சிக்ஸர் மழையில் 37 பந்தில் 71 ரன்! குஜராத் ஜெயண்ட்ஸை அலறவிட்ட வீராங்கனை
14 பங்குனி 2024 வியாழன் 09:17 | பார்வைகள் : 2060
WPL தொடரில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
மகளிர் பிரீமியர் லீக் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
இறுதிப்போட்டிக்கு முதலில் நுழையும் அணி எது என்பதை முடிவு செய்யும் போட்டியில், குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதின.
நாணய சுழற்சியில் வென்று குஜராத் அணி முதலில் துடுப்பாடியது.
16 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
பின்னர் வந்த போஎபே லிட்ச்ஃபீல்டு 21 ஓட்டங்களும், கார்ட்னர் 12 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினர்.
பொறுப்புடன் ஆடிய பாரதி ஃபுல்மலி 36 பந்துகளில் 42 ஓட்டங்களும், பிரைஸ் 22 பந்துகளில் 28 ஓட்டங்களும் எடுத்தனர்.
இதன்மூலம் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 126 ஓட்டங்கள் எடுத்தது.
டெல்லி அணி தரப்பில் மரிசன்னே காப், ஷிகா பாண்டே மற்றும் மின்னு மணி தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
அதன் பின்னர் களமிறங்கிய டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் மெக் லென்னிங் 10 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 18 ஓட்டங்கள் விளாசி அவுட் ஆனார்.
அடுத்து வந்த அலிஸ் கேப்செ டக்அவுட் ஆக, ஷஃபாலி வெர்மா மற்றும் ஜெமிமா ரோட்ரிகஸ் கூட்டணி அதிரடியாக ஆடி வெற்றியை நிலைநாட்டியது.
சிக்ஸர்களை பறக்கவிட்டு ருத்ர தாண்டவம் ஆடிய ஷஃபாலி வெர்மா, 37 பந்துகளில் 5 சிக்ஸர், 7 பவுண்டரிகள் விளாசி 71 ஓட்டங்கள் எடுத்தார்.
ஜெமிமா ரோட்ரிகஸ் 28 பந்துகளில் ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 38 ஓட்டங்கள் எடுக்க, டெல்லி அணி 13.1 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 129 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் டெல்லி அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. 71 ஓட்டங்கள் விளாசிய ஷஃபாலி வெர்மா ஆட்டநாயகி விருது பெற்றார்.