இறால் முட்டை மசாலா
12 பங்குனி 2024 செவ்வாய் 07:22 | பார்வைகள் : 1809
இறாலுடன் புரோட்டின் நிறைந்த முட்டை சேர்த்து சமைத்தால் சுவை எவ்வளவு அருமையாக இருக்கும். எனவே இறால் மற்றும் முட்டை சேர்த்து காரசாரமான இறால் முட்டை மசாலாவை சுவையாக எப்படி செய்யலாம் என்று இங்கே பார்க்கலாம்.இந்த இறால் முட்டை மசாலாவை நாம் சூடான சாதம், சப்பாத்தி, சாம்பார் சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் சுவை அள்ளும்.
தேவையான பொருட்கள் :
இறால் - 250 கிராம்
முட்டை - 3
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
நறுக்கிய பெரிய வெங்காயம் - 1/2 கப்
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி தூள் - 2 டீஸ்பூன்
கருப்பு மிளகு தூள் - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
பெருஞ்சீரகம் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி இலை - சிறிதளவு
உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை :
கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம் மற்றும் பெருஞ்சீரகம் சேர்த்து கொள்ளுங்கள்.
இவை பொரிந்ததும் கறிவேப்பிலை, இரண்டாக நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கி நிறம் மாறியவுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து கலந்துவிட்டுக்கொள்ளுங்கள்.
பிறகு அதனுடன் நறுக்கிய தக்காளி மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கி கடாயை மூடி போட்டு சமைக்கவும்.
தக்காளி மென்மையாக வதங்கியவுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் கொத்தமல்லி தூள் சேர்த்து நன்றாக கலந்து வதக்கவும்.
மசாலாக்களின் பச்சை வாசனை போனவுடன் அதனுடன் சுத்தம் செய்த இறால்களை சேர்த்து மசாலாக்களுடன் நன்றாக கலந்துவிட்டு கடாயை மூடி ஓரிரு நிமிடங்கள் சமைக்கவும்.
ஐந்து நிமிடங்கள் கழித்து இறாலை கடாயின் ஒரு பக்கத்திற்கு நகர்த்தி மறுபுறம் 3 முட்டைகளை உடைத்து ஊற்றிக்கொள்ளுங்கள்.
பின்னர் முட்டையில் சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு கைவிடாமல் கலந்துவிட்டு கொள்ளுங்கள்.
முட்டை நன்றாக வெந்து பொடிமாஸ் போல் மாற்றியவுடன் அதை இறால் கலவையுடன் கலந்து ஓரிரு நிமிடங்களுக்கு சமைக்கவும்.
பிறகு அதில் தேவையான அளவு மிளகு தூள் சேர்த்து நன்றாக கலந்து விட்டுக்கொள்ளவும்.
ஓரிரு நிமிடங்கள் கழித்து இறுதியாக அதன்மேல் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கினால் சுவையான இறால் முட்டை மசாலா ரெடி…