சிறுவர் உரிமைகளும் இலங்கை எதிர்கொள்ளும் சவால்களும்
18 பங்குனி 2024 திங்கள் 08:39 | பார்வைகள் : 2072
உலகளாவிய சிறுவர்கள் தினம் வருடந்தோறும் நவம்பர் மாதம் 20ஆம் திகதி கொண்டாடப்படுகிறது. இது “சிறுவர்களை அனைத்து விதமான துஷ்பிரயோகங்களிலிருந்து பாதுகாப்பதன் ஊடாக அவர்களின் உரிமைகளையும் நலன்களையும் மேம்படுத்த முடியும்” என்ற நோக்கத்தை அடிப்படையாக கொண்ட வெவ்வேறு தனித்துவமான தொனிப்பொருளோடு கொண்டாடப்படுகிறது.
கடந்த வருட தொனிப்பொருளானது “For every child, every right”. அதாவது சகல சிறுவர்களும் சகல உரிமைகளையும் கொண்டுள்ள அதேவேளை அவற்றை அனுபவிக்கவும் தகுதி உடையவர்கள்.
ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச ஒற்றுமை, உலகளாவிய ரீதியில் சிறுவர்களுக்கு இடையில் பரஸ்பரத் தன்மையை ஏற்படுத்தல், சிறுவர்களின் நலனை மேம்படுத்தல் போன்ற நோக்கங்களை அடிப்படையாக கொண்டு 1954ஆம் ஆண்டு உலகளாவிய சிறுவர்கள் தினத்தை நவம்பர் மாதம் 20ஆம் திகதி கொண்டாட தீர்மானித்தது.
ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை 1959ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20ஆம் திகதி சிறுவர் உரிமைகள் பிரகடனத்தை ஏற்றுக்கொண்ட அதேவேளை 1989ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20ஆம் திகதி ஐக்கிய நாடுகளின் சிறுவர் உரிமைகள் சமவாயத்தையும் ஏற்றுக்கொண்டது.
எனவே நவம்பர் மாதம் 20ஆம் திகதி சிறுவர் உரிமைகள் சார்ந்த பல்வேறு அம்சங்கள் நிகழ்ந்த முக்கிய நாளாக கருதப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் உரிமைகள் சமவாயம், சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மனித உரிமைகள் பிரகடனம். இது சிறுவர்களின் குடியியல், அரசியல், பொருளாதார, பண்பாட்டு உரிமைகளை உறுதி செய்கிறது.
இலங்கை அரசு 1990ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சிறுவர் உரிமைகள் சமவாயத்தில் கையொப்பமிட்டு இதனை 1991ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் திகதியில் இருந்து நடைமுறைப்படுத்த தொடங்கியது.
சிறுவர் என்பதற்கு வேறுபட்ட வரைவிலக்கணங்கள் இருந்தாலும் ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் உரிமைகள் சமவாயத்தில் சொல்லப்பட்ட “18 வயதுக்கு குறைந்த சகலரும் சிறுவர்கள்’’ என்ற வரைவிலக்கணமானது எல்லா அங்கத்துவ நாடுகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
ஐக்கிய நாடுகள் சிறுவர் உரிமைகள் பிரகடனத்தில் 54 உறுப்புரைகள் காணப்படுகின்றன. இவற்றில் 2ஆம் உறுப்புரை தொடக்கம் 42ஆவது வரையான 41 உறுப்புரைகள் சிறுவர் உரிமைகளை நேரடியாக வலியுறுத்துகிறது. குறிப்பாக, உயிர் வாழ்வதற்கான உரிமை, பாதுகாப்பதற்கான உரிமை, பங்குபற்றுவதற்கான உரிமை, அபிவிருத்தி அடைவதற்கான உரிமை போன்றவை பிரதான தூண்களாகும்.
உயிர் வாழும் உரிமையில் ஊட்டச்சத்து, உடை, உணவு, உறையுள் போன்றவற்றை பெற்று வாழ்வதற்கான உரிமை, தேசிய அடையாளம் போன்றவை உள்ளடங்கும்.
அபிவிருத்தி அடைவதற்கான உரிமை என்பதில் கல்வி கற்றல், ஆரம்ப குழந்தைப் பருவத்தில் பராமரிப்பும் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருத்தல், சமூகப் பாதுகாப்பு, ஓய்வு மற்றும் பொழுதுபோக்கு, கலாசார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான உரிமை போன்றவை சுட்டிக்காட்டுகின்றன.
பாதுகாப்புக்கான உரிமை சுரண்டல்கள், கொடுமைகள் மற்றும் துஷ்பிரயோகங்களிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்கான உரிமை, மனிதத் தன்மையற்ற முறையில் கீழ்த்தரமாக நடத்துதல், புறக்கணித்தல் ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பு பெறுதல், நெருக்கடி காலம், போர், உடல் ஊனமுற்ற நிலை ஆகிய சமயங்களில் பாதுகாப்பு பெறுதல் போன்றவற்றை உள்ளடக்குகிறது.
பங்கேற்பதற்கான உரிமையில் சிறுவர்களின் அபிப்பிராயங்களுக்கு மதிப்பளித்தல், கருத்து வெளியிடும் உரிமை, தகவல்கள் பெறும் உரிமை, விரும்பிய மதத்தை பின்பற்றும் உரிமை போன்றவை அடங்கும்.
அபிவிருத்தி அடைவதற்கான உரிமையில் பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகள் உள்ளடங்கும். இவை, ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் உரிமைகள் சமவாயத்தின் பிரிவு 4இல் குறிப்பிடப்பட்டுள்ளன.
குறிப்பாக 19ஆவது உறுப்புரை அரசு சிறுவர்களை வன்முறை, துஷ்பிரயோகம், புறக்கணிப்பு என்பவற்றிலிருந்தும் 34ஆவது உறுப்புரை சிறுவர்களை பாலியல் சுரண்டல், துஷ்பிரயோகம் போன்றவற்றிலிருந்தும் 35ஆவது உறுப்புரை சிறுவர்களை கடத்தலில் இருந்தும் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்துகிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் உரிமைகள் சமவாயத்தில் சொல்லப்பட்ட விடயங்களுக்கு மேலதிகமாக, உலகளவில் சிறுவர்கள் மீதான துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டலைத் தடுக்கவும் சிறுவர்களின் பாதுகாப்பை அதிகரிக்கவும் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை மூன்று சிறுவர் உரிமை விருப்பு நெறிமுறைகளை (Optional protocols) ஏற்றுக்கொண்டு அங்கீகரித்தது. அவையாவன :
ஆயுத மோதலில் சிறுவர்களை ஈடுபடுத்துவதற்கான விருப்பு நெறிமுறை (Optional Protocol on the Involvement of Children in Armed Conflict), சிறுவர் விற்பனை, சிறுவர் விபச்சாரம் மற்றும் சிறுவர் ஆபாச காட்சிகளுக்கு எதிரான விருப்பு நெறிமுறை (Optional Protocol on the Sale of Children, Child Prostitution and Child Pornography) மற்றும் தகவல் தொடர்பு நடைமுறையில் விருப்பு நெறிமுறை (Optional Protocol on a Communications Procedure).
இலங்கை 2000ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21ஆம் திகதி ஆயுத மோதலில் சிறுவர்களை ஈடுபடுத்துவதற்கான விருப்பு நெறிமுறை, சிறுவர் விற்பனை, கடத்தல், சிறுவர் விபச்சாரம் மற்றும் சிறுவர் ஆபாச காட்சிகளுக்கு எதிரான நெறிமுறை போன்றவற்றில் கையொப்பமிட்டது. ஆயினும், இதுவரையிலும் தகவல் தொடர்பு விருப்பு நெறிமுறையை இலங்கை அங்கீகரிக்கவில்லை.
ஆயுத மோதலில் சிறுவர்களை ஈடுபடுத்துவதற்கான விருப்பு நெறிமுறையினை பின்பற்றுவதில் உள்ள சிக்கல்கள்
இலங்கையில் சிறுவர்கள் உள்நாட்டு யுத்தத்தில் ஈடுபடுத்தப்பட்டதன் விளைவாக சிறுவர்களின் பாதுகாப்புக்கும் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டது. இதன் காரணமாக சிறுவர்கள் கல்வி, சுகாதாரம், போசாக்கு என்பவற்றை இழந்தனர். யுத்தத்துக்கு உள்வாங்கப்படாத சிறுவர்களும் பாதிக்கப்பட்டனர். ஆட்சேர்ப்புக்களில் வறிய குடும்பங்களில் உள்ள சிறுவர்கள் பெரும்பாலும் உள்வாங்கப்பட்டனர். எனவே இலங்கை இவ்விருப்பு நெறிமுறையினை பின்பற்றுவதில் சவாலை எதிர்கொண்டு வருகின்றது.
சிறுவர் விற்பனை, சிறுவர் விபச்சாரம் மற்றும் சிறுவர் ஆபாச காட்சிகள் போன்றவற்றுக்கு எதிரான விருப்பு நெறிமுறையில் போதியளவு கரிசணை கொள்ளாமை யுனிசெஃபின் மதிப்பீட்டின்படி, இலங்கையில் உள்ள 40,000 சிறுவர் பாலியல் தொழிலாளர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஆண் பிள்ளைகள். எமது அரசு சிறுவர் உரிமைகள் சார்ந்த விடயங்களில் பல்வேறு தேசிய, சர்வதேச அமைப்புகளில் பங்கு வகித்தாலும் சிறுவர்களுக்கு போதுமான பாதுகாப்பை வழங்குதல் மற்றும் சிறுவர்கள் தங்களுடைய உரிமைகளை முழுமையாக அனுபவிக்க பொருத்தமான சூழலை உருவாக்குதல் போன்றவற்றில் பின்னடைவை சந்தித்து வருகிறது.
சிறுவர் தொழிலாளர்கள் (Child labour)
ஐக்கிய நாடுகள் சிறுவர் உரிமைகள் சமவாயம், சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் கட்டளை சட்டம் போன்றன 16 வயதுக்கு குறைந்த எவரும் தொழிலுக்கு அமர்த்துவது குற்றம் என வலியுறுத்துகிறது. ஆனால், இலங்கையில் 16 வயதுக்கு குறைந்த சிறுவர்கள் குடும்ப வறுமை நிலை காரணமாக பெற்றோர்களால் தொழிலுக்கு அமர்த்தப்படுகிறார்கள். இதனால் உடல், உள, சமூக ரீதியான பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றார்கள்.
உலக தொழிலாளர் தாபனத்தின் 2016ஆம் ஆண்டு அறிக்கையின்படி, இலங்கையில் 4,571,442 சிறுவர்கள் இருப்பதாகவும் அவர்களுள் 43,714 பேர் சிறுவர் தொழிலாளர்கள் எனவும் சுட்டிக்காட்டுகிறது.
இலங்கையில் சிறுவர் தொழிலாளர் முறையை ஒழிக்க பல்வேறு சட்ட ரீதியான ஏற்பாடுகள் இருந்தாலும், சிறுவர்களின் உரிமைகளை பாதுகாப்பது தொடர்பில் வலுத்தன்மை குறைவாகவே உள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் உரிமைகள் சமவாயத்தின் 32ஆவது உறுப்புரையை செயற்படுத்துவதில் குறைபாடு உள்ளது. இந்த உறுப்புரையில் சிறுவர்கள் தொழில் சேர்வதற்கான குறைந்தபட்ச வயது வரையறையை 16 என குறிப்பிட்டாலும் 16 வயதுக்கு குறைந்த சிறுவர்கள் தொழிலுக்கு அமர்த்தப்படுதல் அதிகரித்துக்கொண்டே வருகின்றது.
ஐக்கிய நாடுகள் சிறுவர் உரிமைகள் சமவாயத்தை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை எதிர்நோக்குகின்ற குறைபாடுகளும் சிக்கல்களும்
தேசிய கொள்கையில் குறைபாடுகள் காணப்படுகின்றமை
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை 1998ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டாலும் ஆரம்ப காலப்பகுதியில் அமைச்சரவை கொள்கையின் செயல்பாட்டு பகுதி நேரடியாக பொறுப்பான அதிகாரிக்கு ஒதுக்கப்படாததால், கொள்கை உருவாக்கம் தாமதமானது.
தேசிய சிறுவர் பாதுகாப்பு சபையின் தலைவர் பதவியில் உள்ள அதிகாரிகள் அவ்வப்போது மாறி மர்றி வருவதால் ஏற்கனவே இருக்கும் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதிலும் முன்னோக்கி கொண்டு செல்வதிலும் சிக்கல் நிலை ஏற்பட்டது.
கொள்கை உருவாக்குவதில் தாமதம் காரணமாக சட்ட, நிர்வாக அல்லது பிற திருத்தங்களுக்கு தேவையான பரிந்துரைகள் செய்யப்படவில்லை. எனவே சிறுவர் பாதுகாப்புக்கு பொருத்தமான கொள்கைகள் உருவாக்குவதில் சிக்கல் உள்ளது.
நன்னடத்தை மற்றும் சிறுவர் பாராமரிப்பு திணைக்களத்தின் கீழ் சிறுவர் உரிமை மேம்பாட்டு அதிகாரிகளின் நியமனங்களின் போதும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் கீழ் நியமிக்கப்படும் சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகளின் நியமனங்களின் போதும் பிரதேச மொழிகளில் தேர்ச்சியில்லாத அதிகாரிகளை நியமித்தல்.
உதாரணமாக, தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களுக்கு தமிழ் மொழி தெரியாத அதிகாரிகளை நியமிக்கின்ற சந்தர்ப்பங்களில் தொடர்பாடல் ரீதியான சிக்கல்கள் ஏற்படுகின்றன.
சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான தேசிய தரவுத்தளம் இல்லாமை
சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான தேசிய தரவுத்தளத்தை தயாரித்தல் மற்றும் பராமரிப்பது 1998ஆம் ஆண்டின் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை சட்டம் இல. 50இன் கீழ் ஒரு முக்கிய செயற்பாடாகும். அது இயற்றப்பட்டு சில தசாப்தங்கள் கடந்துவிட்ட போதிலும், சிறுவர் துஷ்பிரயோகத்தில் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் தொடர்பாக தரவுத்தளம் மாத்திரமே உள்ளது.
குற்றவாளிகள் பற்றிய தகவல்களை பதிவு செய்யும் தரவுத்தளம் இன்னும் உருவாக்கப்படவில்லை. இது தொடர்பாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை போதுமான கவனம் செலுத்தவில்லை.
முறைப்பாடுகள் மற்றும் வழக்குகள் எந்த முன்னேற்றமும் இல்லாமல் முடங்கியுள்ளமை
சிறுவர் துஷ்பிரயோகத்துக்கு ஆளான சிறுவர்கள் தொடர்பான நீதிமன்ற வழக்குகள் சிறுவர் வயது எல்லைக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் தீர்க்கப்படாமல் இருக்கிறது. இதனால் பல வருடங்களாக நிலுவையில் இருக்கின்ற பெரும்பாலான வழக்குகளில் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் சிறுவர் பராயத்தை கடந்த பிறகு விசாரணைக்கு கொண்டு வருவது பயனற்றதாக அமைகிறது. இது அவர்களின் வாழ்க்கையில் உள, சமூக ரீதியான பாதிப்புக்களை ஏற்படுத்துகிறது.
பெரும்பாலான குற்றவாளிகள் அரசியல், பொருளாதார செல்வாக்கினை பயன்படுத்தி தண்டனைகளில் இருந்து தப்பித்துக்கொள்ளும் வாய்ப்புக்கள் அதிகமாக இருப்பதோடு துஷ்பிரயோகத்துக்கு ஆளான சிறுவர்களையும் அவர்களின் குடும்பங்களையும் பலியெடுக்கும் நிலையும் உள்ளது.
உரிய காலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படாத நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம் ஆகும். (Justice delayed is Justice denied) தாமதமாக வழங்கப்படுகின்ற தீர்ப்புக்களால் 15 தொடக்கம் 20 வயதுக்கு இடையில் பாலியல் துஷ்பிரயோகத்தினால் பாதிக்கப்பட்டோரின் வாழ்க்கை கேள்விக்குறியாகின்ற நிலை காணப்படுகிறது.
தன்னார்வ சுற்றுலாத்துறையில் போதியளவான கட்டுப்பாட்டு பொறிமுறைகள் மற்றும் வழிகாட்டல்கள் இல்லாமை
இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகள் சிறுவர்களை பாலியல் சுரண்டலுக்கு உள்ளாக்குகின்ற நிலைமை காணப்படுகிறது. இதில் வெகுவாக ஆண்பிள்ளைகள் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகின்றனர். சுற்றுலாப்பயணிகள் தங்களுடைய ஓய்வு காலங்களை கழிக்க வரும்போது இலங்கையின் அம்சங்களையும் ரம்யமான சூழலையும் அனுபவிக்கின்ற அதேவேளை தனது பயண காலத்தின் ஒரு பகுதியை சமூக அபிவருத்திக்காகவும் சிறுவர் நலனுக்காகவும் பயன்படுத்த முன்வருகின்றனர்.
இவர்கள் தன்னார்வ தொண்டு சேவைகளில் ஈடுபட சிறுவர் பராமரிப்பு நிலையங்கள், சிறுவர் இல்லங்கள் போன்றவற்றுக்கு சென்று சிறுவர்களுக்கு உதவுகின்றனர்.
இச்சந்தர்ப்பங்களில் சிறுவர்கள் துஷ்பிரயோகங்களுக்கு முகங்கொடுக்கின்ற வாய்ப்புக்கள் அதிகமாக காணப்படுகின்றன. எனவே, தன்னார்வ சுற்றுலாத்துறையை மேற்பார்வை செய்ய கட்டுப்பாடுகளை கொண்ட வழிகாட்டல்கள் தேவையானதாகும். இது தொடர்பாக இலங்கை அரசு போதுமான கவனம் செலுத்தவில்லை.
அதிக வறுமை
சிறுவர் உரிமைகளை பாதுகாக்க முடியாமைக்கு வறுமையும் பிரதான காரணமாக அமைகிறது. கிராமபுற, தோட்டப்புற பகுதிகளில் சிறுவர்கள் முறையான கல்வி, சுகாதாரம், மருத்துவம், போசாக்கு போன்றவற்றை பெற்றுக்கொள்ள பொருளாதார தாழ்வுகள் பங்குவகிப்பதோடு சிறுவர்கள் மீதான துஷ்பிரயோகம், சுரண்டல் என்பவற்றுக்கும் இது துணைபுரிகிறது.
சிறுவர் உரிமைகளையும் பாதுகாப்பையும் செயற்படுத்த இலங்கை பின்வரும் விடயங்களில் கவனம் செலுத்தலாம்.
• சிறுவர் உரிமைகள், சிறுவர் பாதுகாப்பு என்பன தொடர்பாக விழிப்புணர்வு வேலைத்திட்டங்களை சர்வதேச தரத்திற்கு விரிவுப்படுத்தல்.
• சிறுவர் கழகங்களை செயல் திறன் மிக்கதாக மாற்றி சிறுவர்கள் பங்கேற்பதை உறுதிசெய்தல். இதன் மூலமாக சிறுவர்கள் தமது பிரச்சினைகளை தாமாக வெளிப்படுத்தும் திறனையும் வாய்ப்பையும் ஏற்படுத்தல்.
• நேரலையில் இடம்பெறும் பாலியல் வன்முறைகளை தடுக்க உரிய பாதுகாப்பு பிரிவை உருவாக்குதல்.
• ஆசிரியர்களுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் சிறுவர் உரிமைகள், சிறுவர் பாதுகாப்பு தொடர்பான வேலைத்திட்டங்களை அமுல்படுத்தல்.
• சுற்றுலாத்துறையில் தன்னார்வத் தொண்டு தொடர்பான மேற்பார்வை, கட்டுப்பாடுகள் மற்றும் வழிகாட்டல்களை அறிமுகப்படுத்தல்.
• பாலியல் கல்வியின் முக்கியத்துவத்தை பிள்ளைகள், பெற்றோர்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் முறைகளை அறிமுகப்படுத்தல்.
• வறுமையான குடும்பங்களுக்கு அரசாங்கம் பொருளாதார உதவித்திட்டங்களை வழங்குதல். இதன் மூலமாக சிறுவர் தொழிலாளர் எண்ணிக்கையை குறைத்தல்.
• சிறுவர் துஷ்பிரயோக குற்றவாளிகள் தொடர்பான தரவுகளை கொண்ட தரவு தளத்தை உருவாக்குதல்.
• சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவோருக்கு எதிரான சட்டம் மற்றும் தண்டனையை வலுப்படுத்தல்.
• சிறுவர் உரிமைகள் சார்ந்த அரச சார்பற்ற நிறுவனங்களோடு ஒன்றிணைந்து தேவையான கொள்கைகள் மற்றும் வழிகாட்டல்களை உருவாக்கி நடைமுறைப்படுத்தல்.
சிறுவர்கள் துஷ்பிரயோகங்களுக்கும் சுரண்டலுக்கும் முகங்கொடுத்து வருகின்றமையானது ஒரு நாட்டினுடைய நலனுக்கு சவால் விடுவதாகும். நாம் அனைவரும் இணைந்து செயற்பட்டு சிறுவர் துஷ்பிரயோகத்தை இல்லாதொழித்து சிறுவர்களின் உரிமைகளை வலுப்படுத்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்.
ஜோதிவேல் நவநீதன்,
(திட்ட உத்தியோகத்தர் - ‘எங்குமுள்ள சிறுவர்களையும் சூழலையும் பாதுகாக்கும் அமைப்பு - PEaCE)
நன்றி வீரகேசரி