினர் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதை தொடர்ந்து, இரு தினங்களுக்கு முன், என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள், திருச்சி வயலுார் ரோடு, சண்முகா நகரில் உள்ள, நாம் தமிழர் கட்சி துணை பொதுச்செயலர் சாட்டை துரைமுருகன் உள்ளிட்டோரின் வீடுகளில் சோதனை செய்தனர்.
மொபைல் போன், மடிக்கணினி உள்ளிட்ட, 'டிஜிட்டல்' ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
சென்னை போரூரில், கட்சி அலுவலகத்தில் தங்கி இருந்த இளைஞர் பாசறை பிரிவு செயலர் இடும்பாவனம் கார்த்திக் என்பவருக்கு, 5ம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என, 'சம்மன்' அனுப்பினர்.
இதுகுறித்து சீமான் கூறுகையில், 'எங்கள் கட்சி நிர்வாகிகள், என்னை கேட்காமல் எதுவும் செய்ய மாட்டர். நான் தான் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர். எதுவாக இருந்தாலும் என்னிடம் தான் கேட்க வேண்டும். அதனால், நானே விசாரணைக்கு ஆஜராவேன்' என்று கூறினார்.
ஆனால், நேற்று சீமானும் ஆஜராகவில்லை; அவரது கட்சி நிர்வாகியும் ஆஜராகவில்லை.
இடும்பாவனம் கார்த்திக், 'உறவினர் உடல் நலக்குறைவாக இருப்பதால், விசாரணைக்கு ஆஜராக இயலவில்லை' என, என்.ஐ.ஏ., அதிகாரிகளுக்கு தகவல் அனுப்பி உள்ளார். அதனால், வரும் 8ம் தேதி விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டு உள்ளது.