Paristamil Navigation Paristamil advert login

சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் உடவளவை யானைகள் இடைத்தங்கல் சரணாலயம் !

சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் உடவளவை யானைகள் இடைத்தங்கல் சரணாலயம் !

13 பங்குனி 2024 புதன் 11:52 | பார்வைகள் : 1831


காடுகளில் அநாதரவாக சுற்றித் திரியும் யானைகளை பராமரிக்கும் பொருட்டு இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள உடவளவை எனும் பகுதியில் யானைகள் இடைத்தங்கல்  சரணாலயம் (Elephant Transit Home)  ஒன்று இயங்கி வருகிறது.

குறித்த சரணாலயம் சுற்றுலாப் பயணிகளை கவரும் சுற்றுலாத்தலமாகவும் விளங்குகின்றது.

உடவளவை பகுதியில் அமைந்துள்ள காடுகளில் சுற்றித்திரியும் 125 யானைகளில் 68 யானைகள் இந்த சரணாலயத்தில் பராமரிக்கப்படுகின்றன. எந்தவித அரச நிதி உதவிகளும் இன்றி  இந்த யானைகள் இங்கு பராமரிக்கப்படுகின்றமை விசேட அம்சமாகும்.

இங்குள்ள யானைகள் நோய்வாய்ப்பட்டால் வைத்திய வசதிகளும் வழங்கப்படுகின்றன. இந்த யானைகளை பார்வையிட உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் சரணாலயத்திற்கு விஜயம் செய்கின்றனர்.

இந்த யானைகளுக்கு உரிய நேரத்தில் உணவளிக்கப்பட்டு மிகவும் பாதுகாப்பாக பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இந்த சரணாலயத்தில் 68 யானைகள் பாராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த யானைகளுக்கு ஒரு நாளில்  மூன்று முறை பால், அரிசி, இலை குழைகள் என்பன உணவாக வழங்கப்படுகின்றன.

இங்கு இருக்கக்கூடிய 68 யானைகளுக்கும் உணவுகளை வழங்க பராமரிப்பாளர்கள் உள்ளனர். இதனை பார்வையிட வருவோர் யானைகளின் அருகில் செல்ல முடியாது. ஏனெனில் அவை அனைத்தும் காட்டு யானைகள் என்பதால் தொலைவில் இருந்தே பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

யானைகள் இடைத்தங்கல்  சரணாலயத்திற்கு உலகின் தரம் வாய்ந்த தேயிலையான டில்மா டீ  நிறுவனம் நிதியுதவி வழங்கி வருகின்றது. அத்துடன் உடவளவை தேசிய பூங்காவின் பராமரிப்பிற்காக டில்மா டீ  நிறுவனத்துடன் இணைந்து வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களமும் 25 மில்லியன் ரூபா வருடாந்தம் நிதியை வழங்குகிறது.

டில்மா டீ நிறுவனத்தின் கீழ்தான்  யானைகள் இடைத்தங்கல்  சரணாலயம் இயங்கி வருகிறது. இது மாத்திரமின்றி  இந்த யானைகள் சரணாலயத்திற்கு  வருகை தரக்கூடிய உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாபயணிகளுக்கு நுழைவுச்சீட்டுகள் வழங்கப்படுகிறது. அதன் படி  உள்ளூர் சுற்றுலாபயணி ஒருவருக்கு 300 ரூபாவும், வெளிநாட்டு சுற்றுலாப்பயணி ஒருவருக்கு 20 அமெரிக்க டொலர்களும் அறவிடப்படுகின்றன. இவ்வாறு அறவிடப்படுகின்ற பணமே இந்த யானைகளை பராமாரிப்பதற்கு உதவுகின்றது. 

இதேவேளை, உடவளவை தேசிய பூங்காவில் (Udawalawe National Park) உள்ள யானைகள் மற்றும் பல்வேறு வகையான விலங்களுகள், பறவையினங்களை பார்வையிடுவதற்கும் பணம் அறவிடப்படுகின்றது. இந்த பூங்காவை  பார்வையிடுவதற்கு யானைகள்  சாரணாலயத்தின் மூலம் வாகன வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் டில்மா டீ நிறுவனத்தின் கீழ் இயங்கும் உடளவையிலுள்ள  யானைகள் இடைத்தங்கல் சரணாலயத்தில் யானை அறிவு பயணம் (Elephant Knowledge Walk) எனும் காட்சிக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் காட்சிக் கூடம் டில்மா டீ நிறுவனத்தின் தலைவர் டில்ஹான் சி. பெர்னாண்டோ , வனவிலங்கு திணைக்கள அதிகாரி ரஞ்சன் மாரசிங்க, முன்னாள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் சுமித் பிலப்பிட்டிய, ஷிராணி யசரத்ன (இலங்கை பல்லுயிர்) ஆகியோரால் கடந்த  சனிக்கிழமை (09) புதிப்பிக்கப்பட்டு மீள திறந்து வைக்கப்பட்டதுடன், யொகான் ஜெம் & ஜுவல்லரியும் திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வின் போது கருத்து தெரிவித்த டில்மா டீ நிறுவனத்தின் தலைவர் டில்ஹான் சி. பெர்னாண்டோ,

இந்த நிகழ்வு யானைகள் பற்றிய நிகழ்வு மாத்திரமோ அல்லது இயற்கையை பற்றியது மாத்திரமோ அல்லாமல், இது நம் நாட்டின் பொருளாதாரத்திற்கு பெறுமதி சேர்க்க கூடிய ஒரு விடயம் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

யானைகள் நம் சுற்றுச்சூழல் அமைப்பினை பாதுகாக்கும் ஒரு அங்கமாகும். அழிந்துவரும் காடுகளை மீண்டும் உருவாக்கும் ஒரு முறைமையின் பகுதியாகவும் இது இருக்கின்றது. அதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

ஒரு யானை இலங்கையின் பொருளாதாரத்திற்கு 1.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை சேர்க்கின்றது. இலங்கையின் சுற்றுலாத்துறையையும் மேம்படுத்துகிறது.  அத்துடன் இயற்கையின் அழிவிற்கு எதிராக செயற்படுகின்றது.

இவ்விடத்தில் டில்மா ஏன் இதனுள் வருகிறது என்று நோக்கும் போது, எனது தந்தை இந்த வியாபாரத்தை ஆரம்பித்தார். இயற்கைக்கும் நமக்கும் இடையில் சுவை மற்றும் இயற்கையால் கொடுக்கப்பட்ட பல விடயங்களை நாம் புரிந்துகொண்டுள்ளோம்.

அதனால்தான் இயற்கையுடன் அதிகம் இணைந்திருக்கின்றோம். அதற்கு நாம் மதிப்பளிக்கின்றோம். நாம் மட்டுமல் எமது ஒட்டு மொத்த டில்மா குழுவும் இவ்வாறே செயற்படுகின்றது என்றார்.

மேலும் கருத்து தெரிவித்த முன்னாள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் சுமித் பிலப்பிட்டிய

இலங்கையர்கள் என்ற வகையில் அபிவிருத்தி பாதையில் இதனை எடுத்து சென்றுள்ளோம். அபிவிருத்தி செயற்பாடுகளின் போது உட்கட்டமைப்பும் அபிவிருத்தியும் ஒன்றாக இருக்க வேண்டும். 

அபிவிருத்தியின்போது முக்கியமாக வனப் பகுதிகளை பாதுகாப்பதை விட்டு அதனை வீணடிப்பதற்கே நாங்கள் முயல்கிறோம். அபிவிருத்தி என்று சொல்லும் போது வளிமண்டலம், சூழல் போன்றவற்றில் மிகவும் கவனம் செலுத்த வேண்டும். 

நிலையான அபிவிருத்தியையும் சேவைகள் அபிவிருத்தியையும் முறையாக புரிந்துக்கொள்ள வேண்டும். இதனை புரிந்துகொண்டால் மாத்திரமே நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும். 

இலங்கை அரசாங்கம் நிலையான அபிவிருத்தியில் கவனம் செலுத்தி விட்டு சேவைகள் அபிவிருத்தியை கைவிட்டுள்ளது. வனவிலங்குகளை பாதுகாப்பது தொடர்பில் இலங்கை முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. 

குறிப்பாக யானைகள் பாதுகாக்கப்படுகின்றனவா என்பதை நோக்கினால் இலங்கையில் யானையை பாதுகாப்பது குறைவு என்றே  சொல்ல வேண்டும். பல இடங்களில் காடுகளை அழிப்பதன் காரணமாக யானைகள் மற்றும் வனவிலங்குகள் பாதிக்கப்படுகின்றன. 

இலங்கை நாட்டில் யானைகளை பாதுகாப்பது என்பது மிக கடினமான விடயம். இருந்தாலும் பாதுகாப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றன. அதை இன்னும் மேம்படுத்தினால் சிறப்பாக அமையும் என்றார்.

வனவிலங்கு திணைக்கள அதிகாரி ரஞ்சன் மாரசிங்க 

நான் 25 வருடங்களாக அரசசேவையில் பணியாற்றியுள்ளேன். வனவிலங்கு பாதுகாப்பு என்பது அரசாங்கத்திற்கு மாத்திரம் உரிய விடயமல்ல எங்கள் அனைவருக்கும் உரிய விடயம் என நான் கருதுகின்றேன்.

தனியார் துறைக்கே உரிய திறமைகள் உள்ளன. அரசசேவைக்கு அதற்குரிய அதிகாரங்கள் உள்ளன. ஆகவே நீங்கள் இந்த திட்டத்தில் இணைந்துகொண்டால் நாங்கள் இணைந்து செயற்படலாம்.

இந்த யானைகளுக்கான இடைத்தங்கல் சரணாலயம் சர்வதேச தராதரத்தைப் போன்று இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. 

ஐக்கியப்பட்ட தராதரத்திற்கு அப்பால் நீங்கள் சர்வதேச ஆராய்ச்சி நிலையங்களின் உருவாக்கத்தை பார்த்துள்ளீர்கள் இது அதில் ஒன்று. 

சமூகத்தை அடிப்படையாகக் கொண்ட அபிவிருத்தியை நான் பார்க்க விரும்புகின்றேன். நாங்கள் இன்றுமற்றுமொரு நிலையத்தை திறந்து வைத்துள்ளோம். 

யானை அறிவு பயணம் (Elephant Knowledge Walk )

இங்கு யானைகள் பற்றி அறியக் கூடிய பல்வேறு வகையான  தகவல்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. யானையொன்றின் வாழ்வியல், கலாச்சாரம் , சமய ரீதியான கொள்கை போன்றவைகள் புகைப்படங்கள் மூலம் மிகத் தெளிவாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. யானையொன்றின் உடற் பாகங்களை அறிந்துகொள்ள ஆய்வுககூடமொன்றும் இங்குள்ளது. யானைகள் பற்றி அறிந்துகொள்வதற்காக பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் கற்பித்தல் செய்ற்பாடுகளும் இங்கு இடம்பெறுகின்றன.

யொகான் ஜெம் & ஜுவல்லரி நிலையம் (yohan gem & jewellery)

கவரக்கூடிய அழகிய மாணிக்க கல்லால் உருவாக்கப்பட்ட ஆபரணங்கள், பெண்களுக்குரிய கைப்பைகள், மரத்தாலான யானை சிற்பங்கள் மற்றும் பிற விலங்குகளின் உருவங்கள், ஆடைகள், யானைகள் பற்றி தகவல் தரக்கூடிய புத்தகங்கள் என்பன இங்கு காணப்படுகின்றன. யானைகள் இடைத்தங்கல்  சரணாலயத்திற்கு வருகைதருவோர், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் இதனை பெற்றுக்கொள்ள முடியும்.

நன்றி வீரகேசரி

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்