திருட்டு வழக்கில் குற்றவாளியாக நியூஸிலாந்து முன்னாள் எம்.பி.
14 பங்குனி 2024 வியாழன் 09:27 | பார்வைகள் : 3938
நியூஸிலாந்து பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த நிலையில் கடையொன்றில் திருடியதாக குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோல்ரிஸ் கஹ்ரமான், தான் குற்றவாளி என நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.
43 வயதான கஹ்ரமான் திருட்டுக் குற்றச்சாட்டையடுத்து கடந்த ஜனவரி 16 ஆம் திகதி, பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்திருந்தார்.
இந்நிலையில், இது தொடர்பான வழக்கில், தான் குற்றவாளி என ஆக்லாந்து மாவட்ட நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை கஹ்ரமான் ஒப்புக்கொண்டார்.
ஈரானில் பிறந்த கோல்ரிஸ் கஹ்ரமான், தனது குடும்பத்தினருக்கு நியூஸிலாந்தில் அரசியல் புகலிடம் கிடைத்தபோது நியூஸிலாந்துக்கு புலம்பெயர்ந்தவர்.
சட்டத்தரணியான அவர் 2017 ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானார்.
நியூஸிலாந்துக்கு அகதியாக வந்த பின்னர் அந்நாட்டுப் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவான முதல் நபர் கோல்ரிஸ் கஹ்ரமான் ஆவார்.