தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட நாங்கள் முட்டாள்கள் அல்ல: கர்நாடக துணை முதல்வர்
11 பங்குனி 2024 திங்கள் 14:46 | பார்வைகள் : 3165
தமிழகத்திற்கு காவிரியில் தற்போது தண்ணீர் திறந்துவிட முடியாது; தண்ணீர் திறந்துவிட நாங்கள் முட்டாள்கள் அல்ல என கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அம்மாநில துணை முதல்வரும், நீர்வளத்துறை அமைச்சருமான டி.கே.சிவக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பெங்களூருவின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு, மாளவல்லியில் உள்ள ஷிவா நீர்த்தேக்கத்தை நிரப்புவதற்காக கிருஷ்ணராஜ சாகர் (கேஆர்எஸ்) அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டது. அங்கிருந்து பெங்களூருக்கு குடிநீர் தேவைக்கு நீர் கொண்டு செல்லப்படுகிறது.
தமிழகத்திற்கு காவிரியில் தற்போது தண்ணீர் திறந்துவிட முடியாது. தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட நாங்கள் முட்டாள்கள் அல்ல. எவ்வளவு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது என்ற விவரங்கள் எங்களிடம் உள்ளன. பெங்களூருவுக்கு தண்ணீர் பம்ப் செய்யும் இடத்தில் நீர் மட்டம் குறைவாக உள்ளது.
தண்ணீர் பம்ப் செய்யப்படுவதற்கு ஒரு குறிப்பிட்ட மட்டத்தில் நீர் இருக்க வேண்டும். இதனால் அந்த அளவை பராமரிக்க தண்ணீர் விடுவிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.