இந்தியன் மகளிர் பிரீமியர் லீக்- கோப்பையை தட்டித் தூக்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு!
18 பங்குனி 2024 திங்கள் 08:31 | பார்வைகள் : 2605
இந்தியன் மகளிர் பிரீமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
டெல்லி, அருண் ஜெட்லி மைதானத்தில் 17.03.2024 நடைபெற்ற மகளிர் பிரீமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின.
இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஷஃபாலி வர்மா(Shafali Verma) மற்றும் லேனிங்(Lanning) சிறப்பான தொடக்கத்தை வழங்கினர்.
ஷஃபாலி வர்மா 27 பந்துகளில் 44 ஓட்டங்கள் குவித்தார், லேனிங் 23 பந்துகளில் 23 ஓட்டங்கள் குவித்தார்.
ஆனால், பின்னர் வந்த வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறியதால் டெல்லி அணி பெரும் தடுமாற்றத்தை சந்தித்தது.
இதனால் 18.3 ஓவர்கள் முடிவிலேயே 10 விக்கெட்டுகளையும் இழந்து டெல்லி அணி 113 ஓட்டங்களை மட்டுமே குவித்தது.
இதையடுத்து கோப்பை கனவுடன் இரண்டாவது பேட்டிங்கில் களமிறங்கிய பெங்களூரு அணி ஆரம்பம் முதலே பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
கேப்டன் ஸ்மிருதி மந்தனா(Smriti Mandhana) 39 பந்துகளில் 31 ஓட்டங்கள் குவித்தார்.
மற்றொரு தொடக்க வீராங்கனையான சோஃபி டெவின்(Sophie Devine) 27 பந்துகளில் 32 ஓட்டங்கள் குவித்தார்.
பொறுப்புடன் விளையாடிய எல்லிஸ் பெர்ரி(Ellyse Perry) கடைசி வரை ஆட்டமிழக்காமல் 35 ஓட்டங்கள் குவித்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.
இறுதியில் 19.3 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி இலக்கான 115 ஓட்டங்களை எடுத்தது.
அத்துடன் 2024ம் ஆண்டுக்கான இந்தியன் மகளிர் பிரீமியர் லீக் தொடரின் கோப்பையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.