தைராய்டு பிரச்சனையை குறைக்கும் இலகுவான வழி தெரியுமா..?
6 மாசி 2024 செவ்வாய் 14:27 | பார்வைகள் : 2397
தைராய்டு கோளாறுகள் இன்று மக்களிடம் பரவலாக காணப்படுகின்றன. இதற்கு மரபு ரீதியான பிரச்சனை காரணம் என்றாலும் சில புறநிலை காரணிகளும் தைராய்டு நோய்களின் ஆபத்தை அதிகப்படுத்துகின்றன. அதில் ஒன்றுதான் மன அழுத்தம். நாள்பட்ட மன அழுத்தம் தைராய்டு சுரப்பியை பாதிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. நாம் மன அழுத்தத்தில் இருக்கும் போது நமது உடலில் கார்டிசால் என்ற ஹார்மோனும் அட்ரினலினும் அதிகரிக்கிறது. இந்த ஹார்மோன்களே ஹைபோதைராய்டிஸம் மற்றும் ஹைபர்தைராய்டிஸம் வருவதற்கு காரணமாக இருக்கிறது.நம்முடைய மன அழுத்தத்தை ஒழுங்காக பராமரித்தாலே தைராய்டு குறைபாடுகளை தவிர்க்கலாம். அதற்கான வழிமுறைகளை தான் இந்தக் கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.
தியானம் மற்றும் ஆழ்ந்த மூச்சுப்பயிற்சி : மூச்சுப் பயிற்சி செய்வதெற்கென்று தினமும் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குங்கள். இந்தப் பயிற்சியின் போது உங்கள் மூச்சு உள்ளிழுக்கப்படுவதையும் வெளியேறுவதையும் நன்றாக கவனியுங்கள். மன அழுத்த அளவை குறைப்பதில் தியானம் முக்கிய பங்கு வகிப்பதாக அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
சீரான உடற்பயிற்சி :உடற்பயிற்சி செய்கையில் சந்தோஷ ஹார்மோன் என அழைக்கப்படும் எண்டோர்பின் அதிகமாக சுரக்கிறது. உங்கள் மன அழுத்தத்தை போக்குவதில் முக்கிய பங்காற்றுவதோடு உங்கள் உடல்நலத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதற்கும் உதவுகிறது உடற்பயிற்சி. போதுமான மருந்துகள் எடுத்துக்கொண்டாலும் சோர்வாக இருப்பதாக ஹைபோதைராய்டு நோயாளிகள் அடிக்கடி கூறுவார்கள். அவர்களைப் போன்றவர்களுக்கு உடற்பயிற்சி சிறந்த தீர்வாக இருக்கும்.
ஆரோக்கியமான உணவு: உங்கள் டயட்டில் பழங்கள், காய்கறிகள், முழு தானியங்களை அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள். இவைகளில் அதிகமாக ஆண்டி ஆக்ஸிடெண்ட் உள்ளதால் உங்கள் உடலில் உள்ள வீக்கம் குறையும். தைராய்டு முறையாக செயல்படுவதற்கு அயோட்டின், செலினியம், துத்தநாகம் போன்றவை அவசியமாகும். ஆகையால் இவை அதிகமுள்ள நட்ஸ், முழு தானியங்கள், விதைகளை அதிகம் உணவில் சேர்த்து தைராய்டு ஆரோக்கியத்தை பேணுங்கள்.
தூக்கம் : நம்முடைய உடலும், தைராய்டும் ஒழுங்காக செயல்பட வேண்டுமென்றால் குறைந்தது எட்டு மணி நேரம் நன்றாக தூங்க வேண்டும். தூங்குவதற்கு முன்பு மொபைல் போன் பயன்படுத்துவதை குறைத்து புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அதேப்போல் நீங்கள் தூங்கும் அறையும் நல்ல காற்றோட்டத்தோடு இருளாக இருக்க வேண்டியது அவசியம்.
இன்றைய நாளை வாழ்தல் : நேற்று நடந்த சம்பவங்களையோ அல்லது நாளை நடக்கப் போகும் சம்பவங்களை நினைத்தோ கவலைப்படாமல் இன்றைய நாளை மட்டும் கவனம் செலுத்துங்கள். எவ்வளவு பெரிய பிரச்சனை வந்தாலும், இன்று என்ன வேலையை முடிக்க வேண்டியுள்ளது என்பதில் உங்கள் கவனத்தை செலுத்துங்கள். இந்த அணுகுமுறையை பின்பற்றினாலே பல பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
வொர்க் லைஃப் பேலன்ஸ் : இன்று வீட்டிலிருந்தே வேலை பார்ப்பது அதிகரித்திரிக்கிறது என்றாலும் இதில் சில பாதகங்களும் உள்ளது. இதனால் நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கைக்கும் வேலைக்கும் இடையே இருந்த கோடு அழிந்துள்ளது. வீட்டிலிருந்தே வேலை பார்ப்பதால் அதிகப்படியான வேலைப் பளு, சீரற்ற நேரம், டெட்லைன் போன்றவை நமக்கு மன அழுத்தத்தை உருவாக்குகிறது. நம்முடைய தனிப்பட்ட சந்தோஷத்திற்கும் குடும்பத்திற்கும் நேரம் ஒதுக்குவது அவசியமாகும். வேலை நேரத்திற்கு இடையே சிறிது ஓய்வெடுப்பது உங்களுக்கு புத்துணர்ச்சியை தரும். உங்கள் மன அழுத்தத்தை குறைக்க சில நாட்கள் விடுமுறை எடுத்துக்கொள்ளுங்கள்.
மனநல ஆலோசனை : தேவைப்பட்டால் மனநல ஆலோசகரிடம் உங்கள் நிலையைக் கூறி, உங்களுக்கு தேவையான உதவியைக் கேளுங்கள். இதுகுறித்து எந்தவித குற்றவுணர்ச்சியும் கொள்ளத் தேவையில்லை. இதுபோன்ற அலோசனைகளும் தியானப் பயிற்சியும் உங்களிடம் மிகப்பெரிய வித்தியாசத்தை உருவாக்கும்.