5வது முறையாக வெற்றிக்கூட்டணி: முதல்வர் ஸ்டாலின்
10 பங்குனி 2024 ஞாயிறு 13:46 | பார்வைகள் : 2914
2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் துவங்கி, 2024ம் ஆண்டு தேர்தல் வரை 5வது முறையாக வெற்றிக்கூட்டணி தொடர்கிறது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பதாவது: அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர் ஸ்டாலின் என்பதை மனதில் வைத்து தி.மு.க.,வினர் பணியாற்ற வேண்டும். 10 ஆண்டு பா.ஜ., அரசு நாட்டை பல்லாண்டு காலம் பின்னோக்கி கொண்டு போய்விட்டது. 40க்கு 40 என்ற வெற்றியால் தான் நாம் நினைக்கும் அரசியல் மாற்றம் நிகழும். 2019 லோக்சபா தேர்தல், இடைத்தேர்தல்கள், 2021 சட்டசபை தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், ஊரக உள்ளாட்சி தேர்தல் ஆகிய அனைத்தையும் இக்கூட்டணி மூலமாகத்தான் வென்று காட்டினோம். 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் துவங்கி 2024ம் ஆண்டு தேர்தல் வரை 5வது முறையாக வெற்றிக்கூட்டணி தொடர்கிறது.
அடுத்த அரசு சமூகநீதி, மாநில உரிமை, மக்கள் மேம்பாடு உள்ளடக்கிய கூட்டாட்சியாக அமைய வேண்டும். மூன்றாண்டு திராவிட மாடல் ஆட்சி தமிழகத்துக்கு உருவாக்கி கொடுத்த ஏற்றத்தை மக்களுக்கு நினைவூட்டுங்கள். கூட்டாட்சி அமைய வேண்டிய அரசியல் தேவையை உணர்த்துங்கள். மாநிலங்களை மதிக்கும் மத்திய அரசை அமைக்க வேண்டும். பா.ஜ., வை வீழ்த்தியாக வேண்டும் என்ற அரசியல் நோக்கம் 'இண்டியா' கூட்டணிக் கட்சிகளால் மக்கள் மனதில் விதைக்கப்பட்டு விட்டது.
பா.ஜ.,வுக்கு எதிரான ஓட்டுகள் சிதறிவிடக் கூடாது என்ற நோக்கத்துடன் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பல்வேறு மாநிலங்களில் கூட்டணிப் பேச்சுவார்த்தையையும் துவங்கி நடத்தி வருகிறார்கள். சில மாநிலங்களில் பேச்சுவார்த்தைகள் முடிவுற்று, தொகுதிப் பங்கீடுகள் செய்யப்பட்டும் விட்டன. தமிழகத்தைப் பொறுத்தவரை தி.மு.க., தலைமையிலான 'இண்டியா' கூட்டணியில் தொகுதிப் பங்கீடு சிறப்பாக முடிவுற்றது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார்.