அணு ஆயுத அச்சுறுத்தல்..?? ’நாங்கள் தயார்!”ஜனாதிபதி நேர்காணல்! - முழுமையான விபரங்கள்!
15 பங்குனி 2024 வெள்ளி 02:07 | பார்வைகள் : 6372
’இரஷ்ய-உக்ரேன் யுத்தத்தில் இரஷ்யா வெற்றி பெற்றால் பிரான்சும் ஐரோப்பாவும் தனது பாதுகாப்பை இழக்க நேரும்’ என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
நேற்று வியாழக்கிழமை TF1 மற்றும் France 2 தொலைக்காட்சிகள் வழியாக ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் நேர்காணல் வழங்கியிருந்தார். இந்த 30 நிமிட நேர்காணலில் இரஷ்யா-உக்ரேன் யுத்தம் தொடர்பான பல தகவல்களை தெரிவித்திருந்தார்.
‘இந்த யுத்தத்தில் இரஷ்யா வெற்றிபெற்றால், பிரான்சும் ஐரோப்பாவும் பாதுகாப்பை இழக்க நேரும், எங்களுக்கு ஒரு குறிக்கோள் உள்ளது: ரஷ்யா இந்த போரை வெல்ல முடியாது, வெற்றி பெறக்கூடாது.’ என தெரிவித்த அவர், ”"நாங்கள் ஒருபோதும் தாக்குதலை நடத்த மாட்டோம், நாங்கள் ஒருபோதும் தாக்குதலுக்கான முன்முயற்சி எடுக்க மாட்டோம்." எனவும் தெரிவித்தார்.
அதேவேளை, இரஷ்யா விடுத்த அணுஆயுத அச்சுறுத்தல் தொடர்பாக தெரிவிக்கையில், ‘அதனை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்’ என தெரிவித்தார். அணு ஆயுதம் தொடர்பில் பிரான்ஸ் சில கொள்கைகளோடு இருப்பதாகவும், எங்களிடம் உள்ள அணு ஆயுதம் அசைக்க முடியாமல் உறங்கிப்போன ஒரு இயந்திரம் இல்லை, (பயன்படுத்துவதற்கு தயாரான நிலையில் உள்ள எனும் அர்த்தம் குறிக்கும் விதமாக) என தெரிவித்தார்.