அரசு டிஜிட்டல் பொருளாதாரத்தை கேள்விக்குள்ளாக்குவது முறையா ?
6 மாசி 2024 செவ்வாய் 11:24 | பார்வைகள் : 1715
தேசிய மற்றும் சர்வதேசத்தின் கடும் எதிர்ப்பு மற்றும் விமர்சனங்களுக்கு மத்தியில் நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் 46 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது. சட்டமூலத்துக்கு ஆதரவாக 108 வாக்குகளும், எதிராக 62 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தன. அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டத்தை போலவே இந்த சட்டம் வெகுகாலம் நீடிக்காது.
நிகழ்நிலை காப்புச் சட்ட வரைபு 2023.09.18 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் ஊடாக வெளியிடப்பட்டது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் இந்த சட்டமூலத்தை 2024.10.03 ஆம் திகதி பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்ததை தொடர்ந்து இந்த சட்டமூலத்துக்கு எதிராக 45 இற்கும் அதிகமான மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தின் பெரும்பாலான ஏற்பாடுகளை நிறைவேற்ற வேண்டுமாயின் அதற்கு விசேட பெரும்பான்மை அவசியம் என்றும், ஒருசில ஏற்பாடுகள் குழுநிலையில் திருத்தம் செய்யப்படுமாயின் சட்டமூலத்தை சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றலாம் என உயர்நீதிமன்றம் வியாக்கியானம் வழங்கியிருந்தது.
அரசியலமைப்பின் 121 (1) ஆம் பிரிவின் பிரகாரம் உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்ட நிகழ்நிலை காப்பு சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் தனது வியாக்கியானத்தில் 5,7,9,11,12,13,14,15,16,17,18,19,20,21,22,23,24,25,26,27,28,30,31,32,36,42,45,53,54 ஆகிய சரத்துக்களை நிறைவேற்றுவதாயின் அதற்கு பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மை அவசியம் என குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் சட்டமூலத்தின் 3,5,7,9,11,12,13,14,14,16,17,18,19,20,21,22,23,24,25,29,30,31,32,37,36,42,53,55,56 ஆகிய சரத்துக்கள் பாராளுமன்றத்தில் குழுநிலையில் திருத்தம் செய்யப்படுமாயின் சட்டமூலத்தை சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆகவே மேற்குறிப்பிடப்பட்ட விடயங்களுக்கு அமைவாக சட்டமூலம் மற்றும் அதன் விதி விதானங்கள் அரசியலமைப்புக்கு முரணல்ல என்று உயர்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. உயர்நீதிமன்றம் முன்வைத்த திருத்தங்களில் முக்கியமான 13 திருத்தங்களை அரசாங்கம் சட்டமூலத்தில் உள்வாங்கவில்லை என எதிர்க்கட்சியினர் கடும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்கள்.
03 ஆவது அத்தியாயத்தில் சட்டமூலத்தின் நோக்கம் குறிப்பிடப்பட்டுள்ளது, அச்சம், அச்சுறுத்தல், அச்சமூட்டல், நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் கருத்துக்களை வெளியிடுவதால் பாதிக்கப்படும் நபரை பாதுகாத்தல்,
நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் அல்லது நீதிமன்றத்தின் அதிகாரம் மற்றும் நடுநிலை தன்மை ஆகியவற்றுக்கு பாதிப்பு ஏற்படும் கருத்துக்களை தொடர்புப்படுத்துவதை தடுத்தல்,
இலங்கைக்குள் ஒரு சம்பவம் தொடர்பில் பொய்யான கருத்தை மீண்டும் மீண்டும் தொடர்புப்படுத்துவதற்கு நிகழ்நிலை ஊடாக நிதி வழங்கல், அவ்வாறான இடத்தை ஊக்கப்படுத்தல் மற்றும் அந்த தரப்பினருக்கு ஏனைய ஒத்துழைப்புக்களை வழங்குவதை தடுத்தல் என்பன இச்சட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
நிகழ்நிலையில் பதிவேற்றம் செய்யப்படும் ஒருசில விடயங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய செயற்பாடுகளை இந்த சட்டமூலம் குற்றமாக அடையாளப்படுத்தியுள்ளது. இலங்கைக்குள் ஒரு சம்பவம் தொடர்பில் உண்மைக்கு புறம்பாக கருத்துக்களை வெளியிடுதல், அவமதிக்கும் வகையில் போலியான கருத்துக்களை குறிப்பிடுதல், உண்மைக்கு புறம்பான கருத்துக்களினால் கலவரத்தை தோற்றுவித்தல், மத நடவடிக்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இவற்றுள் உள்ளடங்குகின்றன.
1 பகுதி அத்தியாயம் இலக்கம் (4)-(10)
இணையவழி பாதுகாப்பு தொடர்பில் ஆணைக்குழுவை ஸ்தாபித்தல்.
தொழில்நுட்பம்,சட்டம்,நிர்வாகம், சமூக சேவை,பத்திரிகை துறை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் முகாமைத்துவம் ஆகிய துறைகளில் தேர்ச்சிப்பெற்ற ஐந்து உறுப்பினர்களை உள்ளடக்கியதாக ஜனாதிபதியால் இந்த ஆணைக்குழு ஸ்தாபிக்கப்படும்.
ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் சுயமாக பதவி விலகல், பதவி விலக்கல் அல்லது பதவி வெற்றிடமாகும் போது தகுதியானவர்களை நியமிப்பதற்கும் ஜனாதிபதிக்கு முழுமையான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளை வரையறுத்ததாக ஆணைக்குழு செயற்படும்.
ஆணைக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரை ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவராக நியமிப்பார். ஆணைக்குழுவின் கூட்டம் தலைவரினால் கூட்டப்படுவதுடன்,கூட்ட நடப்பெண் மூன்றாக காணப்பட வேண்டும்.
ஆணைக்குழுவின் அதிகாரம் மற்றும் பொறுப்பு
தடை அல்லது பொய்யான கருத்துக்களை வெளியிடும் நபருக்காக விடயதானங்கள் அல்லது விளம்பரத்தை வெளியிடுதல்,அவ்வாறான தவறான செய்திகளை பதிவேற்றம் செய்யும் சேவை வழங்குநரிடம் அத்தகவலை நீக்கிக் கொள்ளுமாறு அறிவுறுத்தல், நீதிமன்றத்தை அவமதித்தல் மற்றும் நீதிமன்றத்தின் அதிகாரம் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயற்பாடுகளுக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுக்க நீதிமன்றத்துக்கும் ஏனைய தரப்புக்கும் ஒத்துழைப்பு வழங்கல், நீதிமன்றத்தின் கட்டளையுடன் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கல்,போலியான செய்தி மற்றும் கருத்துக்கள் தொடர்பில் பொது மக்களுக்கு தெளிவுப்படுத்தல்,சமூக ஊடக சேவையை வழங்கும் இணையத்தளத்தை பதிவு செய்தல், இலங்கையின் நிகழ்நிலை பாதுகாப்பு தொடர்பிலான சகல விடயங்களையும் அரசாங்கத்துக்கு அறிக்கையிடல்.
குற்றம் - இலங்கையில் போலியான விடயம் அல்லது கருத்தை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்வதால் தேசிய பாதுகாப்பு,பொது சுகாதாரம் அல்லது பொது மக்கள் அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தல்
தண்டனை – குற்றவாளிக்கு ஐந்து வருடகால சிறைத்தண்டனை வழங்கல் அல்லது அபராதம் விதித்தல்.அல்லது தண்டனை மற்றும் அபராதத்திற்கு உள்ளாகுதல்.
குற்றம் - நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் போலியான கருத்துக்களை வெளியிடுதல்
தண்டனை –அரசியலமைப்பின் 105 ஆவது விடயதானங்கள் மற்றும் 1978 ஆம் ஆண்டு 02 ஆம் இலக்க நீதிமன்ற கட்டளைச்சட்டத்தின் 18 மற்றும் 55 ஆவது சரத்துகளுக்கு அமைவாக தண்டனை வழங்கல்.
குற்றம் - போலியான கருத்துக்களினால் கலவரத்தை தோற்றுவித்தல், வெறுப்பூட்டும் வகையில் தூண்டிவிடுதல்,
தண்டனை – ஐந்து வருடகால சிறை அல்லது அபதாரம் விதித்தல்,அல்லது சிறை மற்றும் அபராதம் என்ற இரு தண்டனைகளுக்கும் உள்ளாகுதல்,
குற்றம் - உண்மைக்கு புறம்பான கருத்துக்களினால் மத நடவடிக்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தல்
தண்டனை – குற்றவாளிக்கு மூன்று வருடகால சிறை தண்டனை,அபராதம் விதித்தல் அல்லது சிறைத்தண்டனை,அபராதம் ஏதேனுமொன்றுக்கு உட்படுத்தல்
குற்றம் - மத பின்பற்றலின் போது வெறுக்கத்தக்க வகையில் ஒரு தரப்பினரது நம்பிக்கையை புன்படுத்தும் வகையில் உண்மைக்கு புறம்பான கருத்துக்களை வெளியிடுதல்
தண்டனை - குற்றவாளிக்கு இரண்டு ஆண்டுகால சிறை தண்டனை அல்லது அபராதம் விதித்தல் அல்லது சிறை தண்டனை,அபராதம் விதித்தல்.
குற்றம் - நிகழ்நிலை முறைமை ஊடாக இணையத்தளம் ஊடாக உண்மைக்கு புறம்பான கருத்துக்கள் அல்லது விடயங்களை வெளியிடுதல் அல்லது மோசடி செய்தல்
தண்டனை – ஒரு வருடகால சிறைத்தண்டனை அல்லது அபராதத்துக்கு உட்படுதல்,அல்லது சிறைத்தண்டனை,அபராதம் என்ற இரு தண்டனைகளுக்கும் உள்ளாகுதல்,
குற்றம் - பிறிதொரு தரப்பினரை அடையாளப்படுத்தி மோசடியில் ஈடுபடுதல்
தண்டனை – ஐந்து வருடகால சிறைத்தண்டலை அல்லது அபராதம்
குற்றம் - சமூக அமைதியை சீர்குலைப்பதற்காக தூண்டிவிடும் வகையில் உண்மைக்கு புறம்பான விடயங்களை பதிவேற்றம் செய்தல்
தண்டனை – ஐந்து வருடகால சிறைத்தண்டலை அல்லது அபராதம்
குற்றம் - ஒரு நபரை நெருக்கடிக்குள்ளாக்கும் நோக்கில் இலக்குப்படுத்தப்பட்ட நபரை அல்லது இலக்குப்படுத்தப்பட்ட நபருடன் தொடர்புடைய நபரின் 'தனிப்பட்ட தகவல்கள்'( தனிப்பட்ட முறையில் பகிர்ந்துக் கொண்ட புகைப்படங்கள்,குரல் பதிவு,காணொளி பதிவு) என்பனவற்றை வெளியிடுதல்,
தண்டனை – ஐந்து வருட கால சிறைதண்டனை அல்லது ஒரு இலட்சம் ரூபா அபராதம், குற்றத்தை அடிப்படையாக கொண்டு சிறைத்தண்டனையுடன் அபராதம்
குற்றம் - தண்டனை சட்டக் கோவைக்கு அமைவாக சிறுவர் துஸ்பிரயோகத்துடன் தொடர்புடைய செயற்பாடுகள் அல்லது ஊக்குவித்தல் அல்லது சிறுவர்களின் உடலுறுப்புக்களின் தனிப்பட்ட பகுதிகளின் புகைப்படங்கள்,குரல் பதிவுகள் மற்றும் காணொளிகளை வெளியிடுதல்
தண்டனை - 20 வருடகால சிறைத்தண்டனை,அபராதம் அல்லது சிறைத் தண்டனையுடன் அபராதம்.
குற்றம் - ஆணைக்குழுவின் அதிகாரங்களுக்கு அமைய வெளியிடப்படும் விதிவிதானங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டு 24 மணித்தியாலத்துக்குள் அந்த விதிவிதானங்களுக்கு அமைய செயற்படுவதை தவிர்த்தல்.
தண்டனை -ஐந்து வருடகால சிறைதண்டனை அல்லது 10 இலட்சம் ரூபா அபராதம்.
மேற்குறிப்பிடப்பட்ட குற்றங்களை நபரொருவர் இலங்கைக்குள் அல்லது வெளியில் இருந்து புரிவாராயின் அச்சந்தர்ப்பத்தில் இந்த சட்டத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும்.இந்த சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் முன்வைத்த திருத்தங்களுக்கு அப்பாற்பட்ட வகையில் இந்த சட்டமூலம் இயற்றப்பட்டதாக எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
அரசியலமைப்பின் 3 ஆம் அத்தியாயத்தில் வழங்கப்பட்டுள்ள கருத்து மற்றும் பேச்சு சுதந்திரத்தை அனைவரும் சிறந்த முறையில் பயன்படுத்துகிறார்களா என்பது சந்தேகத்துக்குரியது.ஒருவரது உரிமை பிறரது சுதந்திரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது.சுதந்திரம் மற்றும் உரிமை என்பன ஒன்றோடு ஒன்று தொடர்புக் கொண்டுள்ளது.
தற்போதைய டிஜிட்டல் மயமாக்கலின் முரண்பாடுகளின் ஒரு ஆயுதமாக ஒரு தரப்பினர் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துகிறார்கள்.போலி முகப்பு புத்தக கணக்குகளை ஆரம்பித்து தமக்கு எதிர்மறையானவரை தகாத முறையில் பழிப்பது. விமர்சனங்களை முன்வைப்பது ஒட்டுமொத்த சமூக வலைத்தளங்களையும் பாதிக்கப்பட்டோர் குற்றஞ்சாட்டும் நிலையை தோற்றுவித்துள்ளது.
சமூக வலைத்தளங்கள் கண்காணிக்கப்பட வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் கிடையாது. வகுக்கப்படும் கண்காணிப்புக்கள் அரசியலமைப்பினால் வழங்கப்பட்டுள்ள பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை அடியொற்றியதாக காணப்பட வேண்டும். நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் எதிர்மறையான அரசியல் நிலைப்பாட்டை கொண்டுள்ளவரை இலக்காகக் கொண்டுள்ளது என்பது திட்டவட்டமாக தெரிகிறது. ஆகவே 2048 ஆம் ஆண்டு காலப்பகுதியில் டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சியை எதிர்பார்க்கும் அரசாங்கம் டிஜிட்டல் மயமாக்கத்தை மேம்படுத்த அவதானம் செலுத்த வேண்டுமே தவிர டிஜிட்டல் பொருளாதாரத்தை கேள்விக்குள்ளாக்க கூடாது.அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டத்தை போலவே நிகழ்நிலை காப்புச் சட்டம் வெகுகாலம் நீடிக்காது.
நன்றி வீரகேசரி