Paristamil Navigation Paristamil advert login

`தொடுதல்' பற்றி குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்க மறக்காதீர்கள்...!

`தொடுதல்' பற்றி குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்க மறக்காதீர்கள்...!

8 பங்குனி 2024 வெள்ளி 10:10 | பார்வைகள் : 2899


இன்றைக்கு வயது வித்தியாசமின்றி பாலியல் துஷ்பிரயோகங்கள் நடக்கின்றன. எந்த வயது குழந்தைகளையும் பலாத்காரம் செய்து, அவர்களின் வாழ்க்கையையே நிர்மூலமாக்க, பலர் சமூகத்தில் சுற்றித் திரிகின்றனர். பிறந்த குழந்தைகளை கூட விட்டு வைப்பதில்லை. எனவே, இதுபோன்ற பாதிப்புகளில் இருந்து குழந்தைகளை காப்பாற்றுவதற்காக, பாலியல் கல்வியை குறிப்பாக, தொடுகை கல்வியை நாம் சிறு வயது முதலே பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.

பாலர் வகுப்பு என்கிற போது, சுமார் ஏழு, எட்டு வயதில் இருந்தே நாம் இவற்றை சொல்லிக்கொடுக்க ஆரம்பிக்கலாம். தெளிவாக சொல்வதானால், ஒரு பிள்ளைக்கு எப்போது சிந்திக்கும் ஆற்றல் ஏற்படுகிறதோ அப்போது இருந்தே பாலியல் கல்வியை சொல்லிக்கொடுக்கலாம்.

பாலியல் கல்வி என்பது அறுவறுக்க தக்கதல்ல... உடல் உறுப்புகளை இனங்காட்டுவது, உறுப்புகளின் முக்கியத்துவங்களை பற்றி எடுத்துரைப்பது, தொடுகை பற்றி கற்பிப்பது முதலிய அம்சங்கள் இதில் உள்ளன.

நாம் கற்பிக்கும் பாலியல் கல்வியை குழந்தைகளால் மிகத் தெளிவாக புரிந்துகொள்ள முடியுமா, அதற்கு அவர்களின் மனநிலை பக்குவப்பட்டிருக்குமா என்கிற சந்தேகங்கள் பலர் மத்தியில் காணப்படுகின்றன.

தொடுகை பற்றி அறியாத, கேள்விப்படாத ஒரு குழந்தையை நபர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்துகிறார் எனில், தனக்கு நேர்வது தவறு என்பதை அந்த குழந்தையால் உணர முடியாது. எனவே குழந்தைகளுக்கு புரியும் அளவுக்கு நாம் தொடுகை குறித்து கற்பிக்க வேண்டும்.

சில குழந்தைகளுக்கு வயதுக்கு மீறிய உடல் வளர்ச்சி காணப்பட்டாலும், மனதளவில், குழந்தைத்தனம் மிக்கவர்களாகவே இருப்பர். அந்த குழந்தைகள் நாம் சொல்லும் எந்தவொரு விஷயத்தையும் விளையாட்டாகவே கருதுவார்கள். அதன் தீவிரத்தன்மையை புரிந்துகொள்ள மாட்டார்கள்.

ஆகவே, பெற்றோர் அல்லது ஆசிரியர் சொல்வதை கேட்டு, புரிந்துகொள்ளும் இயல்புநிலைக்கு குழந்தைகள் வரவேண்டும். அப்போது தான், நாம் சொல்லும் எதையும் குழந்தைகளால் சிந்தித்து செயல்பட முடியும்.

மேலும், இன்றைய புள்ளிவிவரப்படி துஷ்பிரயோகம் செய்யப்பட்டு சிறு வயதிலேயே வாழ்க்கையை தொலைத்த சிறுவர்களில் அதிகமானோர் மனநலம் குன்றியவர்களும், மாற்றுத் திறனாளிகளுமே என்பது தெரியவந்துள்ளது. புத்தி சுவாதீனம் உள்ள குழந்தைகளுக்கே பாலியல் கல்வியை வழங்குவதில் சிக்கல்கள் இருக்கிறதென்றால், மனநலம் குன்றிய குழந்தைகளுக்கு அதை எப்படி நம்மால் சொல்லிக்கொடுக்க முடியும்? இது மிகப் பெரிய சவாலாகவே உள்ளது.

ஆண் குழந்தைகளுக்கும் பாலியல் கல்வி முக்கியம்

பாலியல் கல்வி, குறிப்பாக தொடுகை என்பது அனைத்து குழந்தைகளுக்கும் சொல்லிக்கொடுக்க வேண்டிய ஒன்றாகும். பொதுவாக, அனைவருமே பாலியல் துஷ்பிரயோகத்தை பற்றி பேசுகின்றபோது பெண் பிள்ளைகளின் மீதே அதிக கவனம் செலுத்துகிறார்கள்.

சிறுவர் உலகத்தில் பெண் குழந்தைகள் மட்டுமல்ல, ஆண் குழந்தைகளும் பாதுகாக்கப்பட வேண்டியவர்களே. அவர்களுக்கும் பாலியல் கல்வியை கட்டாயம் வழங்க வேண்டும். அவர்களுக்கும் தொடுகை பற்றி கற்பிக்கவேண்டியது அவசியமாகின்றது. ஆண் குழந்தைகளுக்கும் தொடுதல் பற்றிய விழிப்புணர்வு, தொடுகை பற்றி கற்பிக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு முறையான தொடுதல் எது?, முறையற்ற தொடுதல் எது...? என்பது பற்றி சொல்லிக்கொடுத்தால் தான் அவர்களுக்கு நேரும் ஆபத்துக்களை தடுக்க முடியும்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்