'தமிழர் வர்த்தக சங்கம் பிரான்ஸ்' 14/03/2024 அன்று நடத்திய 'ஒப்பனை இல்லாத உண்மைக்கான' ஊடகர்கள் சந்திப்பு.
17 பங்குனி 2024 ஞாயிறு 05:44 | பார்வைகள் : 6954
தாயகத்தில் போரினாலும், விபத்துக்களாலும் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டு, கழுத்துக்கு கீழும், இடுப்புக்கு கீழும் இயக்கம் இன்றி, தனியே இருக்கைகளிலும், படுக்கைகளிலும், தங்கள் ஒவ்வொரு அசைவுக்கும் பிறரின் உதவியை நாடி "ஏன் இன்னும் உயிர் வாழ்கிறோம்?" என்னும் மனவேதனையுடன் மீதி வாழ்வைக் கழிக்கும் உறவுகளின் உறைவிடமான 'உயிரிழை' அமைப்பை தாயகம் சென்று நேரடியாக பார்வையிட்ட 'தமிழர் வர்த்தக சங்கம் பிரான்ஸ்' நிர்வாக பிரதிநிதிகள் அங்கு வாழும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள 250 பயனாளிகளுக்கு ஒரு சிறு ஒளியை ஏற்றும் நோக்கில் திட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.
ஓவ்வொருவரின் வங்கி கணக்கிலும் நிரந்தர வைப்பாக தலா ஐந்து லட்சம் இலங்கை ரூபாய்களை வைப்பில் இட்டு, அதன் மாதாந்த வரவை வாழ்க்கைச் செலவுக்குப் பயன்படுத்த வழிசெயவதே அவர்களின் அந்த அடிப்படை திட்டமாகும். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மனவுழைச்சலை சிறிதளவேனும் ஆற்றுப்படுத்த முடியும் என்பதே 'தமிழர் வர்த்தக சங்கம் பிரான்ஸ் நிர்வாகத்தின் நம்பிக்கையாகும்.
குறித்த மனிதநேய செயல் திட்டத்தினை வர்த்தகர்களோடு சேர்ந்து வளர்க்க பொதுமக்களுக்கு வழி செய்யும் நோக்கிலும், தங்கள் செயல்பாடுகள் குறித்து மக்கள் அறிந்திருக்க வேண்டும் எனும் போக்கிலும். மக்களோடு அன்றாடம் பேசும் ஊடகங்களின் உதவியை நாடியே, மேற்குறிப்பிட்ட ஊடகர்கள் சந்திப்பு நடாத்தப்பட்டது.
Restaurant Best Of India உணவகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'ஒப்பனை இல்லாத உண்மைக்கான' ஊடகர்கள் சந்திப்பில் ஊடகர்களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு 'தமிழர் வர்த்தக சங்கம் பிரான்ஸ்' நிர்வாக பிரதிநிதிகள் துல்லியமான விடைகளை அளித்தனர். இது ஒரு நெஞ்சுக்கு நெருக்கமான செயல்த் திட்டம் என்பதால் உணர்வு பூர்வமான கலந்துரையாடல் ஆகவும் ஊடகர்கள் சந்திப்பு அமைந்திருந்தது.