பிரித்தானிய பாதுகாப்புச் செயலரின் விமானம் ஹேக் செய்த ரஷ்யா...
15 பங்குனி 2024 வெள்ளி 12:09 | பார்வைகள் : 4033
பிரித்தானிய பாதுகாப்புச் செயலர் பயணித்த விமானத்தை ரஷ்யா ஹேக் செய்திருக்கலாம் என்னும் சந்தேகம் பிரித்தானிய விமானப்படை விமானிகளுக்கு உருவாகியுள்ளது.
பிரித்தானிய பாதுகாப்புச் செயலரான கிராண்ட் ஷாப்ஸ் (Grant Shapps), போலந்தில் நடைபெற்றுவரும் நேட்டோ படைகளின் போர்ப்பயிற்சியில் பங்கேற்றுவரும் பிரித்தானிய ராணுவ வீரர்களை சந்திப்பதற்காக விமானத்தில் சென்றுள்ளார்.
போலந்திலிருந்து அவர் மீண்டும் பிரித்தானியா திரும்பும்போது, ரஷ்யாவின் Kaliningrad நகருக்கு மேலாக அவரது விமானம் பறந்துவந்துள்ளது.
அப்போது, சுமார் அரை மணி நேரத்துக்கு அவரது விமான GPS மற்றும் பிற சிக்னல்கள் செயலிழந்துள்ளன.
அதிர்ஷ்டவசமாக, கிராண்ட் ஷாப்ஸ் ஒரு விமானி என்பதால், அந்த விடயம் விமானத்தின் பாதுகாப்பை பாதிக்கவில்லை என்பதை அவர் உறுதி செய்துள்ளார்.
இப்படி பிரித்தானிய விமான சிக்னல்களை முடக்கியதன் பின்னணியில் ரஷ்யா இருப்பதாக சந்தேகிக்கும் விமானப்படையினர், ரஷ்யாவின் இந்த செயலை கடுமையாக கண்டித்துள்ளனர்.