அனைவரும் ஒன்றிணைய வேண்டும் - ஜனாதிபதி ரணில் கோரிக்கை
10 பங்குனி 2024 ஞாயிறு 15:39 | பார்வைகள் : 3204
நாட்டை கடனில் இருந்து விடுவிக்க அனைவரும் ஒன்றிணையுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.
எதிர்வரும் தேர்தலை இலக்காகக் கொண்டு குளியாப்பிட்டியில் இன்று இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் முதலாவது பொதுக்கூட்டத்தில் இன்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
இதில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டதுடன், ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க களமிறங்குவார் என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் கலந்துகொண்டு உரையாற்றியிருந்தார்.
நாடு நெருக்கடியில் இருந்தபோது, ஏனையோர் பின்வாங்கியபோது, தாம் சவால்களை ஏற்றுக்கொண்டு, தப்பியோடாமல் இருந்தையினாலேயே தம்மால் இன்று ஜனாதிபதியாக பதவி வகிக்க முடிந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நெருக்கடி காலத்தில் பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ள வருமாறு அப்போதைய ஜனாதிபதி அழைப்புவிடுத்தபோது ஏனையோர் பின்வாங்கினர்.
சஜித் பிரேதமதாச, அனுரகுமார திசாநாயக்க உள்ளிட்டோர் பிரதமர் பதவியை ஏற்க மறுத்த நிலையில், நாட்டின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு தாம் அந்த பதவியை ஏற்றதாக அவர் குறிப்பிட்டார்.
தாம் உண்மையை கூறி, களமிறங்கியமையினால் மக்கள் தம்மை நிராகரிக்கவில்லை.
எனவே, எந்த கட்சிக்கு வாக்களித்திருந்தாலும் தற்போது நாட்டை மீட்டெடுக்க தம்மோடு இணையுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.